படித்தல் அல்லது வாசித்தல் என்பது எழுதப்பட்ட உரையின் எழுத்துக்களை பார்த்து, சொற்களைப் புரிந்து, அதில் கூறப்பட்ட கருத்தை உணர்ந்து கொள்வதை வாசித்தல் எனலாம். வாசித்தல் எழுத்தறிவின் ஒரு அடிப்படைக் கூறு.

மேற்கோள்கள்

தொகு
 • நூல் கற்பவன்—அவனுக்காகவே உலகம் ஆக்கப்பட்டுள்ளது. அவன் எந்த தேசத்திலும் இருப்பான், எல்லாக் காலங்களிலும் வாழ்வான். -ஹெர்ஷல்[1]
 • படித்துக்கொண்டே இருந்தால் அறிவு பெருகும் என்று எண்ணுவது, உண்டுகொண்டே இருந்தால் பலம் பெருகும் என்பதை ஒக்கும். -புல்லர்[1]
 • படிப்பானது அறிவு தரவேண்டிய விஷயங்களையே தரும். படித்தவற்றைச் சிந்தித்தலே படித்தவற்றை நமக்குச் சொந்தமாகச் செய்யும். -லாக்[1]
 • மற்றவர்களைப் போலவே நானும் படித்திருந்தால் அவர்களைப் போலவே நானும் முட்டாளாய் இருந்திருப்பேன். -ஹாப்ஸ்[1]
 • நூல்களை முறையாகக் கற்றல் நன்மை தரும். ஆனால் இன்பம் அளிப்பது முறையின்றிக் கற்றலே. -ஸெனீக்கா[1]
 • நூல்களைப் படிப்பது ஒன்றிலேயே காலம் முழுவதையும் செலவுசெய்வோர் சோம்பேறிகளில் பெரிய சோம்பேறிகள். -ஸிட்னி ஸ்மித்[1]
 • சிறந்தவர்களோடு மட்டும் நம் மனம் உறவாடுவதற்குச் சிறந்த புத்தகங்களையே தேர்ந்துகொள்ள வேண்டும். - ஸிட்னி ஸ்மித்[2]
 • சிந்தியாது படிப்பது சீரணியாது உண்பதை ஒக்கும். -பர்க்[1]
 • படித்தல் விஷயங்கள் நிறைந்த மனிதனாகச் செய்யும். சம்பாஷித்தல் எந்தச் சமயத்திலும் பேசத்தக்க மனிதனாகச் செய்யும். எழுதுதல் எதிலும் திட்டமான கருத்துக்கள் உள்ள மனிதனாகச் செய்யும். -பேக்கன்[1]
 • படிப்பின் நோக்கம் ஆட்சேபம் செய்தலும், ஆராயாது நம்பிக்கை கொள்ளுதலும், வாதம் செய்தலும் அல்ல. ஆய்ந்து சீர்துக்கித் தீர்மானித்தலே. -பேக்கன்[1]
 • படிப்பு இன்பமாகும். அணியாகும். திறமையாகும். -பேக்கன்[2]
 • சிந்தியாது படித்தல் மூளையைச் செழிப்புள்ளதாகச் செய்யுமே யன்றி ஒருநாளும் தெளிவுள்ளதாகச் செய்யாது. -நாரிஸ்[1]
 • எவ்வளவு படித்தாலும் பலதிறப்பட்ட நூல்களைப் படிப்பதே நல்லது. ஒரே வகை நூல்களை மட்டுமே படிப்பவன் தவறான அபிப்பிராயங்கள் உடையவனாவான். அறிவு வளர்ச்சி சம்பந்தமாய் எனக்குள்ள திடமான அபிப்பிராயம் இது. -டாக்டர் அர்னால்டு[1]
 • வண்டுக்கு ஏழை முற்றத்திலுள்ள ஒரே செடியில் கூடத் தேன் கிடைக்கும். வண்ணாத்திப் பூச்சிக்கோ அரசர் தோட்டத்தில் கூட அணுவளவு தேனும் அகப்படமாட்டாது. -எட்வர்ட் புல்லக்[1]
 • படிப்பு அறிவிற்கான உபகரணங்களாக மட்டுமே உதவும்; படிப்பதை நமதாக்குவது சிந்தனையே. நாம் அசைபோடும் இனத்தைச் சேர்ந்தவர். விஷயப் பெரும் சுமையை நம்மிடம் திணித்துக் கொண்டால் மட்டும் போதாது. அதை மறுபடியும் சுவைத்தாலன்றி போஷணையும் பலமும் உண்டாகா. -லாக்[1]
 • சிலர் வாழ்நாள் முழுவதும் படிக்கிறார்கள். இறப்பதற்குள் எல்லாவற்றையும் படித்துத் தீர்த்தும் விடுகிறார்கள்-யோசனை செய்வதைத் தவிர. -டோமேர்கு[1]
 • கற்றவற்றையும் கற்க வேண்டியவற்றையும் கருத்தில் வைப்பவனே கல்வியில் விருப்பமுடையவன். -கன்பூஷியஸ்[1]
 • எதையும் சிந்திக்காமல் படிக்கும்போது மனதில் குழப்பம் தோன்றுகிறது; அதே நேரத்தில் படிக்காமல் சிந்திப்பது சமநிலையைக் கெடுத்துவிடுகின்றது.கன்பூஷியஸ்[3]
