அறம் அல்லது ஒழுக்கநெறி (Morality) என்பது ஒருவர் சமூகத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது தொடர்பான பார்வைகளை குறிக்கிறது. இதை நல்லவை, தீயவை என்பன தொடர்பில் ஒரு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகளின் தொகுப்பு எனலாம்.

அறம் குறித்த மேற்கோள்கள் தொகு

  • மனத்தில் குற்றமான நோக்கமே இல்லாமல் செய்கின்ற நல்ல செயல்கள் தான் அறம் அந்த அறம் தன்னலம் உடையதாக இருந்தால், அது வெறும் ஆடம்பரம், அறமன்று - திருக்குறள்
  • அறமே ஆற்றல்! அதை நாம் நம்புவோம்! அந்த நம்பிக்கையால் நாம் அறிந்த கடமைகளைச் செய்யத் துணிக! - ஆப்பிரகாம் லிங்கன்[1]
  • அறத்தின் வழி நில்! அஞ்சவேண்டாம்! உன் லட்சியமெல்லாம் உன் தேசத்தை-உன் கடவுளை - உண்மையைப் பற்றியதாகவே இருக்கட்டும். அங்ஙனமாயின் நீ வீழ்ந்து விட்டாலும் பாக்கியம் பெற்றுத் தியாகியாகவே வீழ்வாய். -வில்லியம் ஷேக்ஸ்பியர்[1]
  • மனிதர் கவனமாய் வடித்து எடுப்பின், தீமையிலும் நன்மை தெளியலாம். வில்லியம் ஷேக்ஸ்பியர்[1]
  • மனத்தைத் தவிர குறையுள்ளது இயற்கையில் வேறு கிடையாது. அன்பில்லாதவரே அங்கவீனர். அறமே அழகு. அழகான மறம் முலாம் பூசிய சூனியப் பேழையாகும். - வில்லியம் ஷேக்ஸ்பியர் [1]
  • மனிதனால் இயல்வதெல்லாம் இயற்றத் துணிவேன்; அதற்கு அதிகம் செய்யத் துணிபவன் மனிதன் அல்லன். -வில்லியம் ஷேக்ஸ்பியர்[1]
  • அறத்தின் இலட்சணம் அறியாதவரே, 'அறம் செய்தோம், கூலி எங்கே?' என்று இரைந்து கொண்டிருப்பர். மாரிஸ் மாட்டர்லிங்க்[1]
  • அதர்மம் அணியும் ஆடை ஐஸ்வரியம்; தர்மம் தரிப்பது தரித்திரம். -தியோக்னீஸ் [1]
  • பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக்கொள்கிறான். -ஸெனீக்கா[1]
  • குளிர் மிகுதிதான். கந்தை உடைதான்! ஆனால் என் ஒழுக்கம் எனக்கு உஷ்ணம் தரும். -ஜான் டிரைடன்[1]
  • அறிவு மட்டும் கூறும் வழியில் செல்லற்க. ஆன்மா முழுவதும் ஆணையிடும் வழியில் செல்க. -லியோ டால்ஸ்டாய்[1]
  • அறத்திற்குத் தலைசிறந்த வெகுமதி அதனிடத்திலேயே கிடைக்கும்; மறத்திற்குத் தலைசிறந்த தண்டனையும் அதனிடத்திலேயே கிடைக்கும். -பழமொழி[1]
  • அறம் தன்னில் தானே அடையும் வெகுமதியை விட அதிகமான வெகுமதியை வெளியில் பெற முடியாது. அதுபோல் மறமும் தன்னில் தானே அடையும் தண்டனையைவிட அதிகமான தண்டனையை வெளியில் பெற முடியாது.-பிரான்சிஸ் பேக்கன் [1]
  • பேரின்ப வீட்டை அடையும் நெறி துறவறம் அன்று; அனவரதமும் அறச்செயல் ஆற்றுவதேயாகும்.-ஸ்வீடன் பர்க் [1]
  • ஒருபொழுதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு; நாம் செய்யும் நற்செயலே அது. -மாரிஸ் மாட்டர்லிங்க் [1]
