இராமாயணம்

வால்மிகி எழுதியக் காப்பியம்

இந்து சமய இலக்கியங்களில் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்டு தொன்மை காலமாகச் சிறப்புடனும் பக்தியுடனும் போற்றப்பட்டு வருவது வான்மீகி ராமாயணம். இது ஏழு காண்டங்களையும் 24000 சுலோகங்களையும் கொண்டது. இராமகாதையைப் பாடும் இதிகாசமெனப்படும் இவ்வடமொழி இலக்கியத்தில் நூற்றுக்கணக்கான பொன்மொழிகள் கொட்டிக் கிடக்கின்றன.

சுந்தர காண்டம்

தொகு

ஐந்தாவது காண்டமான சுந்தர காண்டத்திலிருந்து சில பொன்மொழிகள் கீழே தரப்படுகின்றன:

  • 1. கல்யாணீ பத காதேயம் லௌகிகீ ப்ரதிபாதி மே / ஏதி ஜீவந்தமானந்தோ நரம் வர்ஷசதாதபி //அத்.34. சு 6.
நூறு ஆண்டுகளானாலும் உயிரோடு இருப்பவனுக்கு நல்ல நேரம் வரத்தான் செய்யும் -- என்ற உலகவழக்கு என் விஷயத்தில் உண்மையாய் விட்டது.

அநுமன் சீதையைப் பார்த்து தான் இராமனிடமிருந்து வந்த தூதன் என்று சொன்னவுடன் சீதையின் நெஞ்சம் மகிழ்ச்சியில் பொங்கினபோது சொல்லப்பட்ட சொற்கள் இவை.

  • 2. அநிர்வேத: ச்ரியோ மூலம் அநிர்வேத: பரம் ஸுகம் / அநிர்வேதோ ஹி ஸததம் ஸ்ர்வார்த்தேஷு ப்ரவர்த்தக://
கரோதி ஸபலம் ஜந்தோ: கர்ம யத்தத் கரோதி ஸ: /தஸ்மாதநிர்வேதகரம் யத்னம் சேஷ்டேஹமுத்தமம் // அத்.12 சு.10,11.
சுணக்கமில்லமைதான் முன்னேற்றத்திற்கு ஆணிவேர். தளர்ச்சியின்மை மிக்க இன்பம் தரும். எக்காரியத்திலும் சுணக்கமோ தளர்ச்சியோ கூடாது. அவ்விதம் செயல்படுத்தப்பட்ட வினைதான் சரியான பயன் தரும். அதனால் தளர்ச்சியில்லாமல் இன்னும் தேடுதல் காரியத்தை தொடங்குவேன்.

அநுமன் இலங்கையில் இராவணன் அரண்மனை முழுதும் தேடியும் சீதை கிடைக்காமல் மிகவும் தளர்ச்சியடைந்து, தான் வந்த காரியம் முடியவில்லையே என்று பலவிதமாக யோசனை செய்துகொண்டு தன்னையே அலசிக்கொண்டிருந்தபோது தனக்குத்தானே பேசிக்கொண்ட நீண்ட ஆலோசனையில் இது ஒரு பாகம். இதற்குப் பிறகுதான் அசோகவனத்திற்குச் சென்று தேடத் தொடங்குகிறார்.

  • 3.

ஆரண்ய காண்டம்

தொகு

மூன்றாவது காண்டமான ஆரணிய காண்டத்திலிருந்து சில பொன்மொழிகள்:

  • 1. அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா ஸீதே ஸலக்ஷ்மணாம் / ந து ப்ரதிஞ்ஞாம் ஸம்சுருத்ய ப்ராஹ்மணேப்யோ விசேஷத;//அத்.10 சு.19
உயிரையே விடுவேன். ஸீதே, உன்னையும் லட்சுமணனையும் கூட விடுவேன். ஆனால் கொடுத்த சொல்லை, அதுவும் முக்கியமாக அந்தணர்களிடம் கொடுத்த சொல்லை, ஒருநாளும் விடேன்.

இது இராமன் சீதையினிடம் சொல்வது. காட்டில் எப்பொழுதும் வில்லுடன் காணப்படும் இராமனையும் அவர் ராட்சதர்களை அழிப்பேன் என்று முனிவர்களுக்கு கோபாவேசத்துடன் கொடுத்த சொல்லையும் சுட்டிக்காட்டி,நமக்கு விரோதம் காட்டாத ராட்சதர்களுடன் இவ்வளவு கோபம் ஏன் என்று சீதை வினவுகிறாள். அதற்கு இராமன் சொல்லும் பதிலில் இந்த சுலோகம் அடங்குகிறது.

