உலகப் பழமொழிகள்

இந்தப் பக்கத்தில் உலகப் பழமொழிகள் தலைப்புவாரியாக தொகுக்கபட்டுளன.

அண்டை வீட்டார்தொகு

 • அண்டை அயலார் அனுமதித்தால்தான், நீ அமைதியோடு வாழலாம். -இந்தியா
 • அண்டை அயலான் தயவில்லாமல் எவனும் வாழ முடியாது. - டென்மார்க்
 • அண்டை வீட்டுக்காரருக்கு நஷ்டமில்லாமல் நாம் அடையும் இலாபமே இலாபம். - ஜெர்மனி
 • அண்டை வீட்டுக்காரரை நேசி, ஆனால் குறுக்குச் சுவரை இடித்து விடாதே. -இந்தியா
 • அண்டை வீட்டை விலைக்கு வாங்குவதைப் பார்க்கினும், அண்டை வீட்டானையே விலைக்கு வாங்கு. -உருசியா
 • அம்மா சொல்வது போல் உண்மை இராது, அயலார் சொல்வதே உண்மை. -இந்தியா
 • உன் அண்டை வீட்டுக்காரன் நல்லவனா யிருந்தால், உன் வீடு கூடுதலாக நூறு பவுன் பெறும். -செக்
 • உன் தலைக்குச் சேராத தொப்பியை அடுத்த வீட்டுக்காரர் தலையில் கட்டாதே. -இந்தியா
 • துருக்கியரைப் பற்றியும், போப்பாண்டவரைப் பற்றியும் பேச்சு வருகிறது; ஆனால் எனக்குத் தொந்தரவு கொடுப்பவன் என் அண்டை வீட்டுக்காரன். - இங்கிலாந்து
 • நரிகளை விட அதிகமாக நம் அக்கம் பக்கத்திலுள்ளவர்களே நம்மைக் கவனிப்பார்கள். - கிரீஸ்
 • நண்பர்கள் இல்லாமல் நாம் வாழலாம், அண்டை அயலார் இல்லாமல் வாழ முடியாது. - இங்கிலாந்து
 • நல்லவர்களின் நடுவில் வசித்தல் வெகு தூரத்தில் புகழப்படுவதைவிட மேலாகும். - நார்வே
 • பக்கத்து வீட்டுக்காரரே நாம் முகம் பார்த்துக் கொள்ளும் கண்ணாடி. - இங்கிலாந்து
 • பக்கத்து வீட்டுக்காரன் உன் பந்துவைவிட நெருங்கினவன். -அல்பேனியா
 • மனிதன் நண்பர்களில்லாமல் இருக்க முடியும், ஆனால் அக்கம் பக்கத்து வீட்டார்கள் இல்லாமல் முடியாது. -உருசியா
 • மூன்று பேர்களின் பக்கத்தில் குடியிருக்க வேண்டாம்: பெரிய நதிகள், பெரிய பிரபுக்கள், பெரிய சாலைகள். - டென்மார்க்

அநாதைகள்தொகு

 • அநாதைக் குழந்தைக்கு அழுவதற்குச் சொல்லிக் கொடுக்காதே. -அரேபியா
 • தந்தை யில்லாத குழந்தை பாதி அநாதை; தாயில்லாத குழந்தை முழு அநாதை. -யூதர்
 • பிச்சைக்காரனாக வாழ்வதைவிட, பிச்சைக்காரனாக மடிவது மேல். - இங்கிலாந்து
 • தாயில்லாத மறியை எல்லாக் குட்டிகளும் முட்டும். -எஸ்டோனியா
 • அநாதைக் குழந்தைகளுக்குத் தந்தையராயிருங்கள். -உருசியா

ஆடவர்தொகு

 • ஆணும் பெண்ணும் மண்வெட்டியும் வாளியும்போல. - குர்திஸ்தானம்
 • ஆடவர் நெல், பெண்டிர் குத்திய அரிசி. -சயாம் (நெல் தானாக முளைக்கும், அரிசி முளைக்காது.)
 • ஆடவர் அழகை ஒரு குணமாகப் பார்க்கின்றனர்; பெண்கள் குணத்தை அழகாகப் பார்க்கின்றனர். - ஸ்பெயின்
 • ஆண்பிள்ளையின் சொற்கள் அம்பு போன்றவை; பெண் பிள்ளையின் சொற்கள் ஒடிந்த விசிறி போன்றவை. -சீனா
 • சேவல் தன் குப்பை மேட்டிலிருந்துதான் கூவும், கோழி ஊரெங்கும் சுற்றிக் கூவி வரும். -ஸ்பெயின்
 • தனியாயிருக்கும் பிரமசாரி மயில், காதல் புரிய ஒரு கன்னி கிடைத்தவன் சிங்கம், கலியாணமானவன் கழுதை. -ஜெர்மனி
 • தினசரி க்ஷவரம் செய்துகொள்வதைவிட வருடத்திற்கு ஒரு பிள்ளை பெறுவதே எளிது. -உருசியா (ரஷ்ய சிப்பாய்கள் இவ்வாறு தங்கள் மனைவியரிடம் சொல்வது வழக்கம்.)
 • பத்து நாள் பெண்ணாயிருப்பதைவிட ஒரு நாள் ஆணாயிருப்பது மேல். - குர்திஸ்தானம்
 • பத்து மனிதரில் ஒன்பது பேர் பெண்கள். - துருக்கி (பெரும்பாலோர் ஆண்மையில்லாதவர்கள்.)