  • நல்ல விஷயங்கள் தீய விஷயங்கள் என்று பிரிக்க முடியாது. நாம் அவற்றின் வசப்படாமல், அவை நம் வசம் வந்துவிட்டால் எல்லாம் நல்ல விஷயங்களே. -எட்வர்டு கார்ப்பெண்டர்[1]
  • எல்லா நல்ல காரியமும் பேச்சும் பணம் பெறாமல் செய்யப்பட வேண்டும் என்பதே இறைவன் திருவுளம் என்பது தெளிவு. -ஜான் ரஸ்கின் [1]
  • என்ன செய்யலாம் என்று வக்கீல் கூறுவது விஷயம் அன்று; என்ன செய்யவேண்டும் என்று அறிவும், அறமும், அன்பும் கூறுவதே விஷயம். -பர்க் [1]
  • அற வாழ்வின் அளவுகோல் விசேஷ முயற்சிகள் அல்ல; தினசரி வாழ்க்கையேயாகும்.-பாஸ்கல் [1]
  • விரும்ப வேண்டியவற்றை விரும்பவும், வெறுக்கத் தகுந்தவற்றை வெறுக்கவும் செய்யுமாறு நன்னெறியில் செலுத்தப்படும் அன்பே அறமாகும். -ஸெயின்ட் அகஸ்டைன்[1]
  • நாம் அறநெறியில் நிற்கும் ஒவ்வொரு சமயத்திலும் ஏதேனும் இன்பம் அதிகரியாவிட்டால், ஏதேனும் துன்பம் குறைந்திருக்கும் என்பது உறுதி. -பென்தம் [1]
  • அறம் இதுவென்று அறியாமலும், விரும்பியதைச் செய்ய முடியாமலும் இருந்தாலும், அறத்தில் ஆசை கொள்வதால் தீமையை எதிர்க்கும் தெய்வீக சக்தியில் நாமும் ஓர் அம்சமாவோம். -ஜார்ஜ் எலியட்[1]
  • நமது உணர்ச்சியின் தன்மை, விசாலம் ஆகிய இரண்டின் அளவே நமது ஒழுக்கமாகும். -ஜார்ஜ் எலியட்[1]
  • நான் எனக்காக மட்டுமே உள்ள ஆசைகளை வைத்துக்கொள்ளாதிருக்க முயலுகின்றேன். ஏனெனில், அவை பிறருக்கு பயவா திருக்கலாம். தவிர இப்போழுதே அவை என்னிடம் அதிகமாக இருக்கின்றன. -ஜார்ஜ் எலியட் [1]
  • நமது நன்மையை அடையத் தவறிவிட்டாலும் பிறர் நன்மை இருக்கவே செய்கின்றது. அதற்காக முயலுதல் தக்கதே. - ஜார்ஜ் எலியட் [1]
  • நம்மை நாம் வெல்லாதவரை அறம் எதுவும் இல்லை உழைப்பு வேண்டாத செயல் எதுவும் ம்தித்தற்கு உரியதன்று - டிமெஸ்டர் [1]
  • கடவுள் ஆன்மாவைப் புழுதியில் புதைத்திருப்பதெல்லாம் அதன் மூலம் தவறினூடே உண்மைக்கும், குற்றத்தினூடே அறத்திற்கும், துன்பத்தினூடே இன்பத்திற்கும் வழி திறந்து செல்வதற்காகவேயாகும். - எங்கல்[1]
  • தீய நெறியில் செல்லாதிருக்க எப்பொழுதும் எச்சரிக்கையாயிருப்பதை விட, நல்ல விஷயங்களில் மனதை ஈடுபடுத்தி அதன் மூலம் தீய நெறியின் நினைவே எழாதிருக்கச் செய்வதே நலம். -பித்தாகோரஸ் [1]
  • நல்லொழுக்கம் மட்டுமே புயலுக்கு அசையாமல், உறுதியாய் நிற்கும் என்பது இறைவனின் சட்டம். - பிதாகோரஸ்[2]
  • அற வாழ்வில் ஆசையுள்ளவன் சத்தியத்தைச் சார்ந்து நிற்கும் பொழுதுதான் அவன் துக்கம் தொலைகிறது; அதற்கு முன்னால் அன்று. -பிளேட்டோ[1]
