காந்தி

'இந்திய தேசத்தின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார்
(மோகன்தாசு கரம்சந்த் காந்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.

செல்லும் பாதை சரியாக இருந்தால் அதன் முடிவும் சரியாக இருக்கும். அதனால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கண்ணியமானதாக இருக்க வேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
 
பகையுணர்வால் அழிவுதான் உண்டாகுமே ஒழிய ஆக்கத்திற்கு வழியில்லை. அன்போ அனைத்தையும் ஆக்குமே ஒழிய எதையும் அழிப்பதில்லை.
  • ஒழுக்கம் உண்டாக்காத இலக்கியக் கல்வியால் ஒருவித உபயோகமும் கிடையாது!
  • தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது ; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது.பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும்.அது தன்னிலையுடையது.
  • நான் என்னைச் சிப்பாயாகக் கருதுகிறேன், அமைதிப் படையின் சிப்பாயாக.
  • நாம் உலகில் பார்க்க விரும்பும் மாற்றம் முதலில் நம்மிடம் நிகழ வேண்டும்.
  • கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கிவிடும்.
  • செயல்களே முன்னுரிமையை வெளிப்படுத்துகிறது.
  • பலகீனமானவர்களால் மன்னிக்க முடியாது. மன்னிப்பு பலசாலிகளின் வழக்கம்.
  • நிறைய அறவுரைகளை விட சிறிதளவாக இருந்தாலும் கடைபிடித்தல் என்பது சிறந்தது.
  • பகையுணர்வால் அழிவுதான் உண்டாகுமே ஒழிய ஆக்கத்திற்கு வழியில்லை. அன்போ அனைத்தையும் ஆக்குமே ஒழிய எதையும் அழிப்பதில்லை.
  • செல்லும் பாதை சரியாக இருந்தால் அதன் முடிவும் சரியாக இருக்கும். அதனால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கண்ணியமானதாக இருக்க வேண்டும்.
  • பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது. பெருக்கத்தான் முடியும்.
  • கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது.
  • தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.
  • தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல.
  • பாமர மக்களுக்குத் தேவையானது உணவு ஒன்று மட்டுமே.
  • மிருகங்களைப் போல் நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது.
  • கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன்.
  • மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட முடியாது.
  • உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.
  • சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று.
  • செல்வம், குடும்பம், உடம் முதலியவற்றில் உள்ள பாசத்தை நாம் உதறித் தள்ளி விடும்போது நம் இதயங்களில் உள்ள அச்சத்திற்கு இடமில்லாமல் போய்விடுகிறது.
  • மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும்.
  • சுதந்திரமாக வாழ்வது மனிதனின் உரிமை. அதுபோலவே மற்றவர்களைச் சார்ந்து வாழ்வது அவன் கடமை.
  • எல்லாக் கலைகளையும் விட வாழ்வுக்கலை ஒன்றே பெரிது.
  • நல்ல நண்பனை விரும்பினால் நல்ல நண்பனாய் இரு.
  • தீமை வேறு, தீமை செய்பவன் வேறு என்ற பாகுபாட்டை ஒரு போதும் மறக்கக் கூடாது.
  • பெண்களே ஆசைகளுக்கும், ஆண்களுக்கும் அடிமையாய் இருக்க மறந்து விடுங்கள்.
  • கடவுள் விண்ணிலுமில்லை, மண்ணிலுமில்லை. உள்ளத்தில்தான் இருக்கிறான். அவனை மக்களுக்குச் செய்யும் சேவை மூலம் அறிய விரும்புகிறேன்.
  • ஜனநாயகத்தில் வலிமையற்றவருக்கும், வலிமை மிக்கவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
  • உயர்ந்த எண்ணங்களைய உடையவர் ஒருநாளும் தனித்தவராகார்.
  • எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக்கூடிய மனத்திடம் வேண்டும்.
  • மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசானே என்பது உறுதியான நம்பிக்கை.
  • கோபமோ, குரோதமோ இல்லாமல் துன்பத்தை ஒருவர் ஏற்றுக் கொள்வது உதயசூரியனுக்கு ஒப்பாகும்.
  • பயத்தினால் பீடிக்கப்பட்ட மனிதன் கடவுளை ஒருநாளும் அறிய முடியாது.
  • நமக்கு ஆங்கிலேயர்கள் இல்லாத ஆங்கிலேய ஆட்சி வேண்டும் என்று சொல்கிறீர்கள். உங்களுக்குப் புலி வேண்டாம். ஆனால் புலியின் இயல்பு வேண்டியிருக்கிறது. இதுவல்ல நான் விரும்பும் தன்னாட்சி.
  • கீதை உட்பட எந்த ஒரு திருமறையையும்விட உயர்வானதாக எனது மதிப்பீட்டைப் பயன்படுத்துகிறேன். எனது பகுத்தறிவை விட எந்தவொரு மறை விளக்கமும் மேலோங்கியிருக்க நான் அனுமதிக்க மாட்டேன்.[1]
  • ஒரே விஷயம் சார்ந்து தான் இருவேறு காலகட்டங்களில் இருவேறு கருத்துக்களை கூறியிருந்தால், கடைசியாக சொன்னதையே தன் கருத்தாக கொள்ள வேண்டும்.[1]
  • எனது ஆத்திகம் சரியென்றோ, உனது நாத்திகம் தவறென்றோ என்னால் ஒருபோதும் கூறிவிட முடியாது.[2]
  • இந்தியாவை வெறி கூட்டத்திடம் ஒப்படைக்கும் முடிவைக் காண நான் 125 வயது வரை உயிர்வாழ விரும்பவில்லை. அதற்குப் பதிலாக நெருப்பில் விழுந்து அழியவே விரும்புகிறேன்.
  • நமக்கு ஆங்கிலேயர்கள் இல்லாத ஆங்கிலேய ஆட்சி வேண்டும் என்று சொல்கிறீர்கள். உங்களுக்குப் புலி வேண்டாம். ஆனால் புலியின் இயல்பு வேண்டியிருக்கிறது... இதுவல்ல நான் விரும்பும் தன்னாட்சி.