 • பிரமசாரி தண்ணீரில்லாத வாத்துப் போன்றவன். -உருசியா
 • பிரமசாரியும் நாயும் எதையும் செய்யலாம். -போலந்து
 • பெண் அடிமையாயிருந்தால், ஆண் சுதந்திரமாக யிருக்க முடியுமா? -ஷெல்லி
 • பெண் ஒரு கோட்டை -ஆண் அவள் கைதி. - குர்திஸ்தானம்
 • பொன்னுக்குச் சோதனை நெருப்பு; பெண்ணுக்குச் சோதனை பொன்; மனிதனுக்குச் சோதனை பெண். - அமெரிக்கா
 • மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு; ஆனால் நீ தனித்திரு. - இதாலி
 • மற்றவர்களுடைய பெண்களிடத்திலும், பணத்தினிடத்திலும் விளையாட வேண்டாம். - இங்கிலாந்து
 • மனிதர்களுக்குக் குணத்திற்கு முன்னால் அறிவு தேவை; பெண்களுக்கு அறிவுக்கு முன்னால் குணம் தேவை. -ஜெர்மனி
 • மனிதன் ஆறு - பெண் ஏரி. - குர்திஸ்தானம்

காதல்தொகு

 • நான்கு கண்கள் சந்தித்ததும், இதயத்தில் காதல் தோன்றிற்று. -இந்தியா
 • காமம், நெருப்பு, இருமல் இம்மூன்றும் மறைக்க முடியாதவை. -இந்தியா
 • இளம் காதலர்கள் விரும்புகிறார்கள், விவாகமான மனிதர்கள் வருந்துகிறார்கள். -இந்தியா
 • காதல் சாதி வேற்றுமைகளைக் கண்டு சிரிக்கின்றது. -இந்தியா
 • ஒரு மனிதன் பெண்ணின் பின்னால் ஓடினால் திருமணம்; ஒரு பெண் மனிதன் பின்னால் ஓடினால் அவளுக்கு அழிவு. -இந்தியா
 • காதல், கஸ்தூரி, இருமல் மூன்றையும் அடக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. -இந்தியா
 • காதலன் கண்ணுக்கு அம்மைத் தழும்புகளும் அதிருஷ்டக் குறிகளாகும். -ஜப்பான்
 • காதலுக்கும் தொழு நோய்க்கும் தப்புவோர் சிலரே. -சீனா
 • அதிருஷ்டமுள்ளவன் ஒரு நண்பனைச் சந்திக்கிறான், அதிருஷ்டம் கெட்டவன் ஓர் அழகியைச் சந்திக்கிறான். -சீனா
 • காதலையும் கர்ப்பத்தையும் மறைத்து - வைக்க முடியாது. -அரேபியா
 • காதல் ஏழு விநாடி, துக்கம் வாழ்க்கை முழுதும்.-அரேபியா
 • உன் காதலுக்கு ஒரு மணி நேரம், உன் இறைவனுக்கு ஒரு மணி நேரம் செலவிடு. -அரேபியா
 • தூக்கம் வந்து விட்டால், தலையணை தேவையில்லை; காதல் வந்து விட்டால், அழகு தேவையில்லை. -ஆப்கானிஸ்தானம்
 • காதலும் பேராசையும் போட்டியைச் சகிக்கமாட்டா. - ஃபிரான்ஸ்
 • காதலுடனும் நெருப்புடனும் மனிதன் பழகிப் போகிறான். - ஃபிரான்ஸ்
 • பெண்கள், காடைகள், வேட்டை நாய்கள், ஆயுதங்கள் இவைகளில் ஓர் இன்பத்திற்காக ஆயிரம் வேதனைகள் - ஃபிரான்ஸ்
 • காதலைத் தடுத்தல் அதைத் தூண்டிவிடுவது போன்றது. - ஃபிரான்ஸ்
 • காதல் வந்து விட்டால், கழுதைகளும் நடனமாடும். - ஃபிரான்ஸ்
 • அதிகக் காதலுள்ளவர்கள் மிகக் குறைவாகப் பேச வேண்டும். -ஸ்காட்லந்து
 • காதலுக்கும் செல்வத்திற்கும் துணை வேண்டியதில்லை. -செர்பியா
 • பெண்ணின் காதல் சயித்தானின் வலை. -செர்பியா
 • திருமண இரவுதான் காதலின் கடைசி இரவு. -சைலீஷியா
 • காதல் இனிமையான சிறைவாசம். -ஸ்லாவேகியா
 • கெட்டிக்காரப் பெண், தான் காதலிப்பவனை விட்டு, தன்னைக் காதலிப்பவனை மணப்பாள். -ஸ்லாவேகியா
 • செயல்களே காதல், இனிமையான சொற்களல்ல. - ஸ்பெயின்
 • காதல் வெட்கப்பட்டால், அது உண்மையானதன்று. - ஸ்பெயின்
 • ஒரு காதல் மற்றொன்றை வெளியேற்றிவிடும். - ஸ்பெயின்
 • காதல் சுளுக்குப் போன்றது, இரண்டாம் தடவை அது எளிதில் வந்துவிடும். - ஸ்பெயின்
 • ஒரு பெண்ணின் காதல் கூடையிலுள்ள தண்ணீர் போன்றது. -ஸ்பெயின்
 • காதலின் பார்வையில் செம்பு தங்கமாயிருக்கும், ஏழைமை செல்வமாகும். -ஸ்பெயின்