  • நன்மை ஒரு நல்ல வைத்தியன். ஆனால், தீமை சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன். -எமர்ஸன்[1]
  • நம்மில் உயர்ந்தோரிடமும் எவ்வளவோ தீமை இருக்கின்றது; நம்மில் தாழ்ந்தோரிடமும் எவ்வளவோ நன்மை இருக்கின்றது. ஆகையால் பிறரைப் பற்றிப் பேச நம்மில் எவர்க்கும் தகுதி இருப்பது அரிது. -ராக்பெல்லர்க்கு உகந்த கவி [1]
  • இருதயத்தைப் பெருக்கி அலங்கரித்துக் காலியாக வைத்திருப்பது என்பது நாம் விரும்பினாலும் கூட முடியாத காரியம். நாம் தயாராக்குவது நன்மை குடிபுகவா, தீமை குடிபுகவா என்பதே கேள்வி. - கிப்சன் [1]
  • நமது செயலின் விளைவுகளை நாம் ஏற்றுக்கொள்ளும் முறையே நமது ஆன்மாவின் உயர்வை அளக்குங் கோலாகும். - ஜான் மார்லி [1]
  • பல துன்பங்களுக்குப் பிறப்பிடமென்று நான் நகரத்தின் களியாட்டிடங்களை விட்டுவிட்டாலும், இன்னும் என்னை விட்டுவிட மட்டும் கற்றுக்கொள்ளவில்லை. - செயின்ட் பேஸில் [1]
  • ஒரு புல் முளைத்த இடத்தில் இரண்டு புல் முளைக்கவும், ஒரு கதிர் விளைந்த இடத்தில் இரண்டு கதிர் விளையவும் செய்பவனே இராஜீயவாதிகள் அனைவரிலும் தேசத்திற்கு அதிக உபயோகமான ஊழியம் செய்தவனாவான். அவனே மனித வர்க்கத்தால் அதிகமாகப் போற்றப்படத் தகுந்தவனு மாவான். -ஸ்விப்ட்[1]
  • தான் அறத்தில் நிற்பதால் பிறர் அடையும் சாந்தியும் சந்தோஷமும் இவ்வளவென்று கணித்தல் அநேகமாக இயலாத காரியமாகும். -அக்கம்பிஸ்[1]
  • தன்னெறி அதிகக் கரடு முரடென்றாவது, அதிக கஷ்டமென்றாவது கூறப்படக் காணோம். கூறப்பட்டிருப்ப தெல்லாம் அது குறுகியது என்றும், கண்டு பிடிக்கக் கடினமானது என்றுமே. -ஆவ்பரி [1]
  • ஒருவனுக்கு ஆகாரம் அளிப்பதைவிட அதை அவனே தேடிக்கொள்ள வழி காட்டுவதே முக்கியம். ஒருவனுக்கு உதவி செய்வதைவிட அவன் பிறர்க்கு உதவி செய்யக் கற்றுக்கொடுப்பதே நலம். -ஆவ்பரி [1]
  • குற்றமான காரியம் செய்யக் கூசவேண்டியது அவசியமே; ஆனால், பிறர் குறை கூறுவாரோ என்று அளவுகடந்த ஜாக்கிரதை அமைத்துக்கொள்பவன் அன்புடையவனாக இருக்கலாம்; உயர்ந்தோனாகமட்டும் இருக்க முடியாது.-ப்ளூட்டார்க் [1]
  • நன்றாய் எழுதப்பட்ட ஜீவிய சரிதம் நன்றாய் வாழப்பட்ட ஜீவியத்தைப் போலவே அரியதாகும். -தாமஸ் கார்லைல் [1]
  • மனிதனைப் பூரணமாக்க வேண்டிய குணங்கள் எவை? கலங்காத அறிவு, அன்பு நிறைந்த நெஞ்சு, நீதியான தீர்மானம், ஆரோக்கிய உடல், கலங்காத அறிவு இல்லாவிடில் அவசரமாய் முடிவு செய்துவிடுவோம். அன்பு நிறைந்த நெஞ்சு இல்லாவிடில் சுயநலமுள்ளவராயிருப்போம். நல்லெண்ணம் இருப்பினும் நீதியான தீர்மானம் இல்லாவிடில் நன்மை உண்டாவதினும் தீமையே உண்டாகும். உடற்சுகம் இல்லாவிடில் ஒன்றும் செய்யமுடியாது. -ஆவ்பரி [1]