அகிம்சை

தொகு
  • நான் போதிப்பது கோழைகளின் அகிம்சையை அல்ல.
  • அகிம்சையின் மூலமே மனித வர்க்கம் பலாத்காரத்திலிருந்து வெளியேறியாக வேண்டும்.
  • அகிம்சைப் போர் எப்போதும் உடன்பாட்டில் முடிகிறதே தவிர, எதிரியை பணிய வைப்பதிலோ, அவமானப்படுத்துவதினாலோ அது ஒருக்காலும் முடிவதில்லை.
  • அகிம்சையின் சக்தியை ஆண்களைக் காட்டிலும் பெண்களிடமே கடவுள் அதிகமாக திரட்டி வைத்திருக்கிறார். மவுனமாக இருப்பதனாலேயே அது அதிக பலனளிப்பதாகவும் உள்ளது.
  • அகிம்சையுடன் இணைந்த சத்தியாக்கிரகத்தின் மூலம் உலகையே உங்களுக்கு அடிபணியாகி செய்யலாம்.

இயற்கை

தொகு
  • ஒவ்வொரு மனிதனுின் தேவையையும் பூர்த்தி செய்வதற்கான வளங்களை இந்த பூமி தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆனால், அவர்களின் பேராசைக்குரியவற்றை அல்ல.

உண்மை

தொகு
  • உண்மை என் உடலில் ஊறிக் கிடக்கிறது. என்னிடமிருந்து அதனை எதனாலும் அகற்றிவிட முடியாது.[3]

தான் (காந்தி) விரும்பிய அமைச்சரவை

தொகு
  • இந்நாட்டின் பிரதமராக ஒரு விவசாயிதான் இருக்க வேண்டும். அவர் அரண்மனையில் வாழ்பவராக இருக்கக் கூடாது. அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கத் தேவையில்லை அவருடைய செயலாளராக நேரு இருந்து கொண்டு அயல் நாட்டுத் தூதுவர்களைச் சந்திப்பது போன்ற அலுவல்களைச் செய்ய வேண்டும். பிரதமராய் இருக்கும் விவசாயி ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் உழ வேண்டும்.[4]

