அரசன்
ஒரு முடியாட்சியின் தலைவராக இருப்பவர்
அரசன் என்பது ஒரு நாட்டை ஆளுபவனைக் குறிக்கும். மன்னன், கோன் ஆகிய சொற்களும் இதே பொருளுடையவையே.
மேற்கோள்கள்
தொகு- மிகப் பழைய காலத்தில் மக்களுக்கு அரசர்களே தெரியாது. பிறகு நேசித்துப் புகழ்ந்தார்கள். பிறகு பயந்தார்கள். இறுதியில் அரசர்களை எதிர்த்தார்கள்.[1]
- நாட்டை ஆளும் மன்னன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்றால், 'அவன் தன் நல்ல ஒழுக்கத்தால் ஆட்சி செலுத்தும்போது துருவ நட்சத்திரம் போல் விளங்குகிறான். அந்த விண்மீன் சலனமற்று, நடுநிலையிலிருக்க, மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் அதனைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. -கான்பூசியசு[2]
- மன்னனாக இருப்பது கஷ்டம்தான்; ஆனால் அமைச்சனாக இருப்பதும் கஷ்டந்தான்! ஏன் இந்தக் கஷ்டம் உருவாகின்றது என்றால், அரசன் தானே, நீதி ஒழுக்கத்தைப் பின்பற்றுபனாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் கீழ் வாழும் மக்களும் அவன் ஏவுதல் ஏதும் இல்லாமலேயே அவனுடைய கட்டளைக்கு அடங்கி நடப்பார்கள்! -கான்பூசியசு[2]
- 'நேர்மையானவர்களை அரசன் மேனிலைக்குக் கொண்டுவர வேண்டும். மனக்குற்றம் உள்ளவர்களை ஆட்சியை விட்டு அல்லது அவர்களது பதவியை விட்டு அகற்றிவிட வேண்டும். இப்படி ஓர் அரசன் நடவடிக்கை எடுப்பானானால், மக்கள் அந்த ஆட்சிக்கு அன்புடன் பணிந்து நடப்பார்கள். அதே போல அடுத்துள்ளவர்களை மகிழ்விப்பார்கள். தூரத்தில் உள்ளவர்களை ஈர்த்துக் கவர்வதும், வசீகரிப்பதும் நல்ல ஆட்சி நீடிப்பதற்குரிய சிறந்த இலக்கணமாகும்; -கான்பூசியசு[2]
- மக்களின் நேர்மையான ஒழுக்க வளர்ச்சிகளுக்கு அரசு எந்தக் காலத்திலும் அலட்சியமாக, அக்கரையற்ற விதமாக இருக்கக் கூடாது. ஒருவேளை அந்த மன்னன் அலட்சியமாகவும், அக்கரையற்றும் இருந்துவிட்டு, சட்டங்கள் மூலமாகவும்; தண்டனைகளைத் தருவதன் வாயிலாகவும், மக்களை அடக்க முயன்றால்; அவர்கள் அவற்றை மீறுவதில்தான் அதிக அக்கரை காட்டுவார்கள்; தண்டனைகளையும் அலட்சியம் செய்வார்கள்! -கான்பூசியசு[2]
- குடிகளின் இதயங்களிலே தங்கள் அரியணைகளை அமைத்துக்கொண்ட அரசர்கள் இன்பமடைவார்கள். - ஃபோர்டு[3]
- அரசருக்குரிய பெருமை வீண் ஆடம்பரத்திலில்லை, ஆழ்ந்த பண்புகளில் இருக்கின்றது. - அகிஸிலாஸ்[3]
- ஆண்டவன் அருளால் செங்கோல் ஏந்துபவன். அதை ஏந்தும்வரை அதன் பளுவை உணரான். -கார்னிலி[3]
- முடி புனைந்த தலையில் துயரம் தங்கியிருக்கும். - ஷேக்ஸ்பியர்[3]
- அரசனுடைய கடமைகளைக் கவனமாகச் சிந்தனை செய்து பார்ப்பவன், ஒரு மணிமுடியைக் கண்டதும் அஞ்சி நடுங்குவான். -லெவிஸ்[3]
- அரசர்க்குப் பரம்பரை உரிமை இருப்பது தவறு என்பதற்குத் தகுதியுள்ள சான்றுகளுள் ஒன்று. இயற்கை அதை நிரூபிக்கின்றது என்பது இல்லாவிட்டால், இயற்கை மனிதரை ஆள்வதற்கு ஒரு சிங்கத்திற்குப் பதிலாக ஒரு கழுதையை அடிக்கடி முடிசூடும்படி வைக்குமா? -தாமஸ் பெயின்[3]
