முகத்துதி
தகுதிக்கு மீறி ஒரு ஒருரை உள்நோக்கத்தோடு புகழ்வது
(முகஸ்துதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முகத்துதி அல்லது இச்சகம் (Flattery) என்பது ஒருவரை அவரின் தகுதிக்குமீறி புகழ்வது ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- அநேகமாகப் பிரமுகர்களைப் புகழ்வது அவர்களுடன் பழக்கம் உண்டு என்று காட்டிக் கொள்வதற்காகவே. -லா புரூயர்[1]
- இல்லாத குணங்களைக் கூறி வேந்தர்களைப் புகழ்வது தண்டனைக்கு ஆளாகாமல் அவர்களைப் பழிக்கும் முறையாகும். - ரோஷிவக்கல்டு[1]
- மூடன் தனக்கே முகஸ்துதி செய்துகொள்வான். அறிஞனோ மூடனுக்கே முகஸ்துதி செய்வான். -புல்வெல்[1]
- அன்பு செய்ய முடியாவிட்டால் முகஸ்துதியேனும் செய்யக் கற்றுக் கொள். அதுவுமில்லையானால் அபஜெயம்தான். -கதே[1]
- ஐயனே அந்தப் பாழாய்ப்போன துதி மோகத்தை என் நெஞ்சிலிருந்து நீக்கிவிடும். -போப்[1]
- எவ்வளவுதான் மறைத்து வைத்தாலும் எல்லோருடைய நெஞ்சிலும் புகழ் ஆசை எப்பொழுதும் ஆட்சிசெய்து கொண்டேதான் இருக்கிறது. - யங்[1]
- தங்கத்தால் வாங்க முடியாததைத் தருகிறேன். அதுதான் உண்மை கூறும் கவிஞனுடைய புகழுரை. -பர்ன்ஸ்[1]
- அநேகர் தம்மைப் பிறர் புகழவேண்டும் என்பதற்காகவே தம்மை இழிவாகக் கூறிக்கொள்கிறார்கள். -ரோஷிவக்கல்டு[1]
- அனைவரையும் ஒன்றுபோல் புகழ்வது யாரையும் புகழாதிருப்பதே யாகும் -கே[1]
- சிறு பொறியேயாயினும் துருத்திகொண்டு ஊதினால் பெருநெருப்பாவதுபோல் சிறிய தீமை செய்தவனேயாயினும் முகஸ்துதி பெறப் பெற அதிகக் கொடியவன் ஆகிவிடுகின்றான். -ஷேக்ஸ்பியர்[1]
- ஆண்மகனை ஏதேனும் ஒருவித முகஸ்துதியால் மட்டும் வசப்படுத்தலாம். ஆனால் பெண்மகளையோ எந்த வித முகஸ்துதியாலும் வசப்படுத்திவிட முடியும். -செஸ்ட்டர்பீல்டு[1]
- முட்டாளை அறிஞன் என்றும், பொய்யனை யோக்கியன் என்றும் துதித்து விட்டால் அப்புறம் அவன் உன் அடிமையே ஆகிவிடுவான். -பீல்டிங்[1]
- முகஸ்துதியை முட்டாள்களின் உணவு என்று கூறுவர். ஆனால், அறிஞரும் சில சமயங்களில் அதில் சிறிது உண்பதுண்டு. -ஸ்விப்ட்[1]
- முகஸ்துதி என்பது பரஸ்பரம் நடக்கும் ஒரு இழிதொழில். ஒருவரையொருவர் ஏமாற்ற விரும்பினாலும் ஒருவரும் ஏமாந்து போவதில்லை. -கோல்ட்டன்[1]
- உண்மையான நண்பன் முகஸ்துதி செய்தால் அதைப் போன்ற அசம்பாவிதம் காண முடியாது. -போர்டு[1]
- குணங்களை முன்னால் கூறாமலும் குறைகளைப் புறத்தே கூறாமலும் இருந்து விட்டால் முகஸ்துதியும் அவதூறும் உலகில் இருக்கமாட்டா. -பிஷப் ஹார்ன்[1]
- முகஸ்துதி என்னும் கள்ளநாணயம் தற்பெருமை இருப்பதாலேயே செலாவணியாகின்றது. -ரோஷிவக்கல்டு[1]
- நாம் முகஸ்துதியை வெறுப்பதாகச் சில சமயங்களில் எண்ணிக் கொள்கிறோம். ஆனால், நாம் உண்மையில் வெறுப்பது நம்மைப் பிறர் முகஸ்துதி செய்யும் விதத்தையே. -ரோஷிவக்கல்டு[1]
- புகழில் பேராசையுடைமை புகழுக்குத் தகுதியில்லை என்பதையே காட்டும். -ப்ளூட்டார்க்[1]
- தகுதியில்லாப் புகழுரை மாறுவேஷம் பூண்ட பழியேயாகும். - போப்[1]
- புகழுரையின் மதிப்பு அதை உரைப்போன் கையாளும் முறையைப் பொறுத்ததாகும். ஒருவன் கூறினால் புகழுரையாகத் தோன்றுவது மற்றொருவன் கூறும் பொழுது இகழுரையாகத் தோன்றும். -மாஸன்[1]
- இகழ்வதற்கு வேண்டிய அறிவைவிட அதிகமான அறிவு, சரியான முறையில் புகழ்வதற்கு வேண்டியதாகும். -டிலட்ஸன்
- மனமுவந்து புகழாதவர் மட்டமான அறிவுடையவர் ஆவர். -வாவனார்கூஸ்[1]
- முகத்துதியாகப் பேசுவோரிடம் இருப்பதைவிடக் காகங்களிடையே வீழ்ந்து கிடக்கலாம்; அவை பிணங்களை மட்டுமே கொத்தும். இவர்களோ உயிருள்ளவர்களையே கொத்துகிறார்கள். - ஆன்டிஸ்தினிஸ்[2]
- முகத்துதி செய்வது ஒழுக்கத்திற்குச் சாவுமணி, மனித சமுதாயத்தின் இச்சகம் பேசுபவனே ஆகத் தாழ்ந்தவன். அவனிலும் தாழ்ந்தவன் அவன் பேச்சைக் கேட்பவன். -எச். மூர்[2]
- வன விலங்குகளிலே கொடுங்கோலனிடமிருந்தும், பழக்கப்பட்ட விலங்குகளிலே வீண் புகழ்ச்சி பேசுபவனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுங்கள். - பென் ஜான்ஸன்[2]
- இச்சகம் பேசுவோருடைய தொழில்முறை என்னவென்றால், பெரியோர்களுடைய குறைகளைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களுடைய தவறுகளைப் _ பெருக்கி வளர்த்தல். அவர்களுக்கு மனம் நோவும்படி யோசனை சொல்லவேமாட்டார்கள். - மோலியர்[2]
- முகஸ்துதி செய்பவர்களை நம்பவே கூடாது. -நிக்கோலோ மாக்கியவெல்லி<[3]
- முகஸ்துதி மனிதரை அறிவிழக்கச் செய்து விடுகிறது. இந்த முகஸ்துதியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் சிலர் அலட்சியவாதிகளாக நடந்து கொள்கிறார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[3]
குறிப்புகள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/முகஸ்துதி. நூல் 92- 95. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 99. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 3.0 3.1 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.