தொழுநோயாளிகள்

தொகு
  • குஷ்டரோகி எனும் வார்த்தையே துர்நாற்றத்தைத் தருகிறது. மத்திய ஆப்பிரிக்காவுக்கு அடுத்தாற்போல இந்தியாவே தொழுநோயாளிகளின் மிகப் பெரிய இருப்பிடமாக இருக்கக்கூடும். இருப்பினும், மிக உயர்ந்தவர்கள் எப்படி நம்மில் ஒருவரோ, அப்படியே குஷ்டரோகிகளும் நம்மைச் சார்ந்தவர்களே. உயர்ந்த மனிதர்கள் மற்றவர்களின் கவனத்துக்கு ஏங்கி நிற்பவர்கள் அல்ல என்ற போதிலும், நம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்கள். ஆனால் விசேஷமாகக் கவனிக்கப்பட வேண்டிய குஷ்டரோகிகளோ மனமறிந்து ஒதுக்கப்படுகிறார்கள். இதை இதயமற்ற செயல் என்றே குறிப்பிடத் தோன்றுகிறது. ஒவ்வோர் ஆண்டும் நமது நாடு சில லட்சம் நல்ல மக்களை ஏழைகளை, தொழுநோயாளிகள் என்று கூறி ஒதுக்கி வைக்கும் பாவத்தை இனியும் அனுமதிக்கத்தான் வேண்டுமா?” - புதிய இந்தியாவின் நிர்மாணத் திட்டத்தில் (1941) கூறியது: [5]

பேச்சு சுதந்திரம்

தொகு
  • பேச்சு சுதந்திரம் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால், ஒரு பேச்சு காயப்படுத்துமானால் கூட அதற்கு தடை இருக்கக் கூடாது, பத்திரிக்கை சுதந்திரம் உண்மையாகவே மதிக்கப்படுகிறது என எப்போது சொல்ல முடியும் என்றால் , பத்திரிக்கைகளில் கடுமையான சொற்களால் விமர்சிக்க முடிகிற போதும் தகவல்களை தவறாகக் கூட வெளியிட முடிகிற போதும் தான். கூட்டங்களில் புரட்சி திட்டம் தீட்டுவதற்கு முடியும் போது தான் அதற்கான சுதந்திரம் முழுமையை அடைந்ததாக பொருள்கொள்ள முடியும்.[1]

மதவெறி

தொகு
  • எனக்கு மட்டும் அதிகாரம் இருக்குமானால் வகுப்புவாதத்தையும், மதவெறியையும், வெறுப்புணர்வையும், பகையையும் வளர்க்கக் கூடிய எல்லா எழுத்துக்களையும் தீண்டத்தகாதவையாக நான் அறிவிப்பேன்.[1]
  • இந்துக்களை அழிப்பதன் மூலம் முஸ்லீம்கள் இஸ்லாத்துக்கு சேவை செய்ய இயலாது, மாறாக அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை அழித்தவர்கள் ஆவார்கள். அதேபோல் இஸ்லாமியத்தை அழித்துவிடலாம் என்று இந்துக்கள் நம்புவார்களானால், அவர்கள் இந்து தர்மத்தை அழிப்பவர்களாவார்கள்.[1]

மதம்

தொகு
  • மதம் பல கிளைகளைக் கொண்ட ஒரு மரமாகும். கிளைகள் என்ற முறையில் பல மதங்கள் இருப்பதாக நீங்கள் சொல்லக்கூடும். மரமாக இருக்கும் மதம் என்னமோ ஒன்று தான்.[1]
  • நமது ஒவ்வொரு செயல்பாட்டிலும் மதம் ஊடுருவி இருக்க வேண்டும் . ஆனால் இங்கே மதம் என்பது குருகியவாதமாகது, முறைபடுத்தப்பட்ட அறவழிப்பட்ட பிரபஞ்ச நிர்வாகம் என்பதில் ஒரு நம்பிக்கை என்பதே இதன் பொருள்...இந்த மதம் இந்து, இஸ்லாம், கிறித்தவம் முதலியவற்றுக்கு அப்பாற்பட்டது.[1]
  • ஒரு இடத்தில் கூடும் பல சாலைகள் போலவே மதங்கள்.நாம் ஒரே முடிவை நோக்கி பயணிக்கிறோம் எனில் எந்த சாலையில் செல்கிறோம் என்பது முக்கியம் இல்லை.இதற்காகச் சண்டையிட என்ன அவசியம்?
  • இரகசியமானாலும் சரி. வெளிப்படையானாலும் சரி. யுத்தம் காட்டுமிராண்டித்தனமான முறையாகும்.[6]
  • மாஷினோ அரண்தான் சீக்ஃபிரீட் அரணுக்கு அவசியத்தை உண்டாக்கியது.[6]

