செல்வம்
செல்வத்தை பற்றி மேற்கோள்கள்.
- தாமரையின் காதலனான சூரியன் தடாகத்தில் தண்ணீர் இல்லாத போது அத்தாமரைக்கே பகைவனாகி விடுகிறான். எவரிடம் செல்வம் இல்லையோ அவருக்கு நண்பர்கள் ஏற்படுவதில்லை. **நஹீம்
- தங்கக் கட்டாரியைப் பெற்று யாவரும் வயிற்றில் குத்திக்கொள்ள மாடார்கள். மனம் எவ்வளவு விரும்பினாலும் அநியாயத்தாலும், தகாத வழியாலும் செல்வத்தைத் தேடாதே. கட்டாரி கட்டாரியே. அநியாயம் அநியாயமே. அதனால் பெறும் செல்வத்தால் நலம் விளைவதில்லை. **கவி விருந்தா
- பொருளுக்கு மனிதன் அடிமை. பொருள் யாருக்கும் அடிமையில்லை.**வடமொழிக் கவிஞர்
- செல்வச் செருக்கர்கள் தங்களுடைய உடைமையை மர்ருமல்ல , உள்ளத்தையும் கூட அடமானம் வைக்கத்தயங்க மாட்டார்கள்.**மார்க்ஸிம் கார்க்கி
- அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை;பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை.**திருவள்ளுவர்
- செல்வனாய் இருப்பதிலும் பார்க்கச் செல்வனாய் வாழ்வதே மேல்.**சாமுவேல் ஜான்சன்.
- குழந்தை இல்லாதவனுக்கு இல்லம் சூனியம்; உறவினர் இல்லாதவர்களுக்குத் திசைகள் அனைத்தும் சூனியம்; அறிவற்றவனுக்கு உள்ளம் சூனியம்; வறுமை உடையவர்களுக்கு அனைத்துமே சூனியம் (வெறுமை)**ஒரு வடமொழிக்கவிஞர்
- ஓடம் போவதற்கு நீர் தேவையே. நீர் இன்றி ஓடம் இல்லை. ஆனால் ஓடத்திற்கு ஆதாரமான் நீர் ஓடத்திற்கு வெளியே இருக்கவேண்டுமேயன்றி உள்ளே அன்று. சமூகத்தின் செல்வமும் இத்தகையதே. செல்வம் ஒவ்வொரு வீட்டின் உள்ளே தங்கி விடாமல் சமூக ஓடத்திற்கு வெளியில் அது மிதப்பதற்கு ஆதாரமாய் அமையவேண்டும்.
- நம்மிடமுள்ள செல்வத்தை அடுத்தவனுக்கு உதைத்துத் தள்ள வேண்டும். அவர் மற்றொருவரிடம் உதைத்து விட வேண்டும். கால் பந்தைப் போல செல்வம் எப்பொழுது மாறி மாறி அனுப்பப்படுகிறதோ அப்பொழுது அது பெருகி வளரும்** வினோபாஜி.
- பணத்திற்கு நீ தலைவனாக இருந்தால் அதை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துவாய். அதற்கு நீ அடிமையாக இருந்தால் அது உன்னை தீய செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும்.** ஆப்பிரிக்கப் பாதிரியார்.
- பொருளாசை ஓவியன் ஒருவனைக் கூட உண்டாக்கியதில்லை. ஆனால், அநேகரைக் கெடுத்துள்ளது.** வாஷிங்டன் ஆல்ஸ்டன்
- இன்பம்தான் ஒரு மனிதனுடைய செல்வம்; அறியாமைதான் துயரத்தின் தாய்.** இங்கர்சால்.
