அம்பேத்கர்
இந்திய சட்ட அறிஞர், முற்போக்குவாதி, இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்
அம்பேத்கர் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக காலம் முழுதும் போராடியவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்ததோடு அவற்றுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பையும் ஏற்படுத்தியவர், இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் வரைவுக்குழுவுக்குத் தலைமை தாங்கி இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர், சமூக சீர்திருத்தவாதி.
மேற்கோள்கள்
தொகு- முதன்மையான மற்றும் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதி கவுதம புத்தர். அவரோடு தான் சமூக சீர்திருத்த வரலாறு துவங்குகிறது. அவரின் அளப்பரிய சாதனைகளை விலக்கிவிட்டு சமூக சீர்திருத்த வரலாறு எழுதப்படும் என்றால் அது முழுமையானது இல்லை.
- 'எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’ [1]
- ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
- பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்களல்ல. சிங்கங்களாக இருங்கள்.
- பார்ப்பனர்கள் படிப்பாளிகளாக இருக்கலாம். ஒருபோதும் அறிவாளிகளாக முடியாது.
- எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.
- தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை உள்ளடக்கியதாக இந்திய தேசியம் இல்லை. எனவே, தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை தேசியத்துக்காகத் தியாகம் செய்ய முடியாது.[2]
- மற்றவர்களுக்கெல்லாம் எதிரி ஏகாதிபத்தியம். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைச் சுற்றிப் பல்வேறு எதிரிகளால் சூழப்பட்டுள்ளதால், எல்லோரையும் ஒரே நேரத்தில் எதிர்க்க முடியாது; எனவே, 2,000 ஆண்டுகளாக உயர் சாதி இந்துக்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போரிடுவது என முடிவெடுத்தேன்.[2]
- பிறப்பால் மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பிராமணீயம் பிரித்தது; மாறாக, பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கியதோர் சமுதாயத்தைக் கட்டுவதற்காக வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டவர் புத்தர். எனவே, புத்தரை எனது வாழ்நாள் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்தேன்.[2]
- ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் எப்படி இருந்தார்களோ அப்படியேதான் ஒடுக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர்… அவர்களும் குடிமக்கள்தான்; ஆனால், குடிமக்களுக்குரிய உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் கட்டிய வரியிலிருந்து பள்ளிகள் நடத்தப்பட்டன. ஆனால், அவர்களுடைய குழந்தைகளை அந்தப் பள்ளியில் அனுமதிக்க முடியவில்லை. அவர்கள் கட்டிய வரிப் பணத்திலிருந்து கிணறுகள் வெட்டப்பட்டன. ஆனால், அவர்கள் அந்தக் கிணற்றிலிருந்து குடிதண்ணீர் எடுக்க முடியாது.[2]
- கற்பி, அணிசேர், கிளர்ச்சிசெய்.[2]
- இந்தியப் புரட்சியின் இரு பெரும் தடைகள் பார்ப்பனீயமும் முதலாளியமும்தான்.
சாதி பற்றி
தொகு- இந்து சமூகம் என்பது ஒரு கோபுரம் போன்றது. அதன் ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு சாதிக்கென்று ஒதுக்கப்பட்டது. இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், இந்தக் கோபுரத்துக்குப் படிக்கட்டுகள் கிடையாது. ஆகவே, ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு ஏறவோ இறங்கவோ முடியாது. ஒருவர் எந்தத் தளத்தில் பிறந்தாரோ அந்தத் தளத்திலேயே மடிகிறார். கீழே உள்ள தளத்தைச் சேர்ந்தவருக்கு எவ்வளவு திறமையும் தகுதியும் இருந்தாலும் அவர் மேலே உள்ள தளத்துக்குச் செல்வதற்கு எந்த வழியும் இல்லை. அதேபோல், மேலே உள்ள தளத்தைச் சேர்ந்தவர் எந்தத் தகுதியும் திறமையும் இல்லையென்றாலும் அவரைக் கீழே உள்ள தளத்துக்கு இறக்குவதற்கு எந்த வழிவகையும் இல்லை.[3]
இந்து மதம் பற்றி
தொகு- நான் இந்துக்களை விமர்ச்சித்து இருக்கிறேன். அவர்கள் போற்றிடும் மகாத்மாவுக்கு இந்துக்கள் பேரால் பேசுவதற்கு என்ன அதிகார உரிமை உள்ளது எனக் கேட்டிருக்கிறேன். அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். அவர்கள் தோட்டத்தில் என்னை ஒரு நச்சுப்பாம்பாகவே பார்க்கின்றனர்.[4]
- அனைத்தையும் அறிந்துள்ள அறிவாளன் என்பதற்காவே எவரை வேண்டுமானாலும் ஓர் இந்து தன் குருவாக ஏற்றுக் கொள்வதைச் சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை.[4]
- 'காந்தியம் என்று ஒன்றில்லை' எனக் காந்தி அறிவித்திருந்தபோதும், அதே தலைப்பில் அவருடைய சம்மதத்துடனேயே ஏராளமான புத்தகங்கள் வெளியாயின; இந்திய வானில் புதிதாக உதித்த கோட்பாடே காந்தியம் என்பதற்கான ஆதாரம் இது.