 • 'சூப்'பிலும் காதலிலும் முதலாவது தான் சிறந்தது. -ஸ்பெயின்
 • தேர்ந்தெடுப்பது என்பது காதலில் இல்லை. -ஸ்பெயின்
 • நெருப்புக்குக் காற்று எப்படியோ, அப்படிக் காதலுக்குக் பிரிவு. -ஸ்பெயின்
 • சாளரக் கம்பிகளின் இடைவழியாகவே காதலுக்கு உயிர் வருகிறது. -ஸ்பெயின்
 • காதலர் மற்றவர் கண்களெல்லாம் அவிந்து விட்டது போல எண்ணுவர். -ஸ்பெயின்
 • காதலர்களுக்குத் தக்க நேரம் தெரியும். -ஜெர்மனி
 • காப்பியும் காதலும் சூடா யிருந்தால்தான் உருசி. -ஜெர்மனி
 • காதல்தான் காதலை வெல்ல முடியும். -ஜெர்மனி
 • காதல் அணைந்தபின் கரித்துண்டுகளே மிஞ்சும். -ஜெர்மனி
 • காதல் அகழெலி, கல்யாணம் காட்டுப் பூனை. -ஜெர்மனி
 • காதலின் உச்சத்தில் பேச்சுக் குறைந்து விடும். -ஜெர்மனி
 • காதல் குருடன்று, ஆனால் அது பார்ப்பதில்லை. -ஜெர்மனி
 • காதலுக்குக் காலம் கிடையாது. -ஜெர்மனி
 • காதலர்களுக்கு காதவழி ஓர் அடியாகத் தோன்றும். -ஜெர்மனி
 • காதலின் கண்ணுக்கு ரோஜா மலர் தான் தெரியும், முட்கள் தெரியமாட்டா. -ஜெர்மனி
 • அழகைக் காதலித்தல் என்பதில்லை, காதலித்ததே அழகாகும். -ஜெர்மனி
 • காதற் கடிதங்களுக்குத் தேதி தேவையில்லை. -ஜெர்மனி
 • பேட்டையிலும் காதலிலும் ஒருவருக்குத் தொடங்கத் தெரியும், எங்கு முடிப்பது என்பது தெரியாது. -ஜெர்மனி
 • காதலர்கள் பேச வேண்டிய விஷயம் அதிகம், ஆனால் அது ஒரே பழைய விஷயம்தான். -ஜெர்மனி
 • காதலர்கள் நேரத்தை ஆசையைக் கொண்டு அளக்கின்றனர். -ஜெர்மனி
 • சிறு ஊடல் காதலைப் புதுப்பிக்கும். -ஜெர்மனி
 • எல்லா இடங்களிலும் கண்களின் பாஷை ஒன்று தான். - இங்கிலாந்து
 • முத்தங்கள் திறவுகோல்கள். - இங்கிலாந்து
 • ஒருபெண்ணையும் காதலிக்காதவன் பன்றியிடம் பால் குடித்திருப்பான். - இங்கிலாந்து
 • காதலுக்கு மருந்தில்லை, மருத்துவனுமில்லை. -அயர்லந்து
 • காதல் ஒன்றுதான் பங்காளிகளை அனுமதிக்காது. -பல்கேரியா
 • ஒருவன் சகோதரனைத் தேடிக் கடல் வரை போவான்;. காதலியைத் தேடிக் கடலுக்குள்ளேயும் போவான். -பல்கேரியா
 • உருளைக் கிழங்கையும், காதலனையுமே ஒரு பெண் தானாகத் தேர்ந்தெடுக்கிறாள். - ஹாலந்து
 • காதற் கடிதங்களை எழுதுவோர் மெலிகின்றனர், கொண்டு கொடுப்பவர்கள் கொழுக்கிறார்கள். - ஹாலந்து
  [காதலரின் தூதர்களுக்கு இருபக்கங்களிலும் வெகுமதிகள் நிறையக் கிடைக்கும்.]
 • வானத்தில் பறவையின் பாதையைக் காணமுடியாது, கன்னியை நாடும் காதலன் பாதையையும் காண முடியாது. -எஸ்டோனியா
 • காதலில் துரு ஏறாது. -எஸ்டோனியா
 • காதல் என்பது மலர், கலியாணத்தில் அது கனியாகும். - ஃபின்லந்து
 • காதல் நந்தவனம், கலியாணம் முட்புதர். - ஃபின்லந்து
 • காதல் உண்டாக்கும் புண்ணை அதுவே ஆற்றிவிடும். - கிரீஸ்
 • காதல் மடமை இரண்டுக்கும் பெயரில் தான் வேற்றுமை. -ஹங்கேரி
 • கனவிலும் காதலிலும் இயலாத காரியமே இல்லை. -ஹங்கேரி
 • அடிக்கடி முத்தமிட்டால் குழந்தையை எதிர்பார்க்க வேண்டியதுதான். -ஐஸ்லந்து
 • கலியாணத்திற்குப் பின்னால் காதல் வளரும். -ஐஸ்லந்து
 • காதல் கொண்டவர்களின் கோபம் சிலந்தி வலை போன்றது. - இதாலி
 • ஒரே பெண்ணையோ, ஒரே 'பஸ்'ஸையோ தொடர்ந்து ஓட வேண்டாம், பின்னால் வேறு கிடைக்கும். - இதாலி
 • காதலிக்கும் காலத்தில் ஜூபிடரும் கழுதையாவார். -லத்தீன்
  [ஜூபிடர்-தேவர்களின் அதிபதியான கடவுள். கிரீஸில் இவரை 'சீயஸ்' என்பர்.]
