காலம் பறந்து செல்வது. நம் இளமையில் இறைவனை நாம் நினைவில் கொள்ளாவிடில், முதுமையில் அவனைப் பற்றி எண்ண ஆற்றல் நமக்கு இல்லாது போகும்.

—ஹான்ஸ் கிரிஸ்ட்டியன் ஆண்டர்லைன்

காலமெனும் முட்டாள், ஓசைப்படாமல் விரைந்து கடக்கின்றான்; காளைப் பருவம் பற்றி நான் கனவு கானும் முன்பே, முதுமை நெருங்குகிறது.

—வில்லியம் கிஃப்போர்ட்

கெட்டுப் போய் விட்டது காலமல்ல, மனிதன் தான்.

—ஜே. ப்யூமாண்ட்

நாம் வாழும் காலத்தைப் பழிப்பது, அதிகாரத்தில் உள்ளவர்களைக் குறை கூறுவது, கடந்த காலத்தை எண்ணிக் கண்ணிர் சிந்துவது, எதிர் காலத்தைப் பற்றி ஆதாரமற்ற கனவுகள் காண்பது, இது மனித சமுதாயத்தில் பெரும் பகுதியினருக்கு இயல்பு.

—எட்மண்ட் பர்க்

காலம் என்பது, கடக்கும் கிகழ்ச்சிகளால் உருவான ஆறு, கட்டுக்கடங்கா வேகம் கொண்ட நீரோடை அது. ஒரு பொருள் கண்ணுக்குப் புலப்பட்ட உடனேயே, அது அடித்துச் செல்லப் படுகிறது. இன்னொன்று அதன் இடத்தில் வந்து, அதுவும் அடித்துச் செல்லப்படுகிறது.

—மார்க்கஸ் அரேலியஸ்

சிந்தனை, வாழ்வின் அடிமை;
வாழ்வு, காலத்தின் ஏமாளி;
உலகனைத்தும் அளக்கும் காலம்
ஒரு நேரம் நின்றுவிடும்.

—வில்லியம் ஷேக்ஸ்பியர்

வாழ்வின் காலம் குறுகியது; குறுகியதைப் புன்மையாய்க் கழிப்பது, கொடியதை நெடிய தாக்கிவிடும்.

—வில்லியம் ஷேக்ஸ்பியர்

கொடுங்கோலர்களில் தலையாயது, காலம். முதுமையை நோக்கி நாம் வளர்ந்து செல்கையில் நம் உடல் நலன், உடல் உறுப்புகள், புலன்கள், வலிமை, இயல்புகள், அனைத்தின் மீதும் வரி விதிக்கின்றார், அக் கொடுங்கோலர்.

—ஜான் ஃபாஸ்ட்டர்

நாம் பெரிதும் விரும்புவதும், அந்தோ, மிக மோசமாகப் பயன்படுத்துவதும், காலமே.

—வில்லியம் பென்

ஒழுக்கத் துறையில்கூட, பலவற்றை சட்டப் படி நியாயப்படுத்தும் சக்தி, காலம்.

—ஹென்ரி எல் மெங்க்கென்

காலமே, காசு.

—புல்வர்.லிட்டன்

காலமே காசு என்பதைக் கருத்திற் கொள்.

—பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

ஆண்டவனுக்கு அடுத்தபடியாக காலத்தைப் போற்றுவதே, ஒழுக்க நடத்தையின் உயர்ந்த ஒரு விதி.

—ஜோஹன் லேவேட்டர்

நேரத்தை மட்டும் நாம் சரியாகப் பயன்படுத்தினால், போதிய காலம் நமக்கு எப்பொழுதுமே இருக்கும்.

—யொஹன் கேத்தே

வாழ்வை ஒரே நேரத்தில் வீசிப் பறி கொடுப்பது பற்றி எண்ணவே பயப்படுவதும், அதே சமயத்தில், சிறிது சிறிதாகவும் சிப்பம் சிப்பமாகவும் வாழ்க்கையை வீசி வினடிப்பதைப் பற்றிக் கவலைப் படாததும், எவ்வளவு மடைமை.