( இரண்டாவது உலகப் போரில் மாஷினோ அரண் பிரான்ஸ் நாட்டின் கீழ் எல்லையில் அமைந்திருந்தது. அதற்குப் போட்டியாக ஜெர்மனி தன் மேல் எல்லையில் சீக்ஃபிரீட் அரணைக் கட்டியது)

  • பலாத்காரத்தையே நம்பி உபயோகிப்பவன், செக்கு மாட்டினைப் போல, வட்டமாகச் சுற்றிக்கொண்டேயிருப்பான்.[6]
  • ஈக்களை வதைப்பதில்கூடநம்பிக்கையில்லை. [7]
  • பலாத்காரப் போராட்டத்திற்குப் பயிற்சி பெறுவதில் கொலை செய்து பழக வேண்டியிருப்பது போல் அஹிம்சையில் பயிற்சி பெறுவதற்கு ஒருவன் தானாக உயிர்துறக்கப் பழகவேண்டும்.[7]
  • பலாத்காரம், தண்ணீரைப் போல், தான் வெளியேறுவதற்கு வழி கிடைத்துவிட்டால், மேலும் அதிக வேகத்துடன் பாய்ந்து செல்லும்.[7]
  • இக்காலத்தில் நடைபெறும் சர்வ வியாபகமான யுத்தம் ஏற்படுகின்றது. - மகாத்மா காந்தி[7]

நபர் குறித்த மேற்கோள்கள்

தொகு
  • மனிதருள் தலைசிறந்த மாமனிதன் என்று மக்களால் மதிக்கப்பட்ட மகாத்மாகாந்தி, தனது ஆளுமைச்சிறப்பால் அனைவரையும் தன்வழியே அழைத்துச் சென்றாரே, அது எப்படி? அவர் அரசியல்வாதி மட்டுமல்ல; மிகச்சிறந்த பண்பாட்டுவாதி, ஆன்மிகவாதி, ஒழுக்கவாதி, உண்மைவாதி, சிந்தனைவாதி, செயல்வாதி. அதனால் தான் இந்திய நாட்டுக்கு கத்தியின்றி, ரத்தமின்றி, விடுதலை வாங்கித் தந்து இந்த உலகில் எதனையும் சாதித்துக் காட்டமுடியும் என்று செயல்பட்ட அரிய செயல் வீரராக வாழ்ந்தார். விடாமுயற்சி, யூகம், அதன்மீது எழும் தன்நம்பிக்கை போன்ற நல்ல சிந்தனைகளால் அவர் ஓர் மனிதப்புனிதனாக கோடானுகோடி மக்கள் நலனுக்காக உழைத்து குணச் சிறப்புகளால் வாழ்ந்து மறைந்தார்.-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்[8]

