பம்மல் சம்பந்த முதலியார்
பம்மல் சம்பந்த முதலியார் (1873 - 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.
இவரது கருத்துகள்
தொகு- முதல் தாரம் தப்பிப் போகவே என் தகப்பனர் இரண்டாம் தாரமாக வயது வந்த ஒருபெண்ணை விவாகம் செய்து கொள்ள விரும்பினார். அன்றியும் அப்பெண் சிவப்பாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமென்று கூறினாராம். அப்படிப்பட்ட பெண்ணாகக் கிடைக்கவே என் தாயாரை விவாகம் செய்து கொள்ள நிச்சயித்தாராம். இவ்விவாகத்துக்கு இடையூறாக ஒரு சந்தர்ப்பம் நேரிட்டது. அதாவது அக்காலத்திய வழக்கத்தின்படி கலியாணப் பெண்ணின் ஜாதகத்தை வரவழைத்துச் சென்னையிலுள்ள இரண்டு மூன்று பெரிய ஜாதகத்தில் நிபுணர்களாகிய ஜோதிடர்களுக்குக் காட்ட, அவர்களெல்லாம் இந்தப் பெண்ணின் ஜாதகத்தில் இரண்டு குறைகள் இருக்கின்றன. ஒன்று அமங்கலியாய்ப் போவாள். இரண்டு, குழந்தைகள் பெறமாட்டாள். இதற்குக் கழுத்துப் பொருத்தமில்லை வயிற்றுப் பொருத்தமில்லை என்று சொன்னார்களாம். இதைக் கேட்டும் என் தாயாரையே மணக்க வேண்டுமென்று ஒரே பிடிவாதமாய் மணம் செய்து கொண்டார். கழுத்துப் பொருத்தமில்லை என்றதற்கு நேர்விரோதமாக என் தாயார் என் தகப்பனுருக்கு ஷஷ்டி பூர்த்தி-அதாவது அறுபது வயது கலியாணம் ஆனபிறகு, ஒரு மாங்கலியத்திற்கு இரண்டு மாங்கல்யங்களுடன் சுமங்கலியாகச் சொர்க்கம் சென்றனர். வயிற்றுப் பொருத்தமில்லை என்றதற்கு நேர் விரோதமாக என் தாயாருக்கு நாங்கள் எட்டு மக்கள் பிறந்தோம். நான்கு பிள்ளைகள், நான்கு பெண்கள். அதன் பிறகு எங்கள் விவாகத்திற்கெல்லாம் யாராவது எங்கள் ஜாதகத்தைக் கேட்டால் மேற்கண்ட கதையைச் சொல்லி ஜாதகமே வைப்பதில்லை என்று சொல்லியதை நான் கேட்டிருக்கிறேன்.[1]
குறிப்புகள்
தொகு- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 121-128. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.