கே. விநாயகம்

அரசியல்வாதி

தணிகை மீட்ட தளபதி எனப் பரவலாக அறியப்படும் கே. விநாயகம் திருத்தணியை தமிழகத்துக்கு மீட்டுக் கொடுக்கப் போராடியவர். ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாட்டில் இருந்து பிரிந்த போது திருப்பதிக்கு தெற்கில் இருந்த பல பகுதிகள் தமிழகத்தோடு 1960ஆம் ஆண்டில் தான் இணைக்கப்பட்டது. அதை மீட்டு தந்ததில் பெரும்பங்கு விநாயகத்தைச் சேரும்.

இவர் ஆற்றிய சட்டமன்ற உரைகள் கீழே தொகுக்கப்படுகின்றன.[1]

தெலுங்குத் திணிப்பு எதிர்ப்பு

தொகு

சித்தூர் மாவட்டம் ஆந்திரர்களின் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் சித்தூர் மாவட்டம் பல மொழியினர் கூடி வாழும் மாவட்டம் ஆகும். தமிழர்களே பெருவாரியாக இங்கு வாழ்கின்றனர். ஆனாலும் தாலுகா அலுவலகங்கள், போலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றில் தெலுங்கில் மட்டுமே ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டுள்ளது. கடந்த 1908-ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக அங்கு வாழும் தமிழர்களுக்கு தங்கள் தாய்மொழியைக் கற்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. நான் சித்தூர் மாவட்டத்தில் பிறந்தவன். ஆனாலும் தெலுங்கு மொழி படிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன். மாவட்டக் கழக ஆட்சியின் போது தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டன. தெலுங்கு பள்ளி கூடங்களில் படிக்க வேண்டிய கட்டாயம் தமிழர்களின் பிள்ளைகளுக்கு ஏற்பட்டது. ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது அனேகமாக எல்லா முதலமைச்சர்களும் தெலுங்கர்களாகவே இருந்தனர். பனகல்ராஜா, பி. முனிசாமி நாயுடு, சர். கே. வி. ரெட்டி, பொப்பிலி ராஜா போன்ற ஆந்திரர்கள் முதலமைச்சர்களாக இருந்த போது இம்மாவட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெலுங்கு மொழி பேசுபவர்களாக ஆக்கப்பட்டனர். இம்மாவட்டத்தில் வாழ்ந்த வன்னியர்கள் ரெட்டிகள் எனப் பட்டம் பூண்டனர். நானே கூட ரெட்டி என அழைக்கப்படுகிறேன். ஆனால் நான் முழுக்க முழுக்க மொழியினாலும் பண்பாட்டினாலும் தமிழனே. ஆனால் ரெட்டி என நாங்கள் பட்டம் பூண்டதால் எங்களை தெலுங்கர்களாகவே பதிவு செய்தனர். - சட்டமன்றம் 27-04-59

தமிழக வடக்கெல்லை மீட்புக்கு ஆதரவு

தொகு

ஆந்திர அரசு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மீதும் உரிமை கொண்டாடத் தொடங்கியிருக்கிறது. ஓசூர், கிருட்டினகிரி, குடியாத்தாம், பொன்னேரி, திருவள்ளூர். எத்தகைய ஆதாரமும் இல்லாமல் ஆந்திர அரசு இவ்வாறு உரிமை கொண்டாடுவதற்கு ஆழ்ந்த உள்நோக்கம் இருக்கிறது. திருத்தணி தாலுகாவைப் பொறுத்தவரையில் 73% தமிழர்கள் அங்கு வாழ்கிறார்கள். சித்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அங்கும் பெரும்பாண்மை தமிழர்களே இருக்கிறார்கள். தெலுங்கர்களை விட தமிழர்களின் எண்ணிக்கை 4000 அதிகம் ஆகும். - சட்டமன்றம் 23-11-55

தமிழக தெற்கெல்லை மீட்புக்கு ஆதரவு

தொகு

மாநில புணரமைப்புக் கமிசனின் தலைவர் சர். பசல் அலி பீகாரைச் சார்ந்தவர். அவருடைய சொந்த மாநிலமான பீகார் பற்றிய விவாதம் நடைபெற்ற போது அவர் அதில் கலந்துகொள்ளாமல் வெளியேறி விட்டார். அவருடைய இந்த நேர்மையான நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். ஆனால் கமிசனின் மற்றொரு உறுப்பினரான கே. எம். பணிக்கரிடம் இத்தகைய நேர்மையில்லை. தமிழ்நாடு, கேரளம் ஆகியவை பற்றிய பிரச்சினை விவாதிக்கப்படும் போது மலையாளியான அவர் இந்த கமிசன் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கக் கூடாது. குறிப்பாக தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களை பற்றிய பிரச்சினைகளில் அவர் அளவு கடந்து அக்கரை காட்டி இந்த தாலுக்கா கேரளத்துடனேயே இணைக்க வேண்டும் என்று கமிசனுக்குள்ளேயும், வெளியேயும் வாதாடி வருகிறார். - சட்டமன்றம் 23-11-55

ஆரணியாற்றுப் படுகை தொடர்பான பேச்சு

தொகு

ஆரணி ஆற்றுப் பாசனத்தில் உள்ள பெரும்பகுதியான நிலங்கள் தமிழகத்தில் உள்ளன. இப்போது கிராமங்களைப் பிரித்த பிறகு ஆரணியாறு அணை இருக்கக் கூடிய இடம் ஆந்திராவிறகுப் போய் விட்டது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 22 கிராமங்களில் உள்ள 13,000 ஏக்கர் நிலம் பாதிக்கப்டுகிறது. நீர்ப்பாசன வசதிகளைப் பிரித்து வைக்கக்கூடாது என்பதை மாநில அரசுகளும் மத்திய அரசும் ஒப்புக்கொண்டு இருக்கின்றன. ஆந்திராவில் உள்ள 13 கிராமங்களில் வசதிக்காக ஆரணி அணைப்பகுதி அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைப்பகுதியையும் 35 கிராமங்களையும் தமிழ்நாட்டுடன் தான் இணைத்து இருக்க வேண்டும். கிராமத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டால்தான் ஆரணி ஆற்றுப் பகுதி ஆந்திராவிற்குப் போய் விட்டது. பிர்க்காவை அடிப்படையாகக் கொண்டு பிரிவினை செய்திருந்தால் இந்தப் பகுதி தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும். சித்தூர், திருத்தணி, நகரி, சத்தியமேடு ஆகிய பிர்க்காக்கள் தமிழ்நாட்டிற்கும் கிடைத்திருக்கும். பிர்க்காவை அடிப்படையாக வைத்து பிரிவினை செய்யக்கூடாது என ஆந்திரக் கம்யூனிஸ்டுகளும், கிளர்ச்சி செய்தார்கள். அதை மத்திய காங்கிரசு ஆட்சி ஏற்றுக்கொண்டது. இதன் விளைவாக தமிழ்நாட்டிற்கு பாதகம் ஏற்ப்பட்டது. - சட்டமன்றம் 10-3-53

மூலம்

தொகு
  1. பழ. நெடுமாறன் (1995). தமிழன் இழந்த மண். தமிழ்க்குலம். pp. 26, 36, 39, 40, 44, 45, 48,. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=கே._விநாயகம்&oldid=38301" இலிருந்து மீள்விக்கப்பட்டது