- என்னுடைய அபிப்பிராயத்தில் காந்தியம் அவ்வளவு எளிமையானதோ களங்கமற்றதோ அல்ல; பிராந்தியவாதத்தை விடவும் வலுவானது அதன் உள்ளடக்கம். பிராந்தியவாதம் அதன் ஒரு அம்சம் மட்டுமே. அதற்கு ஒரு சமூகப் பார்வையும் பொருளாதாரப் பார்வையும் உண்டு. அவை இரண்டையும் விட்டுவிட்டு காந்தியத்தைப் புரிந்துகொள்வது அதைப் பற்றிப் பிழையான சித்திரத்தை முன்வைப்பதாகும்.
- சொத்துடைமை வர்க்கத்துக்குக் கீறல் ஏற்பட்டுவிடக் கூடாது என்றே மிஸ்டர். காந்தி விரும்புகிறார். அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதையும் அவர் எதிர்க்கிறார். பொருளாதாரச் சமத்துவம் என்னும் உணர்வு அவருக்கில்லை. பொன்முட்டையிடும் வாத்தைக் கொல்லத் தான் விரும்பவில்லை என்று பணக்கார வர்க்கத்தை முன்னிறுத்தி அண்மையில் அவர் குறிப்பிட்டுள்ளார். உடைமையாளருக்கும் தொழிலாளருக்கும், பணக்காரர்களுக்கும் தரித்திரர்களுக்கும் நிலவுடமையாளர்களுக்கும் குடியானவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினைகளுக்குக் காந்தியின் தீர்வு எளிமையானது. சொத்துகளைத் துறக்க வேண்டாம். தாங்கள் சொத்துகளின் அறங்காவலர்கள் மட்டுமே என்று அறிவித்தால் போதும். அதுவுங்கூடத் தங்கள் விருப்பப்படி நிறைவேற்ற வேண்டிய ஓர் ஆன்மீகக் கடமை.[5] கோவில்களில் ஆடுகளைத்தான் பலியிடுகிறார்கள் சிங்கங்களை அல்ல ஆதலால் சிங்கமாய் எழுந்துநிற்போம்
சாதியை ஒழிக்கும் வழி
தொகுசாதியை ஒழிக்கும் வழி புத்தகத்திலிருந்து மேற்கோள்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
சான்றுகள்
தொகு- ↑ 1931 ஆம் ஆண்டு காந்தியுடன் உரையாடியபோது தெரிவித்த கருத்து.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 அம்பேத்கரும் கம்யூனிஸமும்
- ↑ ஆசை (2020 பிப்ரவரி, 5). அம்பேத்கரின் ‘குரலற்றவர்களின் தலைவ’ருக்கு நூற்றாண்டு. கட்டுரை 8. இந்து தமிழ். Retrieved on 2020 பிப்ரவரி 6.
- ↑ 4.0 4.1 1936 ஆம் ஆண்டு ‘ஜாத்-பட்-தோடக் மண்டல் மாநாட்டின் தலைமை உரைக்காக எழுதியது.
- ↑ அம்பேத்கர் பார்வையில் காந்தியம்
வெளி இணைப்புகள்
தொகு