- பணமே வாழ்வின் லட்சியமானால் அது தீய வழியிலேயே தேடவும் செலவிடவும் படும். இருவிதத்திலும் வாழ்வு பாழே.-ரஸ்கின்[1]
- கற்றோரும், அறிஞரும், வீரரும் பணத்தை வாழ்வின் லட்சியமாகக் கொள்ளுதல் என்பது ஒருநாளும் முடியாத காரியம் -ரஸ்கின்[1]
- பணத்தைத் தீயவழியில் இழப்பது குற்றம். ஆனால் தீயவழியில் தேடுவது அதைவிடப் பெரிய குற்றம். தீயவழியில் செலவிடுவதோ எல்லாவற்றிலும் பெரிய குற்றம். -ரஸ்கின்[1]
- கடவுள் செல்வத்தை உயர்ந்த பொருளாக மதித்திருந்தால் அதை அயோக்கியர்க்கு அளித்திருக்க மாட்டார்.-ஸ்பிப்ட்[1]
- அதிகமாய்ப் படித்திருந்தால், அநித்தியமான மனிதர்கள் எவ்வளவு அற்ப அறிவு பெற்றிருக்கிறார்கள் என்பது தெரியும். அதிகச் செல்வமிருந்தால், உலகப் பற்றுடைய மக்கள் எவ்வளவுதான் அனுபவிக்க முடியும் என்பது தெரியும். -யங்[2]
- பணத்தை வீணாக அழிப்பதைவிட பணத்தில் பேராசை வைப்பதே மனிதனை நாசமாகச் செய்யும். -கோல்டன்[1]
- பணத்தை மட்டும் தரும் தொழில்களைச் செய்தால், உண்மையில் சோம்பலாயிருத்தல் அல்லது அதற்குங்கீழாயிருத்தலேயாகும். -தோரோ[1]
- நான் கண்டு களிப்பவைகள் எல்லாவற்றிற்கும் நானே அதிபன். என் உரிமையை மறுக்க யாராலும் இயலாது. -தோரோ[1]
- கவிஞன் ஒரு சோலையின் சிறந்த பயன்களை எல்லாம் நுகர்ந்து விடுகிறான். சோலையின் சொந்தக் காரனோ பழங்களையும் மட்டைகளையுமே வீட்டுக்குக் கொண்டு போகிறான். -தோரோ[1]
- தாழ்ந்த விஷயங்களுக்குச சிந்தனையைப் பறிகொடுக்காமலிருப்பதன் மூலம், பணமில்லாமலே பணக்காரனாயிருப்பேன். காலிங்வுட்[1]
- பெருமைப்படுத்திக் கொள்வதற்குச் செல்வத்தில் பிரமாதமாக ஒன்றுமில்லை. -ஆவ்பரி[1]
- செல்வமுள்ளவனா அல்லனா என்று தீர்மானிப்பது எது? தேடுவது எது என்பதன்று, செலவு செய்வது எது என்பதேயாகும். -ஒரு ஞானி[1]
- செல்வம் சன்மார்க்கத்தில் அடையப்படவில்லை என்று அடிக்கடி கேள்விப் படுகிறோம். ஆனால் உண்மையாதெனில் வறுமையும் சன்மார்க்கத்தில் அடையப்படுவது அபூர்வம் என்பதே. -ஆவ்பரி[1]
- நான் சேர்த்ததை இழந்தேன், செலவு செய்ததைப் பெற்றேன், கொடுத்ததை உடையேன். -டெவன்ஷேர்[1]
- பணம் தேடுவது ஒரு பெரிய காரியந்தான். ஆனால், அதைவிடப் பெரிய காரியம் ஒன்று உளது. அது யாதெனில் தேடிய பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதே. -டிஸ்ரேலி[1]
- செல்வத்தை இகழ்பவனுக்குப் போல வேறெவர்க்கும் செல்வம் அவ்வளவு அதிகமாகத் தேவையாயிருப்பதில்லை. -ரிக்டர்[1]
- நான் லட்சுமி தேவியிடம் பிரார்த்திப்பதெல்லாம் நான் செலவு செய்யவேண்டியதை விடச் சிறிது அதிகமாக அளித்தருள வேண்டும் என்பதே. - ஹோம்ஸ்[1]
- தவறான வழியில் லாபம் பெறாதே தவறான வழியில் பெறும் லாபம் நஷ்டமேயாகும். -ஹீலியாட்[1]
- உண்மையான செல்வம் பணமன்று, குணமேயாகும். - ஆவ்பரி[1]