 • பழைய காதல் ஒரு சிறைச்சாலை. -லத்தீன்
 • காதலின் தூதுவர்கள் கண்கள். -லத்தீன்
 • காதலிலே தோன்றும் கோபம் போலியானது. -லத்தீன்
 • காதலர் கோபம் காதலுக்குப் புத்துயிர். -கிரீஸ்
 • இருவரைக் காதலிக்கும் ஒரு பெண் இருவரையும் ஏமாற்றுவாள். - போர்ச்சுக்கல்
 • செம்பு நாணயம் துருப்பிடித்த காதலுக்குத்தான் சரி. -ரஷ்யா
 • காதல் ஒரு வளையம், வளையத்திற்கு முடிவே கிடையாது. -ரஷ்யா
 • ஒருவன் மீது காதல் தோன்றி விட்டால், அவன் குளிக்காமலிருக்கும் பொழுதே, வெண்மையாகத் தோன்றுவான். -ரஷ்யா
 • ஒருத்தி இனிமையா யிருக்கிறாள் என்பதற்காகக் காதலிக்க வேண்டாம், வயதாகிவிட்டது என்பதற்காக அவளைத் தள்ளவும் வேண்டாம். -ரஷ்யா
 • பஞ்சை நேசிப்பது போல் என்னை நேசி; நூல் அதிக மென்மையாகும் பொழுது அதிகப் பஞ்சை விட்டும், நூல் அறுந்தவுடன் ஒட்டியும் ஆதரவு காட்டுவது போல, என்னை வைத்துக் கொள்ளவும். -ஆப்பிரிகா
 • அவசரக் காதல் சீக்கிரம் சூடாகி, சீக்கிரம் குளிந்து விடும். -இங்கிலாந்து
 • அரசர், கெய்ஸர், பிரபு, சட்டங்கள் ஆகிய அனைத்திற்கும் மேற்போனது காதல். -இங்கிலாந்து
 • காதல்தான் காதலுக்குப் பரிசு. -இங்கிலாந்து
 • காதலுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. -இங்கிலாந்து
 • காதலின் இனிமைகளில் கண்ணீர் கலந்திருக்கும். -இங்கிலாந்து
 • காதலுக்காக உயிரை விடுபவர்கள் அளவுக்கு அதிகமாகக் காதலிப்பவர்கள். -இங்கிலாந்து
 • காதல் ஒருவகைப் போர் முறையாகும். -லத்தீன்
 • காதலிலும் மரணத்திலும் நம்வலிமை பயனில்லை. -ஸ்பெயின்
 • காதலே கள்வர்களைத் தயாரிக்கிறது; காதலை எந்தக் கள்வரும் கவர்வதில்லை. -சுவீடன்
 • காதல் தான் புக முடியாத இடத்தில் ஊர்ந்து சென்று விடும். -சுவீடன்
 • காதலால் வீரரானோர் பலர்; ஆனால் மூடரானோர் அவர்களை விட அதிகம். -சுவீடன்
 • நெருப்பு அருகிலிருந்து சுடும், அழகு தூரத்திலிருந்து சுடும். -சுவிட்சர்லந்து
 • காதலித்தால் சந்திரனைக் காதலி, திருடினால் ஒட்டகத்தைத் திருடு. - எகிப்து
 • காதல் கட்டுப்பாடற்ற கழுதை. -ஆப்பிரிகா
 • ரொட்டியும் உப்பும் இல்லாவிட்டால், காதல் இருக்க முடியாது. -போலந்து
 • காதல் முதலில் ஆடவனின் கண் வழியாகவும், பெண்ணின் காது வழியாகவும் நுழைகிறது. -போலந்து
 • முதன்மையான அன்பு தாயன்பு, அடுத்தது நாயன்பு, அதற்கும் அடுத்தது காதலியின் அன்பு. -போலந்து

பெண்கள்தொகு

 • பிராணிகளின் படைப்பில் பெண்ணே முதன்மையான எழிலுடையவள். -யூதர்
 • இயன்ற பொழுதெல்லாம் பெண்கள் சிரிப்பார்கள், அழ வேண்டுமென்று தீர்மானித்து விட்டால், அழுவார்கள். -ஃபிரான்ஸ்
 • பெண் என்றால் பேயும் இரங்கும். - தமிழ்நாடு
 • ஒவ்வொரு மனிதனும் பெண்ணின் மகன். -உருசியா
 • பெண்ணே, உன்னிடம் மூன்று நல்ல குணங்களும், நாலு லட்சம் தீய குணங்களும் இருக்கின்றன. நல்லகுணங்கள்: இசை பாடுதல், (இறந்த கணவனுடன்) சதியாக எரிதல், பிள்ளைகள் பெறுதல். -இந்தியா
 • மனிதனுக்குப் போர் எப்படியோ , அப்படிப் பெண்ணுக்குப் பிரசவம். -இந்தியா
 • பெண்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளச் சயித்தான் கூடப் பிரார்த்தனை செய்கிறான். -இந்தியா
 • அத்திப்பூவையும், வெள்ளைக் காகத்தையும், நீரிலுள்ள மீனின் காலையும் பார்த்தாலும் பார்க்கலாம், ஒரு *பெண்ணின் மனத்திலுள்ளதைப் பார்க்கவே முடியாது. -இந்தியா
 • பெண்ணின் பேச்சிலே தேன் இருக்கிறது, உள்ளத்திலே நஞ்சைத் தவிர வேறில்லை. -இந்தியா
 • ஆடவர்களே இல்லாவிட்டால், பெண்கள் அனைவரும் கற்புடையவர்களே. -இந்தியா
 • ஏணியில்லாமலே தூக்கில் ஏற வேண்டுமானால், ஒரு பெண்ணின் உதவியால் முடியும். - இலங்கை
 • கோழிதான் சேவலைக் கூவச் சொல்லுகிறது. - ஜப்பான்
 • நாவுதான் பெண்ணுக்கு வாள், அது துருப்பிடிப்பதேயில்லை. - ஜப்பான்
 • பெண் மனிதனின் குழப்பம். -லத்தீன்
 • பெண்புத்தி பின்புத்தி. - தமிழ் நாடு
 • வயதுவந்த பெண் (தீர்வை கட்டாமல்) கடத்தி வந்த உப்பைப் போன்றவள். -சீனா (விரைவிலே வெளியேற்ற வேண்டும்.)
