அசோகர்
மௌரிய அரசமரபின் 3வது பேரரசர், புத்த மதத்தின் புரவலர்
அசோகர் மௌரிய வம்சத்தைச் சேர்ந்த அரசர் ஆவார். பிறப்பு கிமு 304. இவருடைய ஆட்சிக்காலம் கிமு 269 முதல் கிமு 232 வரை ஆகும். கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார். புத்த மதத்தை ஆசியா முழுவதும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான புத்த விகாரங்கள் கட்டினார். இந்தியத் துணைக்கண்டத்தை ஆண்டவர்களில் சிறந்த பேரரசராகக் கருதப்படுகிறார்.
இவரது மேற்கோள்
தொகு- இந்த நெல்லிக்கனியில் பாதியைத் தவிர நான் என்னுடையதென்று சொல்லத்தக்க வேறு பொருளே இல்லை. நான் சார்வ பெளமனாக இருந்தும், மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. இந்த இம்மைச் சாம்ராஜ்யத்தையும், நீர்க்குமிழி போன்ற நிலையில்லாப் பிரபுத்துவத்தையும் வெறுத்துத் தள்ளினேன். நான் மக்களை ஆள்கின்றேன். ஆயினும், என்னைத் துக்கம் ஆள்கின்றது. செடியிலிருக்கும் மலர் காம்புடன் கூடியிருக்கும் வரையில் சோபிக்கும். அது நிலத்தில் விழுந்தபிறகு வாடி உலர்ந்து போகும். அப்படியே நானும் காலம் கழித்து வருகின்றேன்.[1]
- எல்லா மனிதரும் எனது மக்கள்; எனது குழந்தைகுட்டிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் எல்லாவித சந்தோஷ சௌபாக்கியங்களும் உண்டாகவேண்டுமென்று நான் ஆசைப்படுவது போலவே எல்லா மனிதருக்கும் அனுக்கிரகங்களைக் விரும்புகிறேன்.[2]
- எவருக்கும் என்னைப்பற்றிக் கொஞ்சமும் அச்சம்வேண்டாம் ; நிச்சயமாய் என்னால் அவர்களுக்கு வியசனம் உண்டாகாது. சந்தோஷம் மட்டுமே உண்டாகும். அரசன் எதையும் கூடுமானவரையில் க்ஷமையுடன் பொறுத்துக்கொள்ளும் சுபாவமுடையவன். (கலிங்க கல்வெட்டில்)[2]
- தேவர் பிரியனான பியதஸி ராஜனால் ஆளப்பட்ட எல்லாப் பாகங்களிலும் ........ அதுமட்டுமன்று ...... அயல் அரசர் நாட்டிலும் எல்லா இடங்களிலும் அரசன் சிகித்ஸைக்காக இருவித ஏற்பாடுகள் செய்திருக்கிறான். அஃதாவது, மனிதருக்கு வைத்தியசாலை, மிருகங்களுக்கு வைத்தியசாலை என்பனவே. மேலும், மனிதருக்கு உபயோகமானதும் மிருகங்களுக்கு உபயோகமானதுமான மருந்து மூலிகைகள் எவையோ, அவை கிடைக்கும் இடங்களிலிருந்து கிடைக்கா இடங்களுக்கு கொண்டுவரப்பட்டுப் பயிராக்கப்படுகின்றன, கனி, காய் கிழங்குகளும் வரவழைக்கப்பட்டுப் பயிர் செய்யப் படுகின்றன........... பாதைகளில் கிணறுகள் வெட்டவும் நிழல் தரும் மரங்கள் வளர்க்கவும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.[2]
- நான் மாந்தோப்புக்களை வளர்க்கப்பண்ணியிருக்கிறேன். அரைக்குரோசத்துக்கு ஒரு தடவை கேணிகள் வெட்டிச் சாவடிகள் கட்டப்பட்டிருக்கின்றன. மிருகங்களுக்கும் மனிதருக்கும் சுகத்தைக் கொடுக்கும் பொருட்டு நான் பல தண்ணீர்ப் பந்தல்களை ஏற்படுத்தியிருக்கிறேன்.[2]
குறிப்புகள்
தொகு- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 9-10. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 ஆர். ராமய்யர் (1925). அசோகனுடைய சாஸனங்கள். நூல் 43-58. ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ். Retrieved on 13 நவம்பர் 2021.