  • ஆன்மாவில் உலகின் கறை படியாமல் உனது நற்குணத்தால் தூய்மையாக வைத்துக்கொள்ளவும். -பெய்லி[2]
  • ஆரோக்கியமில்லாமல் நீ சுகமாக வாழ முடியுமானால் ஒழுக்கமில்லாமல் இன்பமாக வாழவும் முடியும். -பார்[2]
  • நல்லொழுக்கம் என்பது போர்நிலை, அதில் வசிப்பதற்கு நா நம்மையே எதிர்த்துப் போராடிக்கொண்டேயிருக்க வேண்டும். - ரூஸோ[2]
  • அறம் எனப்படுவது நாம் நமக்கும். நம்முடன் வாழும் மக்களுக்கும், இறைவனுக்கும். அவர்களுடன் கொண்டுள்ள உறவுகளுக்குத் தக்கபடி நம் கடமையைச் செய்வதாகும், அக்கடமை நமது பகுத்தறிவாலும் இறைவனுடைய வெளிப் பாடுகளாலும், இறைவனாலும் நமக்கு அறிவுறுத்தப் படுகின்றன. -ஏ. அலெக்சாண்டர்[2]
  • ஒரு மனிதனுடைய பண்பை அவனுடைய அசாதாரண முயற்சிகளைக்கொண்டு அளவிட வேண்டாம். அவனுடைய தினசரி நடத்தையைக்கொண்டே பார்க்க வேண்டும். - பாஸ்கல்[2]
  • எல்லோரும் தர்மத்திற்குத் தலை வணங்குவார்கள். ஆனால் பிறகு விலகிப் போய்விடுவார்கள். -டிஃபினோட்'[2]
  • நல்லவன் நிச்சயமாக மேலும் நல்லவனாவான். தீயவன் அவ்வாறே மேலும் தீயவனாவான்; ஏனெனில், பண்பு. தீமை காலம் ஆகிய மூன்றும் ஒரு பொழுதும் அமைதியா நிற்பதில்லை. -கோல்ட்டன்[2]
  • எந்த மனிதனும் அறவினையைச் செய்ய விரும்பும் போதுதான் அவன் விருப்பப்படி செய்யலாம், மற்ற விஷயங்களில் அவனுடைய இஸ்டிடப்படி நடக்க உரிமை கிடையாது. - ஸி. சிம்மன்ஸ்[2]
  • நன்மை என்பது செயலில் காணும் அன்பு. - ஜே. ஹாமில்டன்[2]
  • ஏதாவது ஒரு கொள்கைக்காக வாழுங்கள். நன்மையைச் செய்யுங்கள்: காலத்தின் புயல்கள் அழிக்க முடியாத நினைவுச் சின்னங்களை உங்களுக்குப் பின்னால் விட்டுச் செல்லுங்கள். - சால்மர்ஸ்[2]
  • உன் செயல்கள் மாய்ந்து ஒழிந்து போவதில்லை. நல்ல செயல் எதுவும் நித்தியமான வாழ்வுக்குரிய விதையாகும். - பெர்னார்டு[2]
  • மனிதர்களுக்கு நன்மையைச் செய்வதில் மனிதர்கள் அநேகமாகத் தெய்வங்களுக்கு நிகராக ஆகின்றனர். வேறு எதிலும் இப்படி ஆக முடியாது. - ஸிஸெரோ [2]
  • பணக்காரனாயிருந்து தர்மம் செய்யாதவன் அயோக்கியன், அவன் மூடன் என்பதையும் எளிதில் நிரூபித்துவிடலாம். - ஃபீல்டிங்[2]
  • நாம் சேர்த்து வைக்கும் உண்மையான சொத்துகள் நம்முடைய தர்மங்கள்தாம். நாம் எவ்வளவு கொடுக்கிறோமோ அந்த அளவுக்கே ஆதாயம் பெறுகிறோம். - ஸிம்ஸ்[2]
