உருசிய பழமொழிகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இதில் உருசிய மொழி பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.
- அநாதைக் குழந்தைகளுக்குத் தந்தையராயிருங்கள்.
- அண்டை வீட்டை விலைக்கு வாங்குவதைப் பார்க்கினும், அண்டை வீட்டானையே விலைக்கு வாங்கு.
- ஆண்டவனே, என்னை இரண்டாவது கலியாணத்திலிருந்தும், மூன்றுவிட்ட தாயாதிகளிடமிருந்தும் காப்பாயாக.
- ஆயன் மகன் ஆயன்.
- இரண்டு பெண்கள் சேர்ந்தால் ஒரு கடை, மூவர் சேர்ந்தால் ஒரு சந்தை.
- உபதேசியாரிடம் குதிரை வாங்காதே, விதவையிடம் பெண் கொள்ளாதே.
- உன் சொந்த வீட்டில் சுவர்கள் கூட உனக்கு உதவியாயிருக்கும்.
- ஊசி வாளைப் பார்த்தால், 'அண்ணா' என்று அழைக்கும்.
- 'என்ன’ இவ்வளவு ஆத்திரம்?'
'நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்!'
'என்ன, முகம் வெளுத்திருக்கிறது?'
'நான் திருமணம் செய்து கொண்டு விட்டேன்!' - ஏழு வருடங்கள் கழியுமுன்னால் உன்மனைவியைப் புகழாதே.
- ஒருத்தி இனிமையா யிருக்கிறாள் என்பதற்காகக் காதலிக்க வேண்டாம், வயதாகிவிட்டது என்பதற்காக அவளைத் தள்ளவும் வேண்டாம்.
- (ஒரு தந்தை ) ஒரு மகனை விட்டு ஒரு மகனிடம் போய் யாசிப்பதைவிட, வீடு வீடாக யாசித்தல் மேல்.
- ஒருவன் மீது காதல் தோன்றி விட்டால், அவன் குளிக்காமலிருக்கும் பொழுதே, வெண்மையாகத் தோன்றுவான்.
- ஒருவன் பூரண மனிதனாக விளங்க வேண்டுமானால், அவன் பொதுப் பள்ளியில் மூன்று ஆண்டுகளும், பல்கலைக் கழகத்தில் ஓராண்டும், சிறையில் இரண்டாண்டுகளும் கழித்திருக்க வேண்டும்.
- ஒவ்வொரு மனிதனும் பெண்ணின் மகன்
- கடவுள் உயரே யிருக்கிறார், பூமியில் தந்தை யிருக்கிறார்.
- கணவன் என்பவன் தன் மனைவியின் தந்தை.
- கணவன் குடித்தால் பாதி வீடு எரியும், மனைவியும் குடித்தால் முழு வீடும் எரியும்.
- கணவன் விதிக்கும் தளைகளால் தழும்பு உண்டாகாது.
- கயிறு கட்டாத கதிர்க்கட்டு வெறும் வைக்கோல்தான்.
- கன்னியின் இதயம் இருண்ட கானகம்.
- கலியாணத்தால் குளிர்ந்து போகாத காதல் நெருப்பு இல்லை.
- காதல் ஒரு வளையம், வளையத்திற்கு முடிவே கிடையாது.
- காதல் சிறகுகளைக் கொண்டு பறக்கும், திருமணம் இரண்டு கழிகளின் உதவியால் நடந்து வரும்.
- குழந்தை அழாவிட்டால், தாய்க்கு ஒன்றும் புரிவதில்லை.
- குழந்தைகளை இதயத்தால் நேசிக்கவும்; ஆனால் கைகளால் பயிற்சி அளிக்கவும்.
- குழந்தையின் விரலில் வலியிருந்தால், தாயின் இதயத்தில் வலியுண்டாகும்.
- சிரிக்கிற பெண்ணையும் அழுகிற மனிதனையும் நம்ப வேண்டாம்.
- செத்துக் கிடக்கும் சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
- செம்பு நாணயம் துருப்பிடித்த காதலுக்குத்தான் சரி.
- தன் வீட்டுக்கு வெளியிலே இன்பத்தை நாடுவோன் தனது நிழலையே துரத்திக் கொண்டு திரிகிறான்.
- தாடியில்லாதவர்களுக்குச் சுவர்க்கத்தில் இடமில்லை.
- தாய்ப்பாலோடு பருகியதெல்லாம் ஆன்மா பிரிந்து செல்லும் போதுதான் அதனுடன் வெளியே செல்லும்.
- திருமணம் என்றுதான் உண்டு, ஆனால் ‘பிரிமணம்' என்று கிடையாது.
- தினசரி க்ஷவரம் செய்துகொள்வதைவிட வருடத்திற்கு ஒரு பிள்ளை பெறுவதே எளிது.
(ரஷ்ய சிப்பாய்கள் இவ்வாறு தங்கள் மனைவியரிடம் சொல்வது வழக்கம்.) - நீ தகப்பனாகாமலே வாழ்ந்தால், நீ மனிதனாக இல்லாமலே மரிப்பாய்.
- நோயாளிக்கு தேனும் கசக்கும்.
- பிரமசாரி தண்ணீரில்லாத வாத்துப் போன்றவன்.
- பூண்டு ஏழு பிணிகளைத் தீர்க்கும்.
- பெண்ணின் யாத்திரை சமையலறையிலிருந்து வாயிற்படிவரை.
- பெண்ணைவிட நாய் அறிவுள்ளது, அது தன் யசமானரைப் பார்த்துக் குரைப்பதில்லே.
- பெண்பிள்ளை கலியாணப் பருவமடையும் பொழுதுதான் பிறந்தவளாகிறாள்.
- மரணத்திற்கு விலை உண்டு; வாழ்வைக் கொடுத்து மரணத்தை வாங்க வேண்டியிருக்கிறது.
- மரணம் வயது முதிர்ந்ததைக் கொண்டு போவதில்லை, பழுத்ததையே கொண்டு போகின்றது.
- மரணம் வீட்டுக்கு வந்துவிட்டால், மரண அவஸ்தை தீர்ந்தது.
- மகளின் குழந்தைகள் தன் குழந்தைகளைவிட அருமையானவை.
- மனைவிக்குக் கணவனே சட்டம்.
- மணப் பெண் தொட்டிலிலிருக்கும் பொழுது, மணமகன் குதிரையேறப் பழக வேண்டும்.
- மரணத்திற்கு அஞ்சவேண்டாம், வாழ்க்கைக்கு அஞ்சு.
- மனிதன் நண்பர்களில்லாமல் இருக்க முடியும், ஆனால் அக்கம் பக்கத்து வீட்டார்கள் இல்லாமல் முடியாது
- மனிதன் நடமாடும் பிணம்.
- வாழ்க்கை என்பது அடித்தல், அல்லது அடிபடுதல்.
- விவாகமான பெண் குழந்தை பக்கத்து வீட்டுக்காரரைப் போலத்தான்.
- விருந்தாளி அதிகாலையில் எழுந்திருந்தால், இரவில் அவன் நம்முடன் தங்க விரும்புகிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
- வீட்டுக்குக் கேடு வருவது பின்கதவினால்தான்.
- வைத்தியர்களும் நீதிபதிகளும் பயமில்லாமல் கொலை செய்கிறார்கள்.