- அரசன் செல்லும் வழியிலேயே குடிகளும் செல்வர்; அரசனுடைய கட்டளைகளைப்பார்க்கினும். அவன் வாழ்க்கையில் நடந்து காட்டும் முறையே அதிக வலிமையுள்ளது. - கிளாடியன் [3]
- அரசர்க்கு வேண்டிய நீதிகள் எல்லாம் இவைகளில் அடங்கி யுள்ளன. நீ ஒரு மனிதன் என்பதை நினைவில் வைத்துக்கொள்: நீ ஆண்டவனின் பிரதிநிதி என்பதையும் நினைவில் வைத்திரு. - பேக்கன்[3]
- எதிர்ப்பிலே வளர்ந்தோங்கும் அரசன் பேரரசனாகிறான். நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
- ஆட்சி நடத்தும் அரசனிடம் பொதுமக்கள் அன்பு கொண்டிருப்பது நல்லதா அச்சம் கொண்டு அடங்கியிருப்பது நல்லதா என்று கேட்டால், அஞ்சுவதே நல்லது என்றுதான் வேண்டும். -நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
- ஆளுபவனிடம் மக்கள் கொள்ளும் அன்பு மாறும் இயல்புடையது; அச்சமோ என்றும் மாறாது. -நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
- அரசாளும் தலைவன் அவனுடைய குடிமக்களால் பழிக்கப்படலாம். ஆனால் வெறுக்கப்படக் கூடாது. -நிக்கோலோ மாக்கியவெல்லி-நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
- மக்கள் மன்னனுக்கு அஞ்சி நடக்கலாம். ஆனால் தன்னை வெறுக்கும்படியாக மன்னன் நடந்துகொள்ளக் கூடாது. -நிக்கோலோ மாக்கியவெல்லி-நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
- அன்னியரைக் காட்டிலும் தன் மக்களுக்கு அதிகமாகப் பயப்படுகிற அரசனுக்குத்தான் கோட்டைகள் தேவைப்படும். -நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
- மக்களின் வெறுப்புக்காளான மன்னரெல்லாம் சதிகளுக்கு ஆளாகி கொல்லப் பட்டிருக்கிறார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
- ஒரு நாட்டு மக்கள் தங்களை ஆளும் ஒர் அரசனைப் படையெடுத்து வரும்படி வரவேற்பார்களானால், அப்படி வரவேற்கப்பட்ட வெளி நாட்டான் ஆட்சியும் நிலைத்திருக்காது. ஏனெனில் அவனாலும் அவர்களைத் திருப்திப்படுத்த முடியாது. நரியைப்போல் சதிவலைகளை அறிந்து கொள்ளும் தந்திர சூட்சும அறிவும், ஓநாய்களான பகைவர்களை சிங்கத்தைப் போல் அச்சுறுத்துந் தன்மையும் ஓர் ஆட்சியாளனுக்கு வேண்டும்.-நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
- நாடாளும் மன்னன், தேவை ஏற்பட்டால் ஒருவன் உயிரை வேண்டுமானாலும் பறிக்கலாம். ஆனால் ஒருவன் உடமையை மட்டும் பறிக்கவே கூடாது! ஏனெனில் மக்கள் தங்கள் தந்தையின் சாவைக்கூட மறந்து விடுவார்கள். ஆனால் பிதிரார்ஜித சொத்தை இழப்பதை மட்டும் பொறுக்கவே மாட்டார்கள்!-நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
- ஆட்சிபீடம் ஏறிய ஒருவன் தன் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள விரும்புவானேயாகில், அவன் சந்தர்ப்பத்திற்கேற்ப. நல்லவனாய் இல்லாமல் இருக்கவும், தேவைக்கும் நிலைமைக்கும் ஏற்பத் தன் அறிவைப் பயன்படுத்தவோ, பயன்படுத்தாமலோ இருக்கவும் தெரிந்து கொள்ள வேண்டும்.-நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