—ஜான் ஹோஷ்

அரை மணியைக் கூட அற்பமாகக் கருதுவதைக் காட்டிலும், அந்த அரை மணி நேரத்தில் மிக அற்புதமான காரியத்தைச் செய்து கொண்டிருப்பதே மேல்.

—யொஹன் கேத்தே

உறுதியான நண்பனாகவும், குணமாக்குபவனாகவும், இருக்கும் காலம், கருணையற்ற பகைவனாகவும் இருக்கும்.

—மகாத்மா காந்தி

நம் எண்ணங்கள் அனைத்தையும் விட, காலம், நமக்கு அதிகம் போதிக்கும்.

—பெஞ்சமின் டிஸ்ரேலி

இனிய பெண் ஒருத்தியுடன், இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்தால், ஒரு நிமிடம் போலவே, உனக்குத் தோன்றுகிறது. சூடான அடுப்பு மேல் நீ, ஒரு நிமிடமே உட்கார்ந்திருந்தாலும், அது உனக்கு இரண்டு மணி நேரமாகப் படுகிறது. அதுதான், 'சார்பியல் கோட்பாடு'.

—ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன்

காலமும் கடலலையும், காத்திருக்கா எம் மனிதனுக்கும்.

—ஆங்கிலப் பழமொழி

வருங்கால சந்ததியார்க்குக் காலம் அனைத்தையும் அம்பலப்படுத்திவிடும். அது பெரிய உளறுவாயன்; கேள்வி கேட்கப்படாத போது கூடப் பேசும்.

—யூரிப்பிடிஸ்

காலத்தின் துணையில்லாமல் நீ செய்யும் எதையும், காக்க உதவுவதில்லை, காலம்.

—அனட்டோல் ஃபிரான்ஸ்

காலம், குழந்தைப் பருவத்தின் கனத்த சிறகுகள்; வயதில், ஓசையின்றி விரைந்தோடும் ஆறு.

—வால்ட்டர் டெலாமேர்

நேரத்தைத் தேர்ந்தெடுப்பது, நேரத்தை மிச்சப்படுத்துவதாகும்.

—ஃபிரசன்ஸிஸ் பேக்கன்

காலத்தை வீணடிக்காத மனிதன். ஆண்டுகளில் குறைவாக இருந்தாலும், மணிக்கணக்கில் முதியவனாக இருக்கக் கூடும்.

—:பிரான்ஸிஸ் பேக்கன்

புதுப் பரிகாரங்களை மேற்கொள்ள மாட்டாதவன், புதுக் கேடுகளுக்குத் தயாராக இருக்க வேண்டும். புதுமைகளைப் புகுத்தும் தலையாய சக்தி, காலம்.

—ஃபிரான்ஸிஸ் பேக்கன்

நிகழ் காலத்தை நாம் கவனிப்போம். வருங்காலத்தைப் பொறுத்தவரை தருணம் வந்து வாய்க்கும்போது அதைச் சமாளிக்கும் வகையை நாம் அறிந்து கொள்வோம்.

—பியேர் கோர்னேய்ல்

சீராக ஒழுங்கு செய்யப்படும் நேரம், சீராக ஒழுங்கு செய்யப்பட்ட உள்ளத்திற்கு, உறுதியான அறிகுறி.

—ஸர் ஐஸ்க் பிட்மன்

நாம் உறங்குகிறோம். ஆனால், வாழ்வெனும் தறி ஒருபோதும் நிற்பதில்லை. கதிரவன் மறைந்த நேரம், நெசவிலிருந்த வடிவமைப்பு, காலையில் கதிரவன் உதிக்கும் நேரத்திலும், நெசவிலிருக்கும்.

—ஹென்ரி வார்ட் பீச்சர்

நான் நேரத்தை விரயமாக்கினேன். இப்பொழுது நேரம் என்னை விரயமாக்குகிறது;

—வில்லியம் ஷேக்ஸ்பியர்

கருத்துக்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கவே, காலம், எல்லாம் வல்ல இறைவனால் உருவாக்கப்பட்டது.