 • பெண்ணின் உரோமத்தால் பெரிய யானையையும் கட்டிப் பிடிக்கலாம். -சீனா
 • இளமங்கையை வீட்டில் புலிபோல் காத்துவர வேண்டும். -சீனா
 • ஆடவர்கள் இதயங்களால் சிரிப்பார்கள், பெண்கள் உதடுகளால் மட்டும் சிரிப்பார்கள். -அரேபியா
 • பெண்பிள்ளை பயணம் போகிறாள் என்றால், ஓர் ஆண்பிள்ளை அவளுக்குக் கதவைத் திறப்பது தான் காரணம். -அரேபியா
 • ஒரு நல்ல பெண் ஏழு பிள்ளைகளுக்கு மேல். - ஆர்மீனியா
 • உனக்கு ஓர் இரகசியம் தெரியவேண்டுமா? ஒரு குழந்தை, பயித்தியக்காரன், குடிகாரன், அல்லது ஒரு பெண்ணிடம் கேட்டுப் பார். - ஆர்மீனியா
 • ஆணைவிடப் பெண்களுக்குப் பசி இரட்டிப்பு, புத்தி நான்கு மடங்கு, ஆசைகள் எட்டு மடங்கு அதிகம். -பர்மா
 • பெண்களை அழவிடுவதில் மனிதர்கள் கவனமா யிருக்கவேண்டும்; ஏனெனில் ஆண்டவன் அவர்களுடைய கண்ணீர்த் துளிகளை எண்ணிப் பார்க்கிறான். -யூதர்
 • கழுதை ஏணிமேல் ஏறும்பொழுது, பெண்களிடம் நாம் ஞானத்தைக் காணலாம். -யூதர்
 • பெண்ணுக்குக் கூந்தல் தான் நீளம், மூளை கட்டை. - கால்மிக்
 • பெண் முற்றிலும் ஆணின் உடைமையாகாள். -குர்திஸ்தானம்
 • மன்னன், மாது, குதிரை-மூன்றையும் நம்பவேண்டாம். -பாரசீகம்
 • பெண்ணால் துயரமே வரும், ஆயினும் பெண் இல்லாத வீடே இருக்க முடியாது. -பாரசீகம்
 • இரண்டு பெண்களும் ஒரு வாத்தும் இருந்தால் போதும் - அது ஒரு சந்தையாகிவிடும். -பாரசீகம்
 • பெண்பிள்ளைக்கு இருமுறை பயித்தியம் பிடிக்கும்: அவள் காதல் கொண்ட சமயம், தலை நரைக்கத் தொடங்கும் சமயம். -பாரசீகம்
 • குடியானவனுக்கு வேண்டியது நிலம், பிரபுவுக்குக் கௌரவங்கள், சிப்பாய்க்கு யுத்தம், வியாபாரிக்குப் பணம், விவசாயிக்கு அமைதி, தொழிலாளிக்கு வேலை, சித்திரக்காரனுக்கு அழகு, பெண்ணுக்கு உலகம் முழுவதும் தேவை. -பாரசீகம்
 • பாடும் பெண்ணுக்கு அகமுடையான் தேவை. -அல்பேனியா
 • அழகான பெண்ணும், நீண்ட கிழிசலுள்ள அங்கியும் எந்த ஆணியிலும் மாட்டிக் கொள்ளும். -இங்கிலாந்து
 • விகாரமான ஸ்திரீ வயிற்றுவலி, அழகுள்ளவள் தலைவலி. -இங்கிலாந்து
 • பத்து வயதில் பெண் தேவகன்னியா யிருப்பாள், பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போலிருப்பாள், நாற்பதில் சயித்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள். -இங்கிலாந்து
 • பெண்ணின் முன்பாகத்திற்கும் கழுதையின் பின்பாகத்திற்கும், பாதிரியாரின் எல்லாப் பாகங்களுக்கும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். -இங்கிலாந்து
 • பெண்களுக்கும், குருமார்களுக்கும், கோழிகளுக்கும் எவ்வளவு இருந்தாலும் போதாது. -இங்கிலாந்து
 • பெண்பிள்ளை சயித்தானை வென்று விடுவாள். -அயர்லந்து
 • உயிருள்ளவரை பெண்களுக்கு வர்ணங்களில் ஆசையிருக்கும். -அயர்லந்து
 • சணலை நெருப்பிலிருந்து காப்பது கஷ்டம். - ஸ்காட்லந்து
 • வாயாடியின் வாய் சயித்தானின் அஞ்சல் பை. -வேல்ஸ்