- ஒருவனுக்குத் தன்னைத் தவிர வேறு எது சொந்தம்? அவன் வேறு எதை அனுபவித்து ஆனந்தம் காண முடியும்?--ஆர். எல். ஸ்டீவன்ஸன்[1]
- செல்வனாயிருக்க முதலாவதாக வேண்டியது நிறைந்த உள்ளம்; இரண்டாவதாகவே பொருள். -ஆர். எல். ஸ்டீவன்ஸன்[1]
- எதை உடையவன் என்பதன்று, எத்தகையவன் என்பதே வாழ்வின் பிரதான பிரச்னை. -ஆர். எல். ஸ்டீவன்ஸன்[1]
- நம்பவும் மகிழவும் உள்ள குணமே உண்மையான செல்வம். அஞ்சவும் வருந்தவும் உள்ள குணமே உண்மையான வறுமை.- ஹயூம்[1]
- வேண்டாதிருக்கக் கற்று கொள்வதே உடையவனாயிருப்பதாகும். -ரெக்கார்ட்[1]
- இழிஞன் ஏராளமாய்ப் பணம் படைத்திருப்பது இறைவன் ஒழுங்குமுறைக்கு இழுக்கன்றோ? இம்மியும் இழுக்கன்று. இழிஞன் அந்த லட்சியத்துக்காகவே தன்னை இழிஞன் ஆக்கிக்கொண்டான். அவன் அதற்காகவே ஆரோக்கியம், மனச்சான்று, சுதந்திரம் எல்லாம் இழந்துளான். அவற்றைக் கொடுத்துப் பணம் ல்ாங்கிக் கொண்டதற்காக நாம் பொறாமைப்படலாமோ? -பார்பால்ட்[1]
- பிரபுவர்க்கம் எது? உண்டாக்காமல் உண்பவர், உழையாமல் வாழ்பவர், உத்யோகங்களை வகிக்கத் திறமையின்றி வகிப்பவர், கெளரவங்களைத் தகுதியின்றி அபகரித்துக் கொள்பவர்- இவரே பிரபுக்கள். - ஜெனலல் பாய்[1]
- செல்வத்தை உண்டாக்காமல் நுகர உரிமை கிடையாது. அது போலவே இன்பத்தையும் உண்டாக்காமல் நுகர உரிமை கிடையாது. -பெர்னார்ட்ஷா[1]
- செல்வத்தோடு பிறப்பதில் பெருமை பேசிக் கொள்வதற்கு யாதொன்றும் இல்லாததுபோலவே, சாமர்த்தியத்தோடு பிறப்பதிலும் பெருமை பேசிக் கொள்வதற்கு யாதொன்றும் கிடையாது. செல்வமும் சரி சாமர்த்தியமும் சரி, நன்றாய் உபயோகித்தால் மட்டுமே பெருமை தரும். -ஆவ்பரி[1]
- அறிவிலார் செல்வம் பெற அரும்பாடுபடுவர்; அறிஞர்க்கோ அது மாயவலையாக இல்லாவிடினும் பெரும் பாரமாகவே இருக்கும். -மில்ட்டன்[1]
- செல்வம் வேண்டுமா? செல்வத்திலுள்ள ஆசையை விட்டு விடு. அதுதான் செல்வத்தைப் பெருக்கும் வழி. அகஸ்ட்டைன்[1]
- மண்ணுலகில் மனிதருக்கு வேண்டுவது வெகு சொற்பம். அதுவும் சின்னாட்களுக்கே. - கோல்ட்ஸ்மித்[1]
- செல்வம் என்பது ஆன்மா எரிந்து மிகுந்த சாம்பலே யாகும். -பால் ரிச்சர்ட் துர்[1]
- அதிர்ஷ்டத்தைத் தாங்குவதைவிட அதிர்ஷ்டத்தைத் தாங்குவதே அதிகக் கஷ்டமான காரியம். பால் ரிச்சர்ட் செல்வம் என்பது சாத்தான் மனிதனை அடிமையாக்கும் சாதனம். -பால் ரிச்சர்ட்[1]
- அசத்தியத்தை மறைக்கச் சத்தியத்தை நாடுவதுபோல், அசெளக்கியத்துக்கு வசதி செய்யவே செளக்யத்தைத் தேடுகிறோம். -செஸ்ட்டர்டன்[1]
- தனவந்தன் ஆரோக்கியமாயிருக்க வேண்டுமானால் தரித்திரனைப் போல் வாழவேண்டும். -டெம்பிள்[1]
- ஒருவன் பணத்தைத் தன் தேவைக்கு அதிகமாகத் தேடவும் தனவந்தன் என்ற பெயரோடு சாகவும் விரும்பினால், அது அவனுக்கும் அவன் சந்ததியார்க்கும் சாபமாகவே முடியும். - ரஸ்கின்[1]