  • 2. பாவஞ்ஞேன க்ருதஞ்ஞேன தர்மஞ்ஞேன ச லக்ஷ்மண / த்வயா புத்ரேண தர்மாத்மா ந ஸம்வ்ருத்த: பிதா மம //அத்.15. சு. 29
என் தந்தையார் என்னை விட்டுவிடவில்லை, லட்சுமணா. போக்கறிந்து, கடமையறிந்து, அறமறிந்து, செயல்படும் உன்னிடம் மகனாக என்னை விட்டுச் சென்றிருக்கிறார்!

இது ஒரு அபூர்வமான வாக்கியம். லட்சுமணன் பர்ணசாலையைக் கட்டி முடித்தவுடன், இராமன் அவனை அன்புடன் தழுவிக்கொண்டு சொல்லும் வாக்கியம். தம்பியையே தந்தையாக ஒப்பமிடும் காவியப்பண்பு.

  • 3. ஏகஸ்ய நாபராதேன லோகான் ஹந்தும் த்வமர்ஹஸி //அத்.65.சு.6
ஒருவருடைய குற்றத்திற்காக உலகை அழிப்பது உனக்குத் தகாது.

சீதையை இராவணன் அபகரித்துச்சென்றதும், இராமனும் லட்சுமணனும் அவளைத் தேடிக்கொண்டு வனமெங்கும் திரிகின்றனர். ஒரு கட்டத்தில் கோபாவேசத்துடன் இராமன் இவ்வுலகையே அழிக்கக்கூடிய அஸ்திரங்களை ஏவ ஆயத்தமகிறார். இந்த ஒரு முறை இராமன் கோபத்துடனும் லட்சுமணன் அமைதியாகவும் பேசுகின்றனர். நிலவிடமிருந்து எப்படி அதன் குளுமையைப் பிரிக்க முடியதோ, எப்படி காற்றினிடமிருந்து அசைவைப் பிரிக்க முடியாதோ, அப்படி உம்மிடமிருந்து மிருதுத் தன்மையைப் பிரிக்கமுடியாமல் இருந்ததே? இப்பொழுது எப்படி அதைப் பிரிந்து இவ்வளவு கோபமாகப் பேசுகிறீர்? ஒருவருடைய குற்றத்திற்காக உலகை அழிப்பது உம்முடைய இயற்கைக்கு ஒவ்வாதே -- என்று லட்சுமணன் அவரை சமாதானப்படுத்துகிறான்.

  • 4. ஸுலபா: புருஷா ராஜன் ஸததம் ப்ரியவாதின: / அப்ரியஸ்ய து பத்யஸ்ய வக்தா சுரோதா ச துர்லப: // அத்.37. சு. 2.
அரசே, எப்பொழுதும் பிரியமானதையே பேசுவதற்கு அனேகம் நபர்கள் இருக்கின்றனர். ஆனால் பிரியமில்லாததும் நல்லதுமான எதையும் பேசுபவனும் அரிது; அதைக்கேட்பவன் இன்னும் அரிது.

இந்த இடம் இராமாயணத்தில் ஓர் அருமையான் இடம். இராவணன் மாரீசனிடம் வந்து சீதையை அபகரிப்பதற்கு உதவி செய்யச் சொல்கிறான். மாரீசன் அதற்கு இணங்காமல் இராவணனுக்கு நல்லுரைகள் சொல்லி அவனைத் திருத்தி திருப்பியனுப்ப முயன்று தோல்வியுறுகிறான். இச்சமயம் மாரீசன் சொல்லும் புத்திமதிகளுக்கு அவன் வாயாலேயே இது முன்னுரையாக அமைகிறது.

  • 5.

கிஷ்கிந்தா காண்டம்

தொகு

நான்காவது காண்டமான கிஷ்கிந்தா காண்டத்தில் இருந்து சில பொன்மொழிகள்:

  • 1. நாஹம் ஜானாமி கேயூரே நாஹம் ஜானாமி குண்டலே / நூபுரே த்வபிஜானாமி நித்யம் பாதாபிவந்தனாத் // (அத்.6, சுலோகம் 22)
கை வளையங்களை நான் அறியவில்லை; காது குண்டலங்களை நான் அறியவில்லை. அன்றாடம் பாதங்களை வணங்குவதால் கால் கொலுசுகளை (அன்னையாருடையதாக) அறிவேன்.

இது லட்சுமணன் சொன்ன பேச்சு. பறந்து செல்லும் புஷ்பகவிமானத்திலிருந்து கீழே தூக்கி எறியப்பட்ட சீதையின் ஆபரணங்களை மூட்டை கட்டி வைத்திருந்த வானரர்கள் அதை இராமனிடம் காட்டியபோது, இராமன் லட்சுமணனிடம் கேட்கிறார்: இதெல்லாம் உனக்கு சீதையினுடையதாக அடையாளம் தெரிகிறதா, என்று. அதற்கு லட்சுமணன் கொடுத்த பதில் இது!