 • முட்டாள்களுக்கு அர்த்தமாவதே யில்லை. சாதாரணமான அறிவுடையவர் சந்தேகமற அறிந்து விட்டதாக எண்ணிக்கொள்வர். பேரறிஞர்க்கு விளங்காத பகுதிகள் இருந்தாலும் இருக்கும். சாமர்த்தியம் காட்ட விரும்புவோர் தெளிந்தவற்றைத் தெளிவாயில்லை என்பர், தெளிவாயில்லாதவற்றை அர்த்தமாக்கிக் கொள்ள முயல்வர். -லா புரூயர்[1]
 • கற்பவை கற்கவும், அஞ்சுவதஞ்சவும், நிச்சயமாக நன்மை வரும் என்று நம்பவும், நன்மை அருளும்படி பிரார்த்திக்கவும், நன்மை செய்ய முனையவும் கொடுத்து வைத்தவரே பேரின்பம் துய்ப்பவர். தர்க்கம் செய்யவேண்டும் என்பதற்காகவோ ஏளனம் செய்ய வேண்டும் என்பதற் காகவோ கற்பவர் பிறவாமலே இருந்தால் எத்துணை நன்மையாயிருக்கும்! -ஸ்காட்[1]
 • படிக்கத் தெரியாதவனைப் போலவே படிக்கத் தகாதவைகளைப் படிப்பவனும் நிரட்சர குட்சியே ஆவன். -தோரோ[1]
 • விஞ்ஞானத்தையும், வரலாற்று நூலையும் பிரித்துப் பேசக் கூடாது. தனி மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு இந்த இரண்டையும் கற்க வேண்டும். —ஜவகர்லால் நேரு (11-10-1962)[4]
 • படிப்பதைப் போல் செலவு குறைந்த பொழுதுபோக்கு வேறில்லை. அதைப்போல் இன்பமளிப்பதும் வேறில்லை. -மான்டெயின்[2]
 • சிலவற்றில் முழுமையும் படித்தலும், ஒவ்வொன்றிலும் கொஞ்சம் படித்தலும் நலம். -பிரௌகாம்[2]
 • சிறு வயது முதலே படிப்பில் ஆர்வம் கொண்டுள்ளவன் இன்பமானவன். -ருஃபஸ் சோட்[2]
 • படிப்பதில் ஆசை கொள்ளும் பழக்கம் வேண்டும் ஒவ்வொரு புத்தகமாகத் தாவிக்கொண்டிருக்கக்கூடாது. பெருந்தீனி உண்பவனைப் போலப் படிப்பில் இருக்கக்கூடாது. முறையாக சிரத்தையாக, சிந்தனையோடு, படிக்கும் விஷயங்களைப் பரிசீலனை செய்துகொண்டு. முக்கியமான விஷயங்களை நினைவிலேற்றிக்கொண்டு படிக்க வேண்டும். இவ்வாறு படித்தால்தான் நீ அறிந்துள்ள விஷயங்கள் விரிவானவைகளாகவும். துல்லியமானவையாகவும். பயனுள்ளவையாகவும் விளங்கும். - டபுள்யு. வர்ட்[2]
 • ஒரு குழந்தை தான் படிப்பதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கும். அறிவாளர்கள் எவ்வளவு மூடர்களாயிருக்கிறார்கள். -ஸதே[2]
 • நீ படிப்பதைப்பற்றி, ஒவ்வொரு பகுதியையும் சிந்தனை செய்துபார். - காலெரிட்ஜ்[2]
 • அவன் தான் படித்ததில் ஒவ்வொன்றிலிருந்தும் அவன் மதிப்புயர்ந்த விஷயம் எதையாவது எடுத்துக்கொண்டான். -பிளினி[2]
 • ஒரு நூல் முழுவதையும் வேகமாகப் படிப்பதைவிட ஒரு பக்கத்தை நன்றாக உணர்ந்துகொள்வது மேலாகும்.- மெகாலே[2]
 • ஒரு புத்தகத்தைத் தொடங்கிவிட்டதற்காக மட்டும் அதை முழுதும் படிக்க வேண்டியதில்லை. -விதர்ஸ்பூன்[2]

குறிப்புகள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/படித்தல். நூல் 168-171. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
 2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 251-252. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 3. என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
 4. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=படித்தல்&oldid=22050" இலிருந்து மீள்விக்கப்பட்டது