பெருந்தொற்று


வெளியீட்டு விபரம்:

பெருந்தொற்று, ஷாராஜ் எழுதிய தமிழ்ப் புதினம். 2021 ஆம் ஆண்டில், ஸீரோ டிகிரி பப்ளிகேஷனால் வெளியிடப்பட்டது.


கதைச் சுருக்கம்:

உலகைப் புரட்டிய பேரதிர்வுகளைத் தந்த, இன்னும் தீராத கொடுந்துயர் - கொரோனா பெருந்தொற்று. இந் நூற்றாண்டின் மகா பேரழிவுகளில் ஒன்றான அது, தனி மனித நிலை, குடும்பச் சூழல், சமூகம், அரசியல், அன்றாட வாழ்வு, பண்பாடு உள்ளிட்ட பல்வேறு தளங்களிலும் கடுமையான தாக்கத்தையும், சீர்குலைவுகளையும் ஏற்படுத்திவிட்டது.

இந்தப் பெருங்கொள்ளை இந்தியாவில் பெரும் பாதிப்புகளை உண்டாக்கிக்கொண்டிருந்த 2020-ஆம் ஆண்டு முற்பகுதியில், அதை மையப்படுத்தி நிகழ்ந்த, மத ரீதியான கலவரச் சூழலும் மறக்க முடியாதது. கொந்தளிப்பு மிகுந்த அந்த நாட்களில், ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேலாக நல்லிணக்கத்திற்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்துவந்த தமிழக குக்கிராமம் ஒன்றில் ஏற்பட்ட கொடூரமான விளைவுகளைச் சித்தரிக்கிறது இப் புதினம்.


மேற்கோள்கள்:

  • தொப்புள்கொடி அறுத்தாலும் தாய் – புள்ளை உறவு அறுபடும்ங்களா?

(அத்தியாயம் 6-ல், யேவாரி பகவதி செட்டியார் என்னும் பாத்திரத்தின் பேச்சில் இடம்பெறும் வாக்கியம்)


  • ஞானிகளும் பாமரர்களும் மட்டுமே அனைத்து மதங்களின் ஆன்மாவும் ஒன்று என்று ஏற்றுக்கொள்வார்கள். இடையில் உள்ளவர்களும், மத வியாபாரிகளுமான மதகுருக்கள், மத அறிஞர்கள், மதப் பிரச்சாரகர்கள், மதவாதிகள் முதலானவர்கள் மதங்களின் ஆன்மாவைத் தவறவிட்டு, அவற்றின் உடலை மட்டும் பார்த்து, அவை வேறு வேறு என்று வாதிடவும், அவற்றின் விளைவாக தமக்குள் மோதிக்கொள்ளவும் செய்வார்கள்.

(அத்தியாயம் 13-ல், யோகி நிர்விகல்பா என்னும் பாத்திரத்தின் பேச்சில் இடம்பெறும் வாக்கியம்)


  • “நன்மை – தீமை, ரெண்டும் கலந்ததுதான் இந்த ப்ரபஞ்சம், மனுசன், மனஸ் எல்லாமே…! தீமைக்கு எதிரான போராட்டத்துக்காக மனுசன் உருவாக்குனதுதான் கடவுள், மதம், ஆன்மிகம் எல்லாமும். ஆனா, பின்னாடி வந்தவங்க ஆன்மிகத்தை விட்டுட்டு, கடவுளையும் மதத்தையும் கொரங்குப் புடியாப் புடிச்சுட்டாங்க. அதனாலதான் உலகம் முழுக்க மதப் பிரச்சனைகள் காலம் காலமாத் தொடர்ந்துட்டிருக்குது.”

(அத்தியாயம் 13-ல், ஏசு நபி புத்தர் என்னும் பாத்திரத்தின் பேச்சில் இடம்பெறும் வாக்கியங்கள்)


  • ஆட்டுக்குட்டி அவுரோட கட்டுரைப் பேப்பரைத் தின்னுருச்சுன்னாக் கூட, அறிவுஜீவியா ஆயிரும்.

(அத்தியாயம் 14-ல், மூளைக்காரன் என்னும் பாத்திரத்தின் பேச்சில் இடம்பெறும் வாக்கியம்)


  • கடவுள்ங்கறது மதங்கள் சொல்ற மாதிரி, ஒரு உயிரியோ, நம்மளை மாதிரி ஒரு நபரோ அல்ல. ப்ரபஞ்ச ஆற்றலுக்கு மதங்களும், ஆன்மிகமும் குடுத்த உருக்கொடுப்பு(embodiment)தான் கடவுள்.

(அத்தியாயம் 15-ல், ஏசு நபி புத்தர் என்னும் பாத்திரத்தின் பேச்சில் இடம்பெறும் வாக்கியங்கள்)


  • “சொர்க்கமும் நரகமும், தேவர்களும் அசுரர்களும், கடவுளும் சாத்தானும், மனுசனுக்குள்ளதான்!”

(அத்தியாயம் 15-ல், ஏசு நபி புத்தர் என்னும் பாத்திரத்தின் பேச்சில் இடம்பெறும் வாக்கியம்)


  • // அன்பே கடவுள், அறிவே கடவுள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், கடவுள்கள் அன்பானவர்களாக இருக்கிறார்களா என்பதுதான் கேள்விக்குறி. // கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் மனிதர்கள் செய்கிற கொடுங்கோன்மைகள், பஞ்சமா பாதகங்கள் வேறு விஷயம். அந்தக் கடவுள்களே அவற்றை உண்டாக்கி, செயல்படுத்துவது பெரும் கொடுமையல்லவா! //

(அத்தியாயம் 17-ல், குறிஞ்சிநாதன் என்னும் பாத்திரத்தின் எண்ண ஓட்டமாக இடம்பெறும் வாக்கியங்கள்)

"https://ta.wikiquote.org/w/index.php?title=பெருந்தொற்று&oldid=38179" இலிருந்து மீள்விக்கப்பட்டது