  • 2. ந கச்சின் ந அபராத்யதி (அத்.36. சு. 11)
தவறு செய்யாதவரே இல்லை.

மழைக்காலம் முடிந்தும் சுக்ரீவன் சீதையைத்தேடுவதற்கு ஒரு ஏற்பாடும் செய்யவில்லையோ என்று சந்தேகப்பட்டு இராமன் லட்சுமணனை போய்ப் பார்த்துவிட்டு வரச் சொல்கிறார். கோபத்துடன் கிஷ்கிந்தா நகரத்தில் வந்துகொண்டிருக்கும் லட்சுமணனை தாரையைச் சந்தித்து அவனை சமாதானப்படுத்துகிறாள். இதற்குள் சுக்ரீவனும் லட்சுமணனிடம் மிகுந்த விநயத்துடன் மன்னிப்புக் கேட்கிறான். அப்பொழுது சுக்ரீவன் சொல்லும் பேச்சு இது. இதே வாக்கியத்தை சீதை சுந்தரகாண்டத்தில் [[அனுமன்|அநுமனி]டம் ஒரு முறை சொல்கிறாள்.


யுத்த காண்டம்

தொகு

ஆறாவது காண்டமான யுத்த காண்டத்திலிருந்து சில பொன்மொழிகள்:

  • 1. ஈதிருசம் வ்யசனம் ப்ராப்தம் ப்ராதரம் ய: பரித்யஜேத் / கோ நாம ஸ பவேத்தஸ்ய யமேஷ ந பரித்யஜேத்// அத்.18. சு.5,6
இப்படிப்பட்ட துக்கத்தையடைந்த அண்ணனை எவன் துறந்து வந்துவிட்டானோ, இவனை எப்படி நம்புவது? இவன் யாரைத்தான் துறக்கமாட்டான்?

இதனில் சிறப்பு என்னவென்றால் இது சுக்ரீவனால் சொல்லப்பட்டது. விபீஷணன் நான்கு நண்பர்களுடன் இராவணனைத் துறந்துவிட்டு கடற்கரையில் வானர சேனைகளுடன் தங்கியிருக்கும் இராமனிடம் அடைக்கலம் வேண்டுகிறான். விபீஷணனை ஏற்றுக்கொள்ளுமுன் இராமன் தன்னுடன் உள்ள முக்கியமானவர்களிடமெல்லாம் அபிப்பிரயம் கேட்கிறார். அப்பொழுது சுக்ரீவன் சொல்லும் அபிப்பிராயம் இது. (இதற்கு இராமனிடம் சரியான சாட்டையடி பதிலும் பெறுகிறான்!)

  • 2. ந ஸர்வே ப்ராதரஸ்தாத பவந்தி பரதோபமா:/ மத்விதா வா பிது: புத்ரா: ஸுஹ்ருதோ வா பவத்விதா: // அத்.18. சு.15-16
அன்பரே, எல்லா உடன்பிறந்தோரும் பரதனுக்கு சமமாக இருக்கமாட்டார்கள்.அப்படியேதான் என்னைப்போல் மகன்களும், உம்மைப்போல் நண்பர்களும் (இருக்கமாட்டார்கள்).

விபீஷணனை ஏற்றுக்கொள்வதற்கு முன் இராமன் இராமன் சுக்ரீவனுக்கும் மற்றவர்களுக்கும் சொல்லும் பதிலில் இது ஒரு சுலோகம்.

  • 3 தேசே தேசே களத்ராணி தேசே தேசே ச பாந்தவா: / தம் து தேசம் ந பச்யாமி யத்ர ப்ராதா சகோதர:// அத்.102 சு12-13
நாடு தோறும் மனைவிகள் கிடைப்பார்கள்; பந்துக்களும் தான். ஆனால் கூடப் பிறந்த தம்பி கிடைக்கும் நாட்டை நான் இன்னும் பார்க்கவில்லை.

இராவணன் யுத்தத்தில் சக்தி ஆயுதத்தை எறிந்து லட்சுமணனை மூர்ச்சிக்க வைக்கிறான். இராமன் லட்சுமணனைப் பிரிந்தோமே என்று புலம்பும் கட்டத்தில் இவ்வாக்கியம் வருகிறது.

"https://ta.wikiquote.org/w/index.php?title=இராமாயணம்&oldid=36949" இலிருந்து மீள்விக்கப்பட்டது