நீதி குறித்த மேற்கோள்கள்:

  • நீதியாயிருங்கள். அஞ்சவேண்டாம் உங்களுடைய நோக்கங்களெல்லாம் உங்கள் தேசத்திற்காகவும், உங்கள் கடவுளுக்காகவும், உண்மைக்காகவும் இருக்கட்டும். -ஷேக்ஸ்பியர்[1]
  • மனிதர்க்குத் தீங்கு செய்யாமலிருப்பது நீதி, அவர்க்குப் பிழை செய்யாதிருப்பது கௌரவத்திற்கு அழகு. - ஸிஸரோ[1]
  • நீதி நம் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் நமக்குரிய பாதுகாப்பாகும். இதற்குப் பணிந்து நடத்தலே நாம் அதற்காகக் கட்டும் தவணைக் கட்டணம். - பென்[1]
  • நீதியைப்பற்றிய உணர்ச்சி உலகில் மனிதசமூகம் முழுமைக்கும் பொதுவாக விளங்கும் அளவுக்கு இயற்கையாக உள்ளது. அது எல்லாச் சட்டங்களையும். எல்லாக் கட்சிகளையும், எல்லாச், சமயங்களையும் கடந்து நிற்பதாகத் தோன்றுகின்றது. - வால்டேர்[1]
  • கண்ணியமான மனிதன் எப்பொழுதும் நீதியாகவே சிந்தனை செய்கிறான். - ரூஸோ[1]
  • நீதிபதிகள் சாதுரியமாயிருப்பதைவிட அதிகம் கற்றவர்களாய் இருக்கவேண்டும். வழக்கை ஆராய்வதைவிட மரியாதையுள்ளவர்களாயும், தாமே நம்பி உறுதி செய்வதைவிட அதிக ஆலோசனை கேட்பவர்களாயும் இருக்க வேண்டும். -அடிஸன்[1]
  • கட்சி, நட்பு உறவு ஆகியவற்றையெல்லாம் நீதி ஒதுக்கிவிடுகின்றது. அதனாலேயே அது (நீதி தேவதை) குருடாயிருப்பதாகச் சித்திரிக்கப்பெறுகின்றது. - அடிஸன்[1]
  • நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளை நேர்மையானவைகளாகச் செல்ல வேண்டுமானால், அவர்கள் வாதியையோ பிரதிவாதியையோ வக்கீலையோ பார்க்காமல் வழக்கை மட்டுமே கவனிக்க வேண்டும். -பி. லிவிங்ஸ்டன்[1]
  • ஒரே மனிதனுடைய வார்த்தைகள் எவனுடைய வார்த்தைகனாகவும் ஆகமாட்டா நாம் இரு கட்சிகளையும் அமைதியாகக் கேடக வேண்டும். - கதே[1]
  • நல்ல அரசாங்கத்திற்கெல்லாம் பொதுவானது நீதி; பாரபட்சமின்மையே நீதியின் உயிர்.[1]
  • ஞானமில்லாமல் நீதி செலுத்துவது இயலாது.[1]
  • பலவிதமான சட்டங்களை இயற்றி நீதியைக் கட்டுபபடுத்துவதும், நீதிபதிகளையே அதிகம் நம்பி விட்டுவிடுவதும். ஒன்றுக் கொன்று எதிர்ப்பக்கங்களிலுள்ள இரண்டு பாறைகள்: இந்தப் பாறைகளின்மீதே சட்டங்களியற்றுவோரின் அறிவு மோதி உடைந்துவிடுகின்றது. முதல் விஷயத்தில், போர்வைகளால் மூச்சுத் திணறி இறந்து போன சக்கரவர்த்தியை உதாரணமாய்க் கூறலாம்; குளிரைக் காப்பதற்காகவே அவருக்குப் போர்வைகள் போடப்பெற்றிருந்தன; மற்ற விஷயத்தில், எதிரிகளிடம் தன் கோட்டைகளை விட்டுவிட்ட நகரத்தை உதாரணமாகக் கூறலாம். அந்நகர மக்கள் தாங்கள் தைரியத்தை மட்டுமே நம்பியிருப்பதாகக் காட்டிக்கொள்ளவே அப்படிச் செய்தார்களாம். - கோல்டுஸ்மித்[1]
  • சுதந்தரமும் நீதியும் எப்பொழுதெல்லாம் பிரிந்து செல்ல ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் இரண்டுக்கும் ஆபத்து என்பது என் அபிப்பிராயம். - பர்க்[1]
  • தாமதமாக அளிக்கும் நீதி. இல்லை என்று மறுக்கப்பெற்ற நீதியாகும். - கிளாட்ஸ்டன்[1]
  • நீதி மெதுவாக அசைந்து ஆடிக்கொண்டு செல்வதால், அதன் தாமதத்தால், குற்றம் பல சமயங்களில் தப்பி ஓடிவிடுகின்றது. அதனுடைய மந்தமான, சந்தேகமான போக்கு பலரைக் கண்ணீர் பெருகும்படி செய்துவிடுகின்றது. - கார்னீலி[1]
  • நீதிக்குப் பொருத்தமாயுள்ளது சட்டங்களுக்கும் பொருத்தமாயிருக்க வேண்டும். - சாக்ரடீஸ்[1]
  • கடவுளுடைய திரிகை மெதுவாகத்தான் திரிக்கும். ஆனால், நிச்சயமாகத் திரிக்கும். - ஹெர்பெர்ட்[1]
  • நீதியாயிருக்கக் கற்றுக்கொள்ளாத ஒரு ஜன சமூகம் எப்படிச் சுதந்தரமாயிருக்க முடியும்? - ஸீயெஸ்[1]
  • நீதியாக மட்டும் இருப்பவன் கொடுமையானவன். எல்லோரும் நீதியான முறையில் (கண்டிப்பாக) நடத்தப்பட்டால், பூமியிலே எவர் வாழ முடியும்? - பைரன்[1]
  • தீமை செய்பவர்கள் யாராக இருந்தாலும்; அவர்களுக்கு நீதி பதிலாக அமைதல் வேண்டும். அன்பு செலுத்துபவர்களுக்கு அந்த அன்பே பதிலாக அமைதல் வேண்டும். -கான்பூசியசு[2]

குறிப்புகள் தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 239-241. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நீதி&oldid=21923" இலிருந்து மீள்விக்கப்பட்டது