 • பெண்கள் சயித்தானின் சாட்டைகள். -வேல்ஸ்
 • பெண் உள்ளம் தாமரை இலைமேல் உருளும் நீர்த்துளிபோல் நிலையற்றது. -சயாம்
 • உறுதியான செருப்பு வேண்டுமானால், ஒரு பெண்ணின் நாவை அடித்தோலாக வைத்துத் தைக்க வேண்டும் அது ஒரு போதும் தேயாது. -ஃபிரான்ஸ்
 • மூன்று விலங்குகளே தம்மைச் சிங்காரித்துக் கொள்வதில் நேரத்தைக் கழிப்பவை- அவை பூனைகள், ஈக்கள், பெண்கள். -ஃபிரான்ஸ்
 • மனிதனின் பணப் பைக்காகவே பெண் படைக்கப் பெற்றிருக்கிறாள். -ஃபிரான்ஸ்
 • ஆயுதங்களையும், பெண்களையும், பூட்டுக்களையும் தினந்தோறும் பார்த்துவர வேண்டும். -ஜெர்மனி
 • கன்னிப் பருவம் சாந்திமயம், கற்பு முக்தி நிலை, விவாகம் சிறைவாசம். -ஜெர்மனி
 • கன்னிப் பருவம் கதிரவன், கற்பு சந்திரன், விவாகம் இரவு. -ஜெர்மனி
 • ஒரு கன்னி எதையும் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது. -ஜெர்மனி
 • ஒரு சேவல் பன்னிரண்டு கோழிகளை அடக்கியாளும், ஒரு பெண் ஆறு ஆடவர்களை அடக்கியாள்வாள். -ஜெர்மனி
 • துணையில்லாமல் செல்லும் பெண்ணுக்கு எல்லோரும் துணையாகச் சுற்றுவார்கள். -ஜெர்மனி
 • நூறு தெள்ளுப் பூச்சிகளைக் காத்துவிடலாம், ஒரு கன்னியைக் கட்டிக் காப்பது கஷ்டம். - போலந்து
 • கெட்ட பெண்ணிடம் அவளைப் புகழ்ந்து ஒரு வார்த்தை சொல்லு; நல்ல பெண்ணிடம் உன் விருப்பம் போல் பேசு. - போலந்து
 • கன்னிப் பெண்ணிடம் உன் விருப்பம் போல் நடக்கலாம். விதவையிடம் அவள் விருப்பம் போலவே நீ நடக்க வேண்டும். - போலந்து
 • பெண்ணின் யோசனையால் பயனில்லை யென்றாலும், அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான். - வேல்ஸ்
 • நீண்ட தலைக்காரிக்கு ஆழமில்லாத உள்ளம். - பல்கேரியா
 • செல்லமாக வளர்ந்த பெண் நூல் நூற்க மாட்டாள். - பல்கேரியா [மேலை நாடுகளில் கம்பள நூல் நூற்றல் கன்னியர் செய்யவேண்டிய தொழில்.]
 • பெண்கள் சீட்டியடித்தால், சயித்தானுக்குச் சிரிப்பு அடங்காது. -ஜெர்ஸீ
 • அத்தையிடம் ஒரு விஷயம் சொன்னாற் போதும், அகிலமெல்லாம் பரவிவிடும். -ஸெக்
 • பன்னிரண்டு வயது வரை உன் மகளுக்குத் தலை வாரிவிடு;. பதினாறு வயதுவரை பாதுகாத்து வை; பின்னர் எவ்ன் மணந்து கொள்ள வந்தாலும், அவளைக் கொடுத்து, நன்றியும் சொல்லு. -ஸெக்
 • நாய்க்கு மேலாக நாம் குரைக்க முடியாது, காகத்திற்கு மேலாகக் கரைய முடியாது, ஒரு பெண்ணுக்கு மேலாகச் சண்டைபோட முடியாது. -ஸெக்
 • ஒரு பெண் சீட்டியடித்தால், ஏழு ஆலயங்கள் அதிரும். -ஸெக்
 • பெண்ணுக்கு மௌனத்தைப் போன்ற ஆபரணம் வேறில்லை, ஆனால் அவள் அதை அணிவது அபூர்வம். -டென்மார்க்
 • வயிரம் போன்ற மகள் மனைவியாகும் போது கண்ணாடியாக மாறுகிறாள். - ஹாலந்து
 • பெண்களைப் பெற்றவன் எப்பொழுதுமே மேய்க்க வேண்டிய ஆயன். - ஹாலந்து
 • புதர்களெல்லாம் பெண் இனம். - எஸ்டோனியா [பெருகக் கூடியவை.]