- செல்வம் போதுமான அளவாயிருந்தால் உன்னை அது துக்கிச் செல்லும், அதிகமான அளவாய் விட்டால் நீ தான் அதைத் துக்கிச் செல்லவேண்டும். -ஸாதி[1]
- பணம் தேடுவது முட்டாளுக்கு முடியும். ஆனால், அதைச் செலவு செய்வது அறிஞருக்குத்தான் தெரியும். அநேகர் கையிலுள்ள பணம் தீரப்போகும் பொழுதுதான் அதைச் சிக்கனமாகச் செலவு செய்ய ஆரம்பிப்பர். அது போல் தான் அநேகர் நேரத்தைச் செலவு செய்வதிலும். -கதே[1]
- பயனுள்ள முறையில் செல்வாக்கை உபயோகிக்க விரும்புவோன் எதையும் அவமரியாதை செய்யக்கூடாது. தவறானவைகளைக் கண்டு அவன் துயருறக்கூடாது. நன்மையை வளர்ப்பதில் அவன் தன் ஆற்றல்களைப் பயன்படுத்த வேண்டும். அவன் அழிவு வேலையில் இறங்காமல், ஆக்க வேலையில் (புதியன படைப்பதில் ஈடுபட வேண்டும். அவன். ஆலயங்களைக் கட்டி மனித சமூகம் அங்கே வந்து. பரிசுத்தமான இன்பத்தில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும். -கதே[2]
- வேகமாகச் சேர்ந்த செல்வங்கள் குறைந்துவிடும் சிறிது சிறிதாகச் சேர்ந்தவை பெருகும்.-கதே[2]
- தனவந்தனாகச் சாவதைவிடச் சான்றோனாக வாழ்வதே சிறப்பு. -ஜாண்ஸன்[1]
- உள்ளத்தில் லாப ஆசை இருக்கும் வரை கடவுள் ராஜ்யத்தைப் பற்றிய உண்மையான அறிவு உண்டாக முடியாது. -ரஸ்கின்[1]
- சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தையே. -கோல்ட்டன்[1]
- பட்டுப்பூச்சி ஆடி ஓடிக் களிப்பதாகத் தோன்றும். ஆனால், அதே சமயத்தில் அது தன் உதரத்திலிருந்து நூல் நூற்றுத் தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கும். அது போலவே தான் செல்வர்கள் சந்தோஷமாய் வாழ்வதாகத் தோன்றுவதும்.-ஐஸக் வால்டன்[1]
- ஊசித்துவாரத்தில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம். பணக்காரன் மட்டும் ஒருநாளும் கடவுள் ராஜ்யத்துக்குள் நுழைய முடியாது. -விவிலியம்[1]
- அளவுக்கு மிஞ்சியதே அடிமைத்தளையாகும். -பால் ரிச்சர்ட்[1]
- எந்த மனிதனும் யோக்கியமான முறையில் வாழ்வதற்கு வேண்டிய பணத்தைத் தேடமுடியுமே யன்றி ஏராளமான பணத்தைக் குவித்து விட முடியாது. -ரஸ்கின்[1]
- கடலில் நீர் பெருகும் சமயத்தில் சென்றால் நினைத்தயிடம் போய்ச் சேரலாம். அதுபோல வாழ்விலும் தக்க சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டால் லட்சுமியின் அருளைப் பெறலாம். -ஷேக்ஸ்பியர்[1]
- அதிர்ஷ்டதேவதை அதிகமாக அருள் செய்யப்போகும் பொழுது பார்த்தால் அதிக பயங்கரமாகத் தோன்றுவாள்.-ஷேக்ஸ்பியர்[1]
- அருவருப்பான இந்த உலகத்தில் எந்த விஷயத்தைக்காட்டிலும் அதிகமான கொலைகளைத் தங்கம் செய்துள்ளது.விஷங்களைக் காட்டிலும் கொடிய தங்கம் மனிதர்களின் ஆன்மாக்களையே வதைப்பதாகும். -ஷேக்ஸ்பியர்[2]
- அதிர்ஷ்ட தேவதையை நழுவ விட்டுவிட்டால் அவளை மறுபடியும் ஒருநாளும் காண முடியாமற் போய்விடும். -கெளலி[1]