—நிக்கலஸ் மர்ரே பட்லர்

காலம், தலைசிறந்த ஆசான்.

—எட்மண்ட் பர்க்

காலம் பறக்கின்றது; நம்மையும் தன்னுடன் ஈர்த்துச் செல்கிறது. நான் பேசிக் கொண்டிருக்கும் நொடிப் பொழுது, ஏற்கனவே என்னை விட்டுத் தொலைவில் சென்று விட்டது.

—நிக்கோலா புவாலோ

காலமெனும் குடை இராட்டினம். இவ்வாறு தன் வஞ்சங்களை வெளிக் கொணர்கிறது.

—வில்லியம் ஷேக்ஸ்பியர்

கூழாங்கற்கள் பாவிய கரையை நோக்கி
வார்ப்புரு:Gapகடல் அலைகள் கடுகிச் செல்வதுபோல்,
கல்வாழ்வின் நிமிடங்கள் தங்கள் முடிவு நோக்கி,
வார்ப்புரு:Gapவிரைந்து செல்கின்றன.

—வில்லியம் ஷேக்ஸ்பியர்

வரையறை விளக்கம் செய்ய முடியாமலும், முரண்பாடுள்ள புதிராகவும் இருப்பவற்றில் தலையாயது, காலம், கடந்த காலம் சென்று விட்டது. எதிர்காலம் வங்து சேரவில்லை. நாம் விளக்கி இனம் காண முற்படும் நேரத்திலே, நிகழ்காலம், கடந்த காலமாகிறது; மின்னல் வீச்சுப் போல், தோன்றுவதும் மறைவதும், அக்கணமே.

—சார்ல்ஸ் கோல்ட்டஸ்

காலமெனும் நாடோடிக் கிழவா
உன்! கோல பவனியை சற்றே நிறுத்தி,
ஒரு காட்பொழுதேனும் தங்கிச் செல்லாயோ?

—ரால்ஃப் ஹாட்ஜ்ஸன்

மனிதன் ஓயாமல் கொல்ல முயல்வதும், மனிதனை இறுதியில் கொன்று முடிப்பதும் காலம்.

—ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர்

எனக்குரிய காலம் இன்னமும் தோன்ற வில்லை. சிலர், தங்கள் பிறவிக் காலம் முன்பே, பிறக்கின்றனர்.

—ஃப்ரீட்ரிஷ் நீட்ஷே.

ஒவ்வொரு சகாப்தமும், கருகி அழிந்து கொண்டிருக்கும் ஒரு கனவு; அல்லது, கருவில் உருக் கொண்டு இன்னும் பிறக்காத ஒரு கனவு.

—ஆர்த்தர் ஒ' ஷாக்னெஸ்ஸி

கடந்த காலத்தின் கதையைச் சொல்பவர்கள், வரலாற்று அறிஞர்கள். நிகழ்காலத்தின் கதையைச் சொல்பவர்கள், நாவலாசிரியர்கள்.

—எட்மண்ட், ஜூல்ஸ், தெ கோன் கூர்

வாழ்க்கையை நீ நேசிக்கிறாயா? அவ்வாறாயின், காலத்தை நீ விரயம் செய்யாதே. காலம் என்னும் கருப்பொருளைக் கொண்டு உருவாக்கப் பட்டதே, வாழ்க்கை.

—பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

காலங்கள், மாறுவதில்லை; மனிதர்கள்தான் மாறுகின்றனர்.

—திபெத் நாட்டுப் பழமொழி

'காலம் என்றால் என்ன?' என்றான், அவன். 'இப்போது' என்பதை நாய்களுக்கும் குரங்குகளுக்கும் ஒதுக்கு, 'எப்போதும்' என்பதே, மனிதனுக்கு உரியது.

—ராபர்ட் பிரெளனிங்

காலமும் வெளியும் போல், என்னைத் திகைக்க வைப்பது வேறெதுவுமில்லை. ஆயினும் அவற்றைப் பற்றி நான் அதிகம் கவலைப்படுவ தில்லை. ஏனெனில், அவற்றைப் பற்றி கான் எண்ணுவதேயில்லை.