- ஆட்சியாளன் புத்தியுள்ள வனாயிருந்தால் சமாதான காலத்தில் சோம்பேறியாய் இருக்கக் கூடாது. ஆபத்துக் காலத்தில் தற்காத்துக் கொள்ளவும், தாக்குதல்களைச் சமாளிப்பதற்கும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.-நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
- பலம் பொருந்திய நகரத்தையும், தன்னை வெறுக்காத மக்களையும் உடைய அரசன் தாக்குதலுக்கு ஆளாக மாட்டான் . அப்படியே தாக்கப்பட்டாலும், தாக்கியவனே வெட்கமடைந்து புறமுதுகு காட்டி ஓடும்படி நேரிடும்.-நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
- சீர்கெட்ட ஒரு நகரத்தை அடையும் ஒர் அரசன் அதை சீர்த்திருத்துவதன் மூலம் புகழடைகிறான்!-நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
- நல்ல அரசுகள் நிலைத்து நிற்கக் கூடிய தன்மையற்றுப் போவதால் தீய அரசுகளாக மாறி விடுகின்றன. இவ் வகையில் நல்ல அரசுகளும் குறைபாடுடையனவே.-நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
- பரம்பரை அரசர்கள் தங்கள் ராஜ்யத்தை இழக்க நேரிட்டால் அது அதிர்ஷ்டத்தின் கோளாறல்ல. அவர்களுக்கு ஆளத் தெரியாததின் கோளாறேயாகும்!-நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
- உடைமைகளை (அல்லது நாடுகளை) சேர்த்துக்கொள்ள விரும்புவது இயற்கையானது. அதைச் செய்யவல்லவர்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்து விடுவார்களேயானால், என்றும் புகழப்படுவார்களே தவிர, இகழப்பட மாட்டார்கள். வல்லமையில்லாதவர்கள் எப்படியாவது செய்ய முனையும்போதுதான் தவறு செய்கிறார்கள். பழிக்கும் இகழ்ச்சிக்கும் இரையாகிறார்கள்.-நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
- கொடுமையும் துரோகமும் புரிந்தவர்கள். எப்படித் தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டு நீடித்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் தாங்கள் செய்த கொடுமைகளை முற்றிலும் சரிவரச் செய்தவர்களாய் இருப்பார்கள்!-நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
- வான்நோக்கி வாழும் உலகெல்லாம். மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி. - திருவள்ளுவர்[3]
- குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழிஇ நிற்கும் உலகு. - திருவள்ளுவர் [3]
- நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும். - திருவள்ளுவர்[3]
- உடைப்பெரும் செல்வத்து உயர்ந்த பெருமை
அடக்கமில் உள்ளத்த னாகி - நடக்கையின்
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக்
கொள்ளி கொடுத்து விடல். பழமொழி[3]
பழமொழிகள்
தொகு- அரசன் அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும்.
- அரசனில்லா நாடு நரகம்.
- அரசன் வீழ்ந்தால் படையில்லை.
குறிப்புகள்
தொகு- ↑ சி.பி.சிற்றரசு (1953 ஏப்ரல்). சீனத்தின் குரல். நூல் 23-24. மன்றம் வெளியீடு. Retrieved on 21 மே 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 41-42. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 4.15 4.16 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.