 • ஒரு பெண் மற்றொருத்தியைப் புகழ்ந்து ஒரு போதும் பேசமாட்டாள். - எஸ்டோனியா
 • ஒரு பெண்ணின் பாவு ஒன்பது பெண்களின் ஊடு. - எஸ்டோனியா
 • மனிதன் வேலை காரணமாக வெளியே போகிறான், பெண் தன்னைப் பிறர் பார்ப்பதற்காகப் போகிறாள். -ஃபின்லந்து
 • பெண்ணை அவள் இறந்த பிறகும் நம்பவேண்டாம். - கிரீஸ்
 • கடல், தீ, பெண்கள்: மூன்றும் தீமைகள். - கிரீஸ்
 • பெண்ணின் ஆயுதங்கள் கண்ணீர்த் துளிகள். -ஜியார்ஜியா
 • அதிக வயதாகியும் கன்னியா யிருப்பவள் அஞ்சலில் சேராத கடிதம் போன்றவள். -ஹங்கேரி
 • கோபம் வந்த பெண் கரையில்லாத கடல். -லத்தீன்
 • கன்னியின் இதயம் இருண்ட கானகம். -உருசியா
 • இரண்டு பெண்கள் சேர்ந்தால் ஒரு கடை, மூவர் சேர்ந்தால் ஒரு சந்தை. -உருசியா
 • சிரிக்கிற பெண்ணையும் அழுகிற மனிதனையும் நம்ப வேண்டாம். -உருசியா
 • எந்தப் பெண்களைப் பற்றி அதிகமாய்ப் பேச்சில்லையோ அவர்கள் மிகவும் நல்லவர்கள். -சைலீஷியா
 • அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத போர் இருந்தே வரும். -ஸ்பெயின்
 • மூன்று பெண்களும், ஒரு தாயும்- ஆகத் தந்தைக்கு நான்கு சயித்தான்கள். -ஸ்பெயின்
 • கற்புடைய கன்னியும், நொண்டியும் வீட்டிலேயேயிருப்பது மேல். -ஸ்பெயின்
 • கெட்ட ஸ்திரீகளைக் காவல் காப்பது வீண் வேலை. -ஸ்பெயின்
 • தன்னையே அதிகமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் வீட்டை நாசாமாக்குவாள். -ஸ்பெயின்
 • கடலில் உப்பைத்தான் பெறலாம், பெண்ணிடம் தீமையைத் தான் பெறலாம். -ஸ்பெயின்
 • கூவுகிற கோழியும், லத்தீன் படித்த பெண்ணும் நல்ல முடிவை அடைய மாட்டார்கள். -ஸ்பெயின்
 • பெண்கள் கிடைத்ததை மதிக்கமாட்டார்கள், மறுத்ததையே விரும்பி வாடுவார்கள். -ஸ்பெயின்
 • கெட்ட பெண்களிடமிருந்து உன்னைக் காப்பாற்றும்படி ஆண்டவனை வேண்டு; நல்ல பெண்களிடமிருந்து நீயே உன்னைக் காத்துக்கொள். -யூதர்
 • நாயைப் போன்றவள் பெண்; எலும்பைக் காட்டினால் நாய் ஏமாந்து பின்னால் வரும். -ஆப்பிரிகா
 • மனிதரைத் தவிர, மற்ற விலங்குகள் அனைத்திலும் பெண் இனமே மேலானது. -அரேபியா
 • தந்தைக்கு அடங்கி நடத்தல், கணவனுக்கு அடங்கி நடத்தல், மகனுக்கு அடங்கி நடத்தல்- இம்மூன்றுமே ஒரு பெண்ணுக்குரிய மூன்று பண்புகள். -சீனா
 • அன்பான சில வார்த்தைகளே பெண்ணுக்கு அணிகலன். -டென்மார்க்
 • பெண்கள் மூடர்களாயிருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை: மனிதர்களுக்குப் பொருத்தமா யிருப்பதற்காகவே சர்வவல்லமையுள்ள கடவுள் அப்படிப் படைத்திருக்கிறார். -ஜியார்ஜ் எலியட்
 • பெண்களும் யானைகளும் மறப்பதேயில்லை. -பார்க்கர்
 • பெண்கள் அதிக வளர்ச்சியடைந்த குழந்தைகளைத் தவிர வேறில்லை. - செஸ்டர்ஃபீல்டு
 • ஆடவர்களால்தான் பெண்கள் தங்களுக்குள் ஒருவரை யொருவர் வெறுக்கின்றனர். -ஃபிரான்ஸ்
 • எந்தக் கண்ணாடியும் ஒரு பெண் அழகியில்லை யென்று சொல்லியதில்லை. -ஃபிரான்ஸ்
 • அழகிய பெண் செய்வதெல்லாம் சரிதான். -ஜெர்மனி
 • கண்ணாடிக்குள் இருக்கும் பெண்ணையே ஒவ்வொரு பெண்ணும் நேசிக்கிறாள். -ஜெர்மனி
 • நித்தியமான பெண்மை இயல்பு நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கின்றது. - கதே
 • மௌனம் பெண்ணுக்குப் பெருந்தன்மை யளிக்கிறது. -ஸாபாகிளிஸ்
 • மனிதனுக்கு உயர்ந்த நன்மையும் பெரிய நோயும் பெண்ணாலேயே கிடைக்கின்றன. - கிரீஸ்
 • ஒரு பெண்ணுக்குப் பின்னால் செல்வதைவிட, ஒரு மனிதன் சிங்கத்தின் பின்னால் செல்வது மேல். -யூதர்
 • பெண், விருப்போ வெறுப்போ அடையும் பொழுது, எதையும் செய்யத் துணிகிறாள். -லத்தீன்
 • செல்வமுள்ள ஸ்திரீயைப்போல் சகிக்க முடியாதது வேறில்லை. -லத்தீன்
 • தீய யோசனை சொல்வதில் பெண்கள் ஆடவர்களை வென்றுவிடுவார்கள். -லத்தீன்
 • தன் முகத்தைப் பற்றியே பெருமைப்படும் பெண்ணால் வீடு பாழாகும். -ஸ்பெயின்
 • ஒரு பெண் அழகாயிருப்பதாக நாம் ஒரு முறை சொன்னால், அதையே சயித்தான் அவளிடம் பத்து முறை சொல்வான். -ஸ்பெயின்
 • நன்றாக உடையணியும் ஒரு பெண் தன் கணவன் வேறு பெண்ணை நாடாமல் காத்துக் கொள்ளமுடியும். -ஸ்பெயின்
 • நல்ல திராட்சை மதுவைப்போல், பெண்ணும் இனிமையானவிஷம். - துருக்கி
 • ஊசியில்லாத பெண் நகமில்லாத பூனை. -எஸ்டோனியா (தையல் வேலை பெண்ணுக்கு அவசியம்.)