- அதிர்ஷ்டதேவதை அநேகர்க்கு அளவுக்கு அதிகமாக அருள்வதாகக் கூறுவர். ஆனால் அவளோ யார்க்கும் போதுமான அளவுகூட ஒருபொழுதும் அளிப்பதில்லை. -ரஸ்கின்[1]
- பணம் வாழ்வின் லட்சியமாக ஆகிவிட்டால் அது தவறான வழியிலேதான் தேடப்படும்; தவறான வழியிலே தான் செலவழிக்கப்படும். அது தேடும்பொழுதும் செலவு செய்யும்பொழுதும் தீமையே பயக்கும். - ரஸ்கின்[1]
- தேவைக்குப் போதுமான பணமிருந்தும் செல்வன் என்ற பெயருடன் சாக விரும்பிப் பணத்தைத் தேடுபவன் பணத்தையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டவன் ஆவான். -ரஸ்கின்[1]
- எந்த ஒரு தகாத வழியிலும் செல்வத்தைச் சேர்க்க முயலாதீர்கள். நியாயமற்ற, நேர்மையற்ற வழியில் சேரும் பணமும், புகழும் வானத்தில் ஓடும் மேகங்களைப் போன்றவை என்பதை உணர்ந்து நடப்பது நல்லது! -கான்பூசியசு[3]
- செலவுக்குமேல் கூடுதலாக வருவாயுள்ளவன். செல்வன வரவுக்கு மேலே செலவழிப்பவன், ஏழை. -புருயெ[2]
- செல்வம் வாழ்க்கையில் இலட்சியமன்று. அதன் கருவி.- பீச்சர் [2]
- எனது செல்வம் என் உடைகளில் இல்ல்ை என் தேவைகளின் கருக்கத்திலிருக்கிறது. - கே. பிரதர்டன்[2]
- செல்வங்கள் ஓர் அசௌகரியத்தை மட்டும் நீக்குகின்றன. அதுதான் வறுமை. - ஜான்ஸன்[2]
- அகர் என்பவர், "எனக்குச் செல்வங்களைக் கொடுக்க வேண்டாம். வறுமையையும் கொடுக்க வேண்டாம்' என்ற சொன்னார். இதுவே எக்காலத்தும் அறிவாளர்கள் சொல்லக்கூடியது. -கோல்டன்[2]
- செல்வங்களை அனுபவிக்காம்ல் சேர்த்து வைக்கும் மனிதன். தங்கம் சுமந்த கழுதை முட்செடிகளைத் தின்னுவது போலாகும்.[2]
- இறக்கும்போது செல்வனாக இறப்பது கேவலம் என்று பொதுவான உணர்ச்சி ஏற்படும். ஆண்ட்ரூ கார்னிஜி[2]
- இந்த உலகில் நம்மைச் செல்வராக்குவது நாம் விட்டு விடுவதுதான். -பீச்சர்[2]
- உங்கள் செல்வம் எல்லாமே உங்களுடையது என்றால், ஏன் இந்த உலகை விட்டு நீங்கள் செல்லும் போது அவற்றை எடுத்து செல்லக் கூடாது?** பெஞ்சமின் பிராங்கிளின்
- செல்வம் தன்னை வைத்திருப்பவனுக்குச் சொந்தமில்லை. அனுபவிப்பவனுக்கே சொந்தம். -ஃபிராங்களின்[2]
- செல்வத்தை அடையும் வழி, சந்தைக்குச் செல்லும் வழியைப் போல். தெளிவாக உள்ளது. அது முக்கியமாக இரண்டு சொற்களில் அடங்கியுள்ளது. சுறுசுறுப்பு சிக்கனம். - ஃபிராங்க்லின்[2]
- எந்த மனிதனும் பணக்காரனா ஏழையா என்பதைத் தன் கணக்குப் புத்தகத்தைப் பார்த்துச்சொல்ல முடியாது.அவன் எந்த நிலையில் இருக்கிறான் என்பதைப் பொறுத்தது. அவனுடைய செல்வம் என்ன வைத்திருக்கிறான் என்பதைப் பொறுத்ததன்று. -பீச்சர்[2]
- சூரியன் மிக உயரத்திலிருக்கிறது என்பதற்காக நாம் அதை மதிப்பதில்லை. அதன் பயனுக்காக மதிக்கிறோம். அதே போல, செல்வர்களை அவர்களுடைய தானதர்மங்களுக்காக மதிக்கவும். -பெய்லி[2]