  • நல்ல செயல் ஒவ்வொன்றும் தர்மமாகும். உன் சகோதரனைக் கண்டால் புன்னகை செய்தல் தர்மம்; உன்னுடன் வாழ்பவன் ஒருவனை நற்செயல்கள் புரியும்படி தூண்டுதல் தானம் செய்வதற்கு ஈடாகும் வழிதவறியவனை நீ வழியில் கொண்டு சேர்த்தல் தர்மம். குருடர்களுக்கு நீ செய்யும் உதவி தர்மம், சாலையில் கிடக்கும் கற்களையும், முட்களையும் நீ நீக்குதல் தர்மம். தாகமுள்ளவருக்குத் தண்ணீர் அளித்தல் தர்மம். மறுமையில் ஒரு மனிதனுக்கு உண்மையான செல்வம், இவ்வுலகில் அவன் தன் சகோதர மனிதனுக்குச் செய்யும் நன்மைதான். அவன் இறந்த பிறகு அவன் என்ன சொத்து வைத்துவிட்டுப் போயிருக்கிறான்? என்று மக்கள் கேட்பார்கள். ஆனால், அவன் என்ன நற்செயல்களைத் தான், வருமுன்னால் அனுப்பியிருக்கிறான்?' என்றே தேவதூதர்கள் கேட்பார்கள். - முகம்மது நபி[2]
  • மற்றொருவனுக்கு நன்மை செய்வதில் ஒருவன் தனக்கும் நன்மை செய்துகொள்கிறான். முடிவான பயனில் மட்டுமன்றி அந்தச் செயலிலேயே நன்மை இருக்கின்றது. நன்மையைக் செய்கிறோம் என்ற எண்ணம் போதிய சன்மானமாகும். -ஸெனீகா[2]
  • துயரத்தைக் கண்டு இரங்குதல் மனித கபாவம், அதை நீக்குதல். தெய்விகமாகும். - ஏ மான்[2]
  • வாழ்ந்தவர்களைக் கொல்லுவதும், உற்ற நண்பர்களுக்குத் துரோகம் புரிவதும், நேர்மையில்லாமல் நடப்பதும், இரக்கமில்லாமல் இருப்பதும், மதாபிமானமற்ற செயலும் அறநெறியென்று சொல்லப்பட மாட்டாது. இந்த வழிகளால் ஒருவன் அதிகார பதவி அடையலாம். ஆனால் புகழ் அடைய முடியாது. -நிக்கோலோ மாக்கியவெல்லி[3]
  • மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
    ஆகுல நீர பிற. - திருவள்ளுவர்[2]
  • அழுக்காறு, அவா. வெகுளி. இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்றது அறம். - திருவள்ளுவர்[2]
  • ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
    செல்லும் வாய் எல்லாம் செயல். - திருவள்ளுவர்[2]
  • இன்றுகொல். அன்றுகொல், என்றுகொல் என்னாது
    பின்றையே நின்றது கூற்றம் என்றுஎண்ணி
    ஒருவுமின் தீயவை. ஒல்லும் வகையான்
    மருவுமின் மாண் பார் அறம். - நாலடியார்[2]
  • இன்சொல் விளைநிலமா, ஈதலே வித்தாக
    வன்சொல் களை கட்டு, வாய்மை எருஅட்டி,
    அன்புநீர் பாய்ச்சி, அறக்கதிர் ஈன்றன் ஓர்
    பைங்கூழ் சிறுகாலைச் செய். - அறநெறிச்சாரம்[2]
  • அறிவது அறிந்தார் அறத்தின் வழுவார்
    நெறிதலை நின்றுறு ஒழுகுவார். - அறநெறிச்சாரம்[2]
  • தருமத்தை ஒருநாளும் மறக்கவேண்டாம். - உலகநீதி[2]

குறிப்புகள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 1.25 1.26 1.27 1.28 1.29 1.30 1.31 1.32 1.33 1.34 1.35 1.36 1.37 1.38 1.39 என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 2.24 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 62-65. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அறம்&oldid=21626" இலிருந்து மீள்விக்கப்பட்டது