 • ஒரு பெண்ணைப் பற்றி அவதூறு சொல்வதைப் பார்க்கினும் ஓர் ஆலயத்தை எரிப்பது குறைந்த பாவம். - செர்பியா
 • கெட்ட பெண்ணையும் புகழ்ந்து பேசு; நல்லவளைப் பற்றி எப்படியும் பேசலாம். - செர்பியா

பெண் பார்த்தல்தொகு

 • தாயைப் பார்த்து மகளைக் கொள்ளு. - தமிழ்நாடு
 • வலுவில் வந்தவள் கிழவி. - தமிழ்நாடு
 • கரையைப் பார்த்துச் சீலை எடு, தாயைப் பார்த்து மகளை எடு. - துருக்கி
 • மனைவியைத் தேர்ந்தெடுக்கும்பொழுது கிழவனின் பார்வை வேண்டும்; குதிரையைத் தேர்ந்தெடுக்கையில் இளைஞனின் பார்வை வேண்டும். -ஆர்மீனியா
 • அதிக அழகுள்ளவர்களைக் காட்டிலும் குருட்டுப் பெண் தேவலை. -பர்மா
 • ஒரு பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ள அவள் தாயை அறியவேண்டும்; மேலும் தெளிவாகத் தெரிந்து கொள்ள அவள் தாய்வழிப் பாட்டியைப் பற்றியும் விசாரித்து அறியவேண்டும். -சயாம்
 • காதைக் கொண்டு பெண்ணைப் பார், கண்ணைக் கொண்டு பார்க்க வேண்டாம். - போலந்து
 • கலியாணத்திற்குப் பெண் தேடி நெடுந்தூரம் செல்பவன் யாரையோ ஏமாற்றப் போகிறான். அல்லது தான் ஏமாறுவான். - இங்கிலாந்து
 • பெண் எடுத்தல் பக்கத்திலும், களவாடுதல் தூரத்திலும் இருக்க வேண்டும். -ஸெக்
 • செழிப்பான பண்ணையிலிருந்து குதிரையை வாங்கு; ஏழைப் பண்ணையிலிருந்து பெண்ணை வாங்கு. - எஸ்டோனியா
 • மாதாகோயிலுக்குச் செல்லும் பாதையிலிருந்து கொண்டு உனக்கு மனைவியைத் தேர்ந்தெடுக்காதே. - எஸ்டோனியா
 • ஒரு மனைவியைத் தேர்ந்தெடுக்க மனிதனுக்குப் போதிய நேரம் இருக்கிறது. - ஃபின்லந்து
 • ஏழை வீட்டில் பெண் எடு, செல்வர் வீட்டில் குதிரை வாங்கு. - ஃபின்லந்து
 • எல்லாப் பெண்களிலும் உனக்கு மிகவும் அருகிலுள்ள பெண்ணையே மணந்துகொள். - கிரீஸ்
 • குதிரைகள் வாங்கும் போதும், பெண் எடுக்கும் போதும், உன் கண்களை இறுக மூடிக்கொண்டு, கடவுளின் பொறுப்பில் விட்டுவிடவும். -லத்தீன்
 • முதலில் உணவுக்கு வழிசெய், பிறகு மனைவியைத் தேடிக்கொள்ளலாம். - நார்வே
 • மணப் பெண் தொட்டிலிலிருக்கும் பொழுது, மணமகன் குதிரையேறப் பழக வேண்டும். -உருசியா
 • உபதேசியாரிடம் குதிரை வாங்காதே, விதவையிடம் பெண் கொள்ளாதே. -உருசியா
 • உனக்கு நல்ல மனைவி வேண்டுமானால், அவளை ஞாயிற்றுக் கிழமையில் தேர்ந்தெடுக்காதே. - ஸ்பெயின்
 • பெரிய இடத்துப் பெண்ணை விவாகம் செய்து கொண்டு, பாயில் படுத்துறங்கு. -ஆப்பிரிகா
 • குட்டையான பெண்ணை மணந்து கொண்டால், துணி அதிகம் தேவையிராது. '-ஆப்பிரிகா
 • அத்தை மகளை விட்டுவிட்டு, வெளியில் பெண்ணெடுப்பவன் மூடன். '-ஆப்பிரிகா
 • திருமணத்திற்கு முன்னால் கண்களைத் திறந்து வைத்துக்கொள், பின்னால் பாதிக் கண்ணை மூடிக்கொள். '-ஆப்பிரிகா
 • பிறர் புகழும் குதிரையை வாங்கு, பிறர் குறை பேசும் பெண்ணை மணந்துகொள். - எஸ்டோனியா
"https://ta.wikiquote.org/w/index.php?title=உலகப்_பழமொழிகள்&oldid=37019" இருந்து மீள்விக்கப்பட்டது