- ஏழைகளைக்காட்டிலும் செல்வர்களுக்குரிய தலைசிறந்த இனிய உரிமை யாதெனில்; மற்றவர்களை இன்புறச் செய்தல். அந்த உரிமையைத்தான் அவர்கள் மிகக் குறைவா பயோகிக்கின்றனர். -கோல்டன்[2]
- செல்வங்களை நம் வீடுகளுக்குள் அனுமதிக்கலாம். ஆனால் இதயங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது. அவைகளை நம் உடைமைகளாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், நம் அன்புக்குரியவைகளாக ஆக்கிவிடக்கூடாது. -சார்ரன்[2]
- ஒரு மனிதன் எவ்வளவு வைத்திருக்கிறான் என்பதைக் கண்டு நாம் பொறாமைப்படுகிறோம். அவன் எவ்வளவு அனுபவிக்கிறான் என்பதைக் கண்டால், நாம் அவனுக்கு இரங்கத்தான் வேண்டும். -ஸீட்[2]
- ஒரு பணக்காரன தன் செல்வத்தால் செருக்குற்றிருக்கிறான். அவன் அந்தச் செல்வத்தை எப்படி உபயோகிக்கிறான் என்பது தெரியும்வரை, நாம் அவனைப் புகழக்கூடாது. -சாக்ரடிஸ்[2]
- மிகக் குறைந்ததைக்கொண்டு திருப்தியடையவனே முதன்மையான செல்வன். ஏனெனில், இயற்கையின் செல்வம் திருப்திதான். - சாக்ரடிஸ்[2]
- செல்வங்களில் திளைப்பவர்களுக்கு மற்றவர்களுக்கு எவ்வளவு தேவைகள் இருக்கும் என்பதைக் கண்டுகொள்வதைப் போன்ற் கஷ்டம் வேறில்லை. - ஸ்விஃப்ட்[2]
- வெளியே தெரியாமல் உன்னை மூடிவைக்க முடியாது: உலகமெல்லாம் பார்க்கும்படி மாபெரும் மேடைமீது நீ அமர்ந்திருக்கிறாய். உன் செயல்கள் நேர்மையாகவும் பரோபகாரமாகவும் இருந்தால், அவை உன் ஆற்றலைப் பெருக்கி. இன்பத்தையும் சேர்க்கும் -சைரஸ்[2]
- இளைஞருக்கு வழி காட்டுதல், ஆற்றலைப் பெருக்குதல், நம்பிக்கை ஊட்டுதல், அணைக்கின்ற கரிக்கங்குகளை ஊதித் தீ மூட்டுதல், புதிய சிந்தனையாலும் உறுதியான செயலாலும் தோல்வியை வெற்றியாக்குதல் - இவையெல்லாம் எளிதான காரியங்களல்ல. இவை தெய்விக மனிதர்களின் வேலையாகும். - எமர்ஸன்[2]
- நாம் நமக்காக மட்டும் வாழ முடியாது. நம் சகோதர மக்களையும் நம்மையும் ஆயிரக்கணக்கான மெல்லிய நூலிழைகள் ஒன்றாகப் பிணைத்துள்ளன. இந்த இழைகளின் வழியாக நம் செயல்கள் அனுதாபத்துடன் காரணங்களாகச் செல்கின்றன. பின்னர் அவை பயன்களாக நம்மிடம் திரும்பி வருகின்றன. - மெல்வில்லி[2]
பழமொழிகள்
தொகு- பணத்தை விட உயர்ந்தவை பலவுள. ஆனால் அவற்றைப் பெறப் பணமே தேவை. -பழமொழி[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 1.25 1.26 1.27 1.28 1.29 1.30 1.31 1.32 1.33 1.34 1.35 1.36 1.37 1.38 1.39 1.40 1.41 1.42 1.43 1.44 1.45 1.46 1.47 1.48 1.49 1.50 1.51 1.52 1.53 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 2.24 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 194-197. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
வெளி இணைப்புகள்
தொகு