—சார்ல்ஸ் லேம்ப்

செய்ய வேண்டியதை நாம் செய்வதில்லை; செய்யக் கூடாதவற்றைச் செய்து விடுகிறோம்; நல்ல காலம் நம்மைக் காத்துக் கரையேற்றுமென நம்பி, வாழ்நாளைக் நடத்துகின்றோம்.

—மேத்யூ ஆர்னால்ட்

எல்லாம் பறிபோன பின்பும், எதிர்காலம், மிஞ்சி நிற்கும்.

—கிரிஸ்ட்டியன் போவி

காலம் கடக்கின்றது என்று கூறுகிறாய். அங்தோ, பாபம்! காலம் நிலைக்கிறது; நாம்தான் கடக்கின்றோம்.

—ஆஸ்ட்டின் டாப்ஸன்

காலமெனும் மூலிகை , எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லது.

—பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

ஒவ்வொன்றிற்கும் அதற்கு உரிய நேரம் உண்டு. அங்நேரம் பார்த்துக் கவனமாய் இருக்க வேண்டும்.

—தாமஸ் ஃபுல்லர்

இன்றைய நாளை, இறுகப் பற்றிக் கொள், நாளைய நாளைப் பற்றி, அதிகம் நம்ப வேண்டாம்.

—ஹோரஸ்

காலம் என்பது, உன் வாழ்க்கையின் நாணயம். உன்னிடம் இருக்கும் ஒரே நாணயம். அதை எப்படிச் செலவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யக் கூடியது, நீ மட்டுமே. உன் சார்பில் மற்றவர்கள் அதைச் செய்ய அனுமதிக்காமல், எச்சரிக்கையாய் இரு.

—கார்ல் லேன்ட்பர்க்

நான் மீன் பிடிக்கச் செல்லும் நீரோடையே, காலம்.

—ஹென்ரி டேவிட் தோரோ

நேற்றையப் பொழுதைத் திரும்ப அழை; காலத்தை மீண்டும் வர கட்டளையிடு.

—வில்லியம் ஷேக்ஸ்பியர்

காலம், பல்வேறு பேர்களுடன் பல்வேறு கடை போடுகிறது. காலம், எவருடன் உலவுகிறது, எவருடன் குதிநடை போடுகிறது, எவருடன் பாய்ந்து ஓடுகிறது, எவருடன் நின்ற இடத்திலே நிற்கிறது என்று நான் உனக்குக் கூறுவேன்.

—வில்லியம் ஷேக்ஸ்பியர்

இவ்வாறாக, மணிக்கு மணி நாம் மலர்ந்து கனிகிறோம். பின்னர், மணிக்கு மணி, அழுகி அழிகிறோம். அதிலே அடங்கியுள்ளது ஒரு கதை.

—வில்லியம் ஷேக்ஸ்பியர்

காலத்துக்கு ஏவல் செய்யக் காத்திருப்போருக்கு, காலம் என்றும் துணை செய்யும்.

—மகாத்மா காந்தி

மற்றெல்லாக் காலங்களையும் போல், இந்தக் காலமும் மிக நல்ல காலம்தான்—அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை மட்டும் நாம் அறிந்து கொண்டால்.

—ரால்ஃப் வால்டோ எமெர்ஸன்

போன காலங்கள் இப்போதுள்ள காலங்களை விடச் சிறந்தவை, என்ற மயக்கம், எல்லாக் காலங்களிலும் ஓங்கி நின்றுள்ளது எனலாம்.

—ஹோரஸ் கிரீலி

வாழ்வை அளக்க வேண்டியது, சிந்தனையாலும் செயலாலும்—காலத்தால் அல்ல.

—ஸர் ஜான் லுப்பாக்

மாட்சிமை மிக்க ஒரு மணி நேர வாழ்வு, நற்சாட்சியம் சொல்லப் பேரில்லா யுகத்திற்குச் சமம்.