காந்தி லெனின் ஒப்பீடு

தொகு
  • லெனின் வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட பெரிய ஆல்ப்ஸ் மலையாகவே தோன்றுவார். காந்தியோ அட்டையில் செய்யப்பட்ட செயற்கை மலையாகவும், வேகமாக உடைந்து சிதறுகிறவராகவும், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மக்களால் அறவே மறக்கப்பட்டு, வரலாற்றின் குப்பைக்கூடையில் மட்டுமே இடம்பெற்றவராகவும் தோன்றக்கூடும். விலையுயர்ந்த உலோகங்களையும் அவற்றைப் போலவே தோற்றம் தரும் போலிகளையும் காலமும் சம்பவங்களும்தான் பிரித்துக் காட்டுகின்றன!” - இவான் மெய்ஸ்கி சோவியத் உருசியாவின் பிரித்தானிய தூதராக 1932 முதல் 1943 வரையில் பதவி வகித்தவர் (காங்கிரஸிலிருந்து காந்தி (தற்காலிகமாக) விலகிவிட்டார் என்ற செய்திக்குப் பிறகு, 04.11.1934- இல் தனது நாட்குறிப்பில் மெய்ஸ்கி பதிவுசெய்தது)[9]
  • “காந்தி தனிப்பட்ட முறையில் நேர்மையாளராக இருந்தாலும் பிற்போக்கான சிந்தனையாளர், மதத்திலும் தனிமனிதர்களின் மனசாட்சி மீதும் நம்பிக்கை வைப்பவர். லெனினோ பொருளாதார ஒடுக்குமுறைகளுக்குக் கட்டமைப்பிலேயே நிலவும் காரணங்கள் எவையென்று அறிந்தவர். அனைத்து மக்களையும் திரட்டி அந்தச் சுரண்டலுக்கு முடிவுகட்ட முயன்றவர். கடந்துவிட்ட பழைய காலத்தை மீண்டும் உருவாக்க முயல்கிறவர் காந்தி. நவீன நாகரிகத்தில் கிடைத்த சாதனைகளை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, சமூகத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுபவர் லெனின்” - ஸ்ரீபாத அம்ரித் டாங்கே (இவர் 1921 இல் எழுதிய ‘காந்தியும் லெனினும்’ என்ற சிறு நூலில்)[9]
  • “சாத்வீகப் போராட்டத்தின் மூலம் இந்த பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றிவிடலாம் என்ற உடோப்பிய முறை இத்துடன் முடிவுக்கு வருகிறது. இந்த முறையால் எந்தவிதப் பலனும் இல்லை என்று வளர்ந்துவரும் இளைய சமுதாயம் சந்தேகமே இல்லாமல் நன்கு உணர்ந்திருக்கிறது” “காந்தியைப் பின்பற்றுவதைக் கைவிட்டுவிட்டு, லெனின் காட்டும் வன்முறை சார்ந்த புரட்சிகரப் பாதையைத் தேர்ந்தெடுங்கள்“ பகத் சிங் (நாடாளுமன்றத்தின்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதற்காக கைதுக்குப் பிறகு விடுத்த அறிக்கையில்.)[9]
  • “இருவருமே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இரண்டு பெரிய நாடுகளுக்கு இருவருமே புதியதொரு திசையைக் காட்டியுள்ளனர். லெனின் 53 வயதிலேயே இறந்துவிட்டார். அவர் மட்டும் காந்தியைப் போல நீண்ட நாட்களுக்கு வாழ்ந்திருந்தால் ஸ்டாலினும் வந்திருக்க மாட்டார். ஹிட்லர் வரலாற்றில் இடம்பெற்றிருப்பார் என்று நினைக்கிறீர்களா?” _ இலக்கிய விமர்சகர் சிரில் கானாலி (லண்டனிலிருந்து வெளிவந்த ‘சண்டே டைம்ஸ்’ இதழில் 1972 ஜனவரியில் எழுதிய கட்டுரையில்)[9]
  • படித்தவர்கள் - பாமரர்கள் என்று அனைவரிடையேயும், இறப்புக்குப் பிறகு காந்தியின் புகழ், லெனினுடைய புகழைவிட அதிகம். தார்மீக, அரசியல் முன்னோடி, வெவ்வேறு மதங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் யார் என்றால், அது அகிம்சையைப் போதித்த காந்தியாகத்தான் இருக்க முடியுமே தவிர, ‘ஆயுதம் எடுத்துப் போரிடுங்கள், வர்க்கங்களுக்கிடையே போர் நடக்கட்டும்’ என்று கூறிய லெனின் அல்ல என்பது என்னுடைய கருத்து. -ராமசந்திர குகா வரலாற்றாளர் (காந்தி லெனின்: ஒரு வரலாற்று ஒப்பீடு கட்டுரையில்)[9]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "மகாத்மா –மதச்சார்பின்மை, மதவெறி" எனும் தலைப்பில் பிபன் சந்திரா, ஆற்றிய உரை2003 ஆம் ஆண்டு.
  2. An atheist with Gandhi என்ற 'கோரா'வின் புத்தகத்தில்.
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  4. "வீர சுதந்திரம் வேண்டி..." புத்தகத்தில் இருந்து, பக்கம் 65
  5. தி இந்து, நலம்வாழ இணைப்பு, 2016 ஆகத்து 20, தொழுநோய்: மாற்றத்தின் தொடக்கமாவோம்!
  6. 6.0 6.1 6.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 307-309. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. 7.0 7.1 7.2 7.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 259-260. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  8. என். வி. கலைமணி (1999). ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 9-41. பாரதி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 லெனின்: ஒரு வரலாற்று ஒப்பீடு. தி இந்து. Retrieved on 30 சனவரி 2020. ராமசந்திர குகா

வெளி இணைப்புகள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=காந்தி&oldid=36707" இலிருந்து மீள்விக்கப்பட்டது