—சார்ல்ஸ் மார்டான்ட்

வருவது வரட்டும்,
நேரமும் மணியும் ஓடி,
இருள் கவியும் நாளும் கடந்து சென்று,
நெருகல் ஆகி விடும்.

—வில்லியம் ஷேக்ஸ்பியர்

வாழ்க்கை, வாழ்வதில்தான் உள்ளது ஒவ்வொரு நாளின், மணியின், இழைமத்தில் உள்ளது என்ற உண்மையை, காலம் கடந்த பின் தான், நாம் உணர்கிறோம்.

—ஸ்டீஃபன் லீக்காக்

காலம், பெரிதும் அரிதானது, உத்தமச் செயல்களைச் செய்து காலத்தைப் பயன்படுத்தும் மனிதன், மதிப்பு மிக்கவன்; ஒரு சமயம் கடந்து விட்ட காலம், ஒரு போதும் திரும்பாது.

—ஸ்ரீமத் ராஜேந்திர சூரி

செல்வம் அருமையானது; அதனினும் அருமையானது மனித வாழ்க்கை; அனைத்திலும் அருமையானது காலம்.

—ஏ. வி. லல்வரவ்

குறுகிய பாறை முகட்டில் நீ நிற்கிறாய். உனக்குப் பின்னால், கடந்த காலம் என்ற அதல பாதாளக் குழி. இப்பொழுது உள்ளவற்றை யெல்லாம் விழுங்கிவிடும் எதிர்காலம் உனக்கு முன்னால், எதுவுமே, சிறிது பொழுதுதான். குறுகிய பொழுதுதான், உன்னைத் துன்புறுத்தும் அல்லது மகிழ்விக்கும் என்று தெரிந்த பின்பும், அறிவில்லா மனிதனே, இங்த வாழ்வில் எப்பொருள் குறித்து நீ சஞ்சலமோ சங்தோஷமோ கொண்டு, உன்னையே உருக்குலைத்துக் கொள்கிறாய்?

—மார்க்கஸ் அரேலியஸ்

கண நேரச் சுணக்கமின்றி, முடிவில்லாத சுழற்சிதான், காலம். அதை வேறெந்த வகையிலும் கருத முடியாது.

—லியோ டால்ஸ்டாய்

எல்லாவற்றிற்கும் உரிய காலம் ஒன்றுண்டு; விண்ணுலகத்தின்கீழ் ஒவ்வொரு குறிக்கோளுக்கும் குறித்த ஒரு காலம் ஒன்று உண்டு.

—ஸாலமன் மன்னன் (விவிலியம்)

பிறக்க ஒரு காலம்; இறக்க ஒரு காலம்; நடவு செய்ய ஒரு காலம்; நட்டதைப் பிடுங்க ஒரு காலம்; கொல்ல ஒரு காலம்; குணமாக்க ஒரு காலம்; இடிக்க ஒரு காலம்; கட்ட ஒரு காலம்; அழ ஒரு காலம்; நகைக்க ஒரு காலம்; புலம்ப ஒரு காலம்; ஆடலாட ஒரு காலம்.

—ஸாலமன் மன்னன் (விவிலியம்)

காலம் தாழ்த்திச் செய்யும் இயல்புடையவன், மிகுதியான கால அளவில் சிறிய காரியத்தைச் செய்து முடிப்பான். அச்சிறு செயலால் விளையும் சுருங்கிய பயனால் துன்பமும் எய்துவான்.

—சுக்கிர நீதி

மக்கள்- இறைவனால் கொடுக்கப் பெற்ற இரண்டு வரங்களை எப்போதும் மறந்து விடுகிறார்கள். ஒன்று நேரம். மற்றொன்று ஆரோக்கியம்.

—முகம்மது நபி

விருப்பமும் நம்பிக்கையும் தூண்டுமிடத்தே. மனிதன் உயிருக்கு அஞ்சிப் பின்வாங்கலாகாது. பாதையில் ஒரு கணம்கூட தாமதிக்கக் கூடாது. ஒரு கணம்கூடச் சோம்பியிருக்கக் கூடாது. தாமதம் செய்பவன் பாதையினின்று வலிந்து புறத்தே தள்ளப்படுகிறான்.

—பரீத் உத்தீன் சுதீதர்

கண்ணைக் கலக்கும் கண்ணிர் எதையுமே, காலமும் பொறுமையும் துடைத்து விடும்.

—ப்ரெட் ஹார்ட்

இரும்பு சூடாக இருக்கும்போதே அதை அடித்து உருவாக்க வேண்டும்.

—டிக்கன்ஸ்

காலங் தவறாமையை வெற்றிகரமாகப் பின் பற்றினால் அது பிறருக்குத் திருப்தியளிக்கும். காலங் தவறுவது என்பது உறுதியற்ற தன்மையையும், மற்றவர்களின் வசதி பற்றிய கவலையின்மையையும், குறிக்கிறபடியால் பிறருக்கு அதிருப்தி தரும்.

—நிக்கல்ஸன்

நேரத்தின் அருமை அந்தந்த நேரத்தில்தான் நமக்குத் தெரிய வரும். நேரம் தவறிப்போன பின்தான் அதன் அருமை தெரிய வரும். எங்தப் பொருளுக்கும் கையில் இருக்கும் போது மதிப்பிருப்பதில்லை. கைதவறிப் போன பின்பே அதற்கு அதிக மதிப்பு ஏற்படும்.

—லார்டு புக்மாஸ்டர்

காலம் பொன்னைவிட மதிப்பு உயர்ந்த்து. பொன் போனால் சம்பாதித்துக் கொள்ளலாம். காலம் போனால் மீண்டும் வராது.

—ஸ்மைல்ஸ்

அற்பமான, பயனற்ற விஷயங்களில், நேரத்தைக் கூடுதலாகச் செலவழிப்பதைவிட, ஓர் அறிவாளிக்குத் தகுதியற்றதும், வருத்தப்படத்தக்கதும் வேறு எதுவுமில்லை.

—பிளேட்டோ

வாழ்க்கையை வளமாக்க விரும்பினால் காலத்தைக் கண நேரமும் வீணாக்கக் கூடாது. காலத்தால் செய்யப்பட்டதுதான் வாழ்க்கை.

—சாண்டர்ஸ்

காலத்தை வீணாக்குவது போன்ற சுலபமான காரியமும் இல்லை. அதைத் திருத்துவது போன்ற கடினமான காரியமும் இல்லை.

—ஹென்றி போர்டு

நேரத்தை வீணாக்காதே. ஏதாவது உபயோக மானவற்றிலேயே உன்னுடைய எல்லா நேரத்தையும் ஈடுபடுத்து. அனாவசியமான செய்கைகளை யெல்லாம் தவிர்த்து விடு. ஏனென்றால் வாழ்க்கையின் மூலப் பொருளே நேரம்தான்.

—பிராங்ளின்

ஐயோ, காலம் பறந்து கொண்டிருக்கிறதே என்று உணர்கிறவனே உண்மையான ஞானி.

—தாந்தே

காலத்தின் நிலையை அறிந்து கொள். காலமே உன் உயிர். அதை விணாக்குவது உன்னையே நீ கொலை செய்து கொள்வது போலாகும்.

—ஜேம்ஸ் ஆலன்

காலத்தில் தாமதம் வேண்டாம். தாமதங்களால் அபாயகரமான முடிவுகள் ஏற்படும்.

—ஷேக்ஸ்பியர்

செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குதலே அதிகச் செலவும், ஊதாரித்தனமுமாகும்.

—தியோப்ரேஸ்டஸ்

மணிகளுக்குச் சிறகுகள் உண்டு. அவை காலத்தை ஏற்படுத்தியவரிடம் சென்று, நாம் அவற்றை எப்படி உபயோகித்தோம் என்பதைத் தெரிவிக்கும்.

—மில்டன்

நம் கஷ்டங்களிலெல்லாம், தாமதத்தினால் ஏற்படும் கஷ்டங்களே மிக அதிகமாயும், அதிகப் பொருள் மதிப்புள்ளவையாயும் இருக்கின்றன.

—எட்வர்ட்ஸ்

ஓடுவதால் பயனில்லை; குறித்த நேரத்திற்கு முன்பே புறப்படுவதுதான் அவசியம்.

—லா பான்டெய்ஸ்

நான் எனக்குக் குறித்த நேரத்திற்குக் கால் மணி நேரம் முந்தியே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியுள்ளது.

—நெல்ஸன்

காலம், சிலர் முழுவதையும் வீணாக்குகின்றனர். அநேகர் பெரும் பகுதியை வீணாக்குகின்றனர். ஆனால் அனைவரும் சிறிதேனும் வீணாக்காமல் இருப்பதில்லை.

—மாத்யு அர்னால்டு

நாளை, நாளை என்று எதையும் தள்ளிப் போடாதே. உனக்கு நாளைய தினம் சூரியன் உதயமாகாமலே போகலாம்.

—சுரங்கீரீவ்

நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு வினாடியும் நம் வாழ்வில் மீண்டும் பெற முடியாப் பெரும் செல்வம் ஆகும்.

—கார்ல் மார்க்ஸ்

நேரத்தை கடவுளுக்கு அடுத்தபடியாக மதித்தல் ஒழுக்க முறையில் உயர்ந்த விதியாகும்.

—லவேட்டர்

செல்வ நிலையைப் பார்ககினும், வறுமையிலுள்ள நண்பனிடம், குறித்த நேரம் தவறாமல் நீ செல்ல வேண்டும்.

—சிலோ

ஒவ்வொரு தங்கச் சரிகையின் இழையில் எவ்வளவு மதிப்பு உள்ளதோ, அவ்வளவு மதிப்புள்ளது ஒவ்வொரு நிமிஷ நேரமும்.

—ஜான் மேஸன்

கோட்டானைப் பகற்காலத்தில் காக்கை வென்றுவிடும்; அதுபோல, பகைவரது முரண்பாட்டை வெல்லுதற்குத் தேவையான காலம் வேண்டும்.

காலத்தொடு பொருந்தச் செய்து ஒழுகுதல் தன்னிடமிருந்து நீங்காமல் செல்வத்தைத் பிணிக்கும் கயிறாம்.

வினைமுடித்தற் கேற்ற கருவிகளுடனே செய்யின், வினைகள் என்று சொல்லுதற் செய்தற்கேற்ற காலம் அறிந்து செய்தற்கரியகுரியன உளவோ?

காலம் அறிந்து இடம் அறிந்து செய்வானாயின், ஒருவன் உலகம் முழுமையும் கருதினாலும் கைக்கூடும்.

உலகம் முழுமையையும் கொள்ளக் கருதுபவர், அதற்குரிய காலத்தைக் கருதி மனச் சோர்வின்றி இருப்பர்.

மன எழுச்சியும் வலிமையும் உடையான் ஒருவன் அடங்கியிருத்தல், போர்க்கடா பகையைத் தாக்கப் பின்னே கால் வாங்கும். தன்மையைப் போன்றது.

அறிவுடையார் வெல்லுதற்குரிய காலததை கோக்கியிருந்து, உள்ளே சினங் கொண்டிருப்பர்

பகைவரைக் கானும் போது பணிந்து செல்க! அவர்கள் அழிதற்குரிய காலம் வந்துற்ற போது, அவர்தம் தலை இற்றுக் கீழே விழும்.

கிடைக்கக் கூடாத ஒரு காலம் கிடைக்குமானால், அப்பொழுதே எளிதில் செய்ய இயலாத செயலைச் செய்து கொள்க.

காலம் நோக்கி இருக்கும் காலத்தில் கொக்கு போன்று ஒடுங்கி உரிய காலத்தில் அக்கொக்குக் குத்துமாறு விரைந்து பகையைக் களைக.

குறிப்புகள்

தொகு
  • புலவர் த. கோவேந்தன் (டிசம்பர் 1988). அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும். சென்னை: பூவழகி பதிப்பகம். pp. 51-72. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=காலம்&oldid=37965" இலிருந்து மீள